உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும்!

Share this:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ஹீம்.

இஸ்லாம்

 

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பத்தோடு பதினொன்றாக உலகம் பார்க்கவில்லை. எச்சரிக்கையுடனும் வியப்புடனும் தான் பார்க்கின்றது. மேற்குலகம் இஸ்லாத்தினைத் தடம் தெரியாமல் துடைத்தெறிய இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நூற்றாண்டு மட்டுமின்றி, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் அவர்களின் உழைப்பு, கானல் நீராகவே இருக்கும். ஏனென்றால் இஸ்லாத்தின் அடித்தளமும், அடிப்படையும் அவ்வளவு உறுதியானது; உண்மையானது. அது மட்டுமின்றி எல்லாம் வல்ல அல்லாஹ் எப்போதும் முஸ்லிம்களுடன் தான் இருப்பான்.

இஸ்லாம் கூறிய செய்திகள் அவ்வளவு வலுவானவை. இவ்வுலகம் அழியும் வரை அதன் தேவை என்றும் நிலைத்திருக்கும்.

இன்று உலகம் எண்ணற்ற பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல அறிவு ஜீவிகளும், ஆராய்ச்சியாளர்களும் பிரச்சினைகளுக்குத் தங்களால் இயன்ற தீர்வுகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறாகள். ஆனாலும் இன்றுவரை பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகம் அழியும் வரை சந்திக்க இருக்கும் பிரச்சனைகளுக்குச் சரியான, முறையான தீர்வுகளை இஸ்லாம் கூறிவிட்டது. பயங்கரவாதம், வன்முறை, இனவாதம், மொழிவாதம், அடக்குமுறை, தொழிலாளர் பிரச்சனை, பெண்ணடிமை, எயிட்ஸ்,வறுமை எனஇன்றைக்கு உலகம் தீர்வைத் தேடியலையும்பல பிரச்சனைகளுக்கு இஸ்லாம் உறுதியான, முழுமையான தீர்வு சொல்கிறது. அதில் சிலவற்றைச் சற்று விரிவாகக் காண்போம்.

பயங்கரவாதம்

 

உலகமே இன்று அச்சத்தோடு உச்சரிக்கும் ஒரு பிரச்சினை. பொருளும் இலக்கணமும் தெரியாமல் உலக மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு பிரச்சனை பயங்கரவாதமாகும். மேற்கத்திய மற்றும் ஆதிக்க நாடுகள் அரசியல் நடத்தப் பயன்படும் பிரச்சனை; பல லட்சம் மக்களைக் கொன்றொழித்துக்கொண்டிருக்கும் பிரச்சனை. பல இயக்கங்களும் நாடுகளும் இதற்குத் தீர்வு காண, தூக்கமின்றித் தவித்துக்கொண்டிருக்கின்றன. “பயங்கரவாத்திற்குக் காரணம் முஸ்லிம்கள்தாம்என ஆதிக்க நாடுகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் இப்பிரச்சனைக்கு ஒரு முழுமையான தீர்வினைக் கூறுவது இஸ்லாம் தான். உலகில் பயங்கரவாதம் பரவ மூலக்காரணம் ஆட்சியாளர்களின் அடக்குமுறை. அடக்குமுறை ஆட்சிக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை.

நியாயமான காரணமின்றிக் கொலை செய்வதை அல்லாஹ் தடுத்திருப்பதால் நீங்கள் எந்த மனிதரையும் (அநியாயமாகக்) கொலை செய்யக் கூடாது. அநியாயமாகக் கொல்லப் பட்ட வாரிசுக்கு நாம் (பழிதீர்க்கவோ மன்னிக்கவோ) அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், பழிதீர்ப்பதில் வரம்புமீறலாகாது. திண்ணமாக அநியாயமாகக் கொலையுண்டவரின் வாரிசு, (அதிகாரம் வழங்கி) உதவி செய்யப் பட்டவராவார் (அல்குர்ஆன் 17:33).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு குடும்பத் தலைவன், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு மனைவி, தன் கணவனின் உடைமைகளுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள்; அப்பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு பணியாளன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (புகாரி – பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7138.)

இனவாதம்

 

வளர்ந்த நாடுகளுக்கும் வறுமை நாடுகளுக்கும் சவால் விடும் இனவாதப் பிரச்சனைக்கும் இஸ்லாமே நல்லதொரு தீர்வினைச் சொல்கிறது. மொழி, இனம், நிறம், ஜாதி ஆகிய அடிப்படையில் உலகம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கர்களாகட்டும், ஆப்பிரிக்கர்களாகட்டும் ஏழைகளாகட்டும் பணக்காரர்களாகட்டும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் வெள்ளையர்களாகட்டும் கருப்பர்களாகட்டும் அனைவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து படைக்கப்பட்டவர்கள்தாம் என்று இஸ்லாம் உரத்துச் சொல்கிறது. யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களுமல்லர்; தாழ்ந்தவர்களுமல்லர். அனைவரும் சகோதரர்களே. இது பற்றி,

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் மிகவும் பயபக்தியுடையவராக இருப்பவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் (அல்குர்ஆன் 49:13).

பெண்ணடிமைத்தனம்

 

இஸ்லாத்தின் மீது மிக அதிகமாகக் கூறப்படும் குற்றசாட்டுகளில் ஒன்று, “இஸ்லாம் பெணகளுக்கு சுதந்திரம் வழங்கவில்லை; பெண்களை அடிமைப்படுத்துகிறது;. பெண்களுக்குக் கல்வி வழங்க மறுக்கிறது…” இவ்வாறாகப் பல குற்றச்சாட்டுகளை நவீன நாகரிகம் என்ற போலிப் போர்வையைப் போர்த்துக் கொண்டு நடமாடுபவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளையும் சிறப்புகளையும் போன்று வேறு எந்த மதமோ, தத்துவமோ வழங்கிடவில்லை. தூய இஸ்லாத்தினை முதலில் ஏற்றுக்கொண்ட பெருமை அன்னை கதீஜா (லி) என்ற ஒரு பெண்மணிக்கே சொந்தம். மறுமையில் நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்திற்கு உரிமையான ஷஹீது என்ற அந்தஸ்த்தை அடைந்த பெருமையும் சுமைய்யா (லி) என்ற ஒரு பெண்மணிக்கே சொந்தம். முஸ்லிம்கள் குர்ஆனுக்கு அடுத்தபடியாகத் தங்களுடைய வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் நபிமொழிகளை அதிகம் அறிவித்த பெருமையும் அன்னை ஆயிஷா (லி) என்ற ஒரு பெண்மணிக்கே சொந்தம்.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் (அல்குர்ஆன் 4:124).

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் செய்த நற்செயலையும் நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தாம். எனவே தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள், எனது பாதையில் பயணித்துத் துன்பத்துக்குள்ளானவர்கள், போரில் ஈடுபட்டவர்கள், (போரில்) கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன். இன்னும் அவர்களை, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்ற சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்). இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் வெகுமதியாகும். அல்லாஹ்விடம் உள்ளவை அழகிய வெகுமதிகளாகும் (அல்குர்ஆன் 3:195).

உங்களுள் சிலரைவிட வேறு சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் வீணாகப் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தது அவர்களுக்குரியது (போன்றே) பெண்கள் சம்பாதித்தது பெண்களுக்குரியது. அல்லாஹ்விடம் அவனுடைய அருளை வேண்டுங்கள். எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான் (அல்குர்ஆன் 4:32).

எயிட்ஸ்

 

கலாச்சாரச் சீரழிவின் வெளிப்பாடு எயிட்ஸ்என்றால் மிகையாகாது. வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை இக்கொடிய நோயினை ஒழிக்கப் பல ஆயிரம் கோடிகளை வாரி இரைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நாளுக்கு நாள் இதில் சிக்குண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஏனென்றால் ஆட்சியாளர்களிடம் ஒரு தெளிவான கொள்கையோ, திட்டமோ இல்லை. ஒரு பக்கம் இந்த நோயினை ஒழிக்கிறோம் என்று கூறிவிட்டு மறுபக்கம் இந்த நோய் உருவாவதற்கான அனைத்து வழிகளையும் திறந்து விட்டு விடுகின்றனர். ஆனால் அனைத்திற்கும் உன்னதத் தீர்வினைக் கூறும் இஸ்லாமே இதற்கும் ஒரு தெளிவான, உறுதியானத் தீர்வினைக் கூறுகிறது. எயிட்ஸின் அடித்தளத்தையே சிதறடிக்கும் இதுபோன்ற அறிவுரையை எங்கும் காண முடியாது:

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் அது இருக்கின்றது. (அல்குர்ஆன் 17:32)

வறுமை

ஒரு மணித்துளிக்குப் பல லட்சம் பேர் வறுமையினால் செத்துமடிவதாகப் பல ஆய்வறிக்கைகள் தெளிவாகக் கூறுகின்றன. அரசுகள் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கினால் வறுமை ஒழிந்துவிடும் என நினைக்கின்றன. அதற்காக மக்களிடமிருந்தே வரி, கட்டணம், அபராதம் எனப் பல வகைகளின் பிடுங்கி, நடுத்தர வர்க்கத்தினை வாட்டி வதைக்கின்றன. மக்களை ஏமாற்ற வசதியாகச் சில வழிகளையும் திறந்து விட்டுவிடுகின்றன. வரி விதிப்பவர்களும் வசூலிப்பவர்களும்தாம் பெரும் செல்வந்தர்களானார்களே ஒழிய வறுமை ஒழிந்தபாடில்லை. காரணம் வரி விகிதங்களும் முறைகளும் வசதிவாய்ப்புகளின், செல்வந்தர்களைக் கணக்கில் கொண்டே உருவாக்கப்படுகின்றன.

ஆனால் இஸ்லாமோ வரியினை யாரிடம் வசூலிக்க வேண்டும், எவ்வளவு வசூலிக்க வேண்டும், எப்பொழுது வசூலிக்க வேண்டும், அதனை எவ்வாறு பயன் படுத்தவேண்டும், அதனை வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அழகிய வரைமுறைகளை வழங்குகின்றது. வறுமையினை ஒழிக்க எத்தனையோ வரிகளையும் திட்டங்களையும் போடும் அரசுகள்ஜக்காத்என்ற உன்னதத் திட்டம் ஒன்றினை மட்டும் அறிமுகம் செய்தாலே போதும். வறுமை, பசி, பட்டினி, ஏழ்மை முதலிய சமுதாயப் பிரச்சனைகள் தடம் தெரியாமல் துடைத்தெறியப்படும் என்பது திண்ணம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்:


யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு, தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, நானே உன்னுடைய செல்வம், நானே உன்னுடைய செல்வம், நானே உன்னுடைய புதையல் என்று கூறும்
.”

இதையடுத்து,

 

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாகப் போடப்படும்.”

 

என்ற (அல்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள் (புகாரி பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1403), அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி).

வட்டி,கடன்

 

வளரும் நாடுகள் தங்கள் நாட்டின் மக்களது அத்தியாவசியத்

தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்க விடும் பிரச்சனையில் முதன்மை இடத்தைப் பிடிப்பது வட்டியாகத்தான் இருக்க முடியும். பெரும்பாலான வளரும் நாடுகள் தங்களின் வருமானத்தில் பெரும் பகுதியை வட்டியாகச் செலுத்துகின்றன என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மை. வட்டியின் கோரப்பிடியினால் மீள முடியா பாதாளத்திற்குச் சென்றுக்கொண்டிருக்கும் நாடுகள் ஏராளம். வட்டியின் கொடுமை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதையும் நாம் காண்கிறோம். வட்டியின் கோரப்பசிக்கு இரையானோர் ஏராளம். வட்டியின் பரிணாமம் கந்து வட்டி, மீட்டர் வட்டி, எக்ஸ்பிரஸ் வட்டி என்று நீண்டு கொண்டே செல்கிறது. வட்டியின் கொடுமையிலிருந்து மக்களைக் காக்கிறோம் என்று கூறிக்கொண்டு அரசுகளே பல போர்வைகளில் வட்டி நிறுவனங்களை நடத்துகின்றன. வட்டி விஷயத்திலும் மனிதன் வகுத்த சட்டம் வெற்றிபெறவில்லை. வட்டிப் பிரச்சினையில் வெற்றி பெறக்கூடிய அழகிய வழிமுறையை இஸ்லாம் கூறுகிறது:

வட்டி (வாங்கித்) தின்பவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போல் எழுவார்கள். இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வட்டி, வியாபாரத்தைப் போன்றதுதான்என்று கூறி, அதில் திளைத்ததேயாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் வட்டியை விட்டும் விலகிவிடுபவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானதுஎன்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் (நற்போதனை பெற்ற பின்னரும் வட்டிப் பாவத்தின் பால்) மீண்டும் திரும்புகிறவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் (அல்குர்ஆன் 2:275).

(மற்ற) மனிதர்களுடைய செல்வத்தோடு சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்வி(ன் கண்ணோட்)டத்தில் பெருகுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக நீங்கள் கொடுப்பவை (அல்லாஹ்விடத்தில்) பெருகும். அவ்வாறு கொடுப்போர்தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள் (அல்குர்ஆன் 30:39).

முதியோர் இல்லம்

 

நவீன கலாச்சாரத்தின் மற்றுமொரு சீர்கேடு முதியோர் இல்லங்கள். இது உலகையே கவலைக்குள்ளாக்கும் பிரச்சனை. அறிவியல் உலகம் அற்புதமாக இருக்கிறது என்று பெருமைப்படும் நாம், முதியோர் இல்லங்கள் பெருகுவதைக் கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும். பெற்றெடுத்து வளர்த்த தாய்தந்தையைப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பினைப் பொருட்படுத்தாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் கொடியவர்களைக் கண்டிக்க, தண்டிக்க அரசுகளிடம் தெளிவான சட்டம் இயற்றுவதில் நவீன உலகம் தோற்றுவிட்டது.

இதிலும் இஸ்லாமே வெல்கிறது!

அவனையன்றி (வேறு எவரையும்) வணங்கலாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ இருவருமோ முதுமையடைந்து உம்மிடத்தில் இருக்கும்போது அவர்களை, “சீஎன்று (சடைந்தும்) சொல்லிவிடக் கூடாது. அவ்விருவரையும் விரட்டிவிடக் கூடாது. இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேச வேண்டும் (அல்குர்ஆன் 17:23).

மஹர் Vs வரதட்சணை

 

உலகில் இந்திய சமூகத்தைச் சார்ந்த பெண் சமுதாயம் சந்திக்கும் பெரிய பிரச்சனை அனேகமாக வரதட்சணையாகத்தான் இருக்கும். ஏனெனில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. பெண்களை ஒரு வியாபாரப் பொருளாக மாற்றிய பெருமை அனைத்தும் வரதட்சணையையே சாரும். உருவாகும் கரு பெண் என்று தெரிந்தால் கருவிலேயே அழித்து விடும் அவல நிலைக்கும் இதுவே காரணம். “எரிவாயு வெடித்து இளம் பெண் மரணம்என்று தினம் தினம் செய்திகள் வருவதன் பின்னணியில் வரதட்சணை இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். பல பெண்கள் தம் முதிர் கன்னி வயது கடந்தும் திருமணம் செய்துகொள்ள இயலாமல் தம் இளமையைத் தொலைப்பதற்குக் காரணம் வரதட்சணைதான். பெண் என்றாலே ஒரு சுமைப்பொருளாகச் சமுதாயம் பார்க்கும் அவலநிலையை உருவாக்கியதில் வரதட்சணைக்கு முக்கியப் பங்குள்ளது. பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த காரணத்திற்காக, உழைக்காமல் உண்ணும் வட்டிக்காரர்களை நோக்கிப் பெற்றோர்களை ஓட வைத்த பெருமையிலும் வரதட்சணைக்குப் பங்குள்ளது. அரசுகள் பல சட்டங்கள் இயற்றிவிட்டன. ஆனாலும் வரதட்சணை என்ற கொடிய நச்சினைத் துடைத்தெறிய முடியவில்லை. ஆனால் இதிலும் இஸ்லாம் ஒரு தெளிவான, உறுதியானத் தீர்வைக் கூறுகிறது:

நீங்கள் (மணம் செய்து கொள்ளும்) பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடையை மனமுவந்து கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து மனமொப்பி அவர்களாக உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் நீங்கள் உண்ணலாம் (அல்குர்ஆன் 4:4).

அவர்களுடைய உரிமையான (மணக்கொடைத்)தொகையைக் கடமையாகக் கொடுத்து விடுங்கள். எனினும் மணக்கொடையைப் பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாவான் (அல்குர்ஆன் 4:24).

இது போன்று ஒரு தீர்வினை வேறு எங்குமே காண முடியாது.

மது

நவீன நாகரிகத்தின் போலி அடையாளங்களில் ஒன்று மது அருந்துவதாகும். அனேக இளைய சமுதாயத்தைத் தன் கோரப்பிடிக்குள் வைத்து, சீரலிவுகளை மட்டுமே வாரிவழங்கும் மதுவினை ஒழிக்க அரசுகள் பல வழிகளில் முயல்கின்றன, ஆனால் பயனில்லை. ஏனெனில், ஒரு பக்கம் மதுவினை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே மறுபக்கம் மது விற்பனையை அரசே படு ஜோராக நடத்துகிறது. “மது விற்பனையில் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு அதிகமாக விற்று அதிக வருமானத்தினை ஈட்டிருக்கிறோம்எனக் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அரசுகள் பெருமையடிக்கின்றன. பல குடும்பங்களைச் சீரலிக்கும் மதுவினை அதிகமாக விற்பதைப் பெருமையாக நினைக்கும் அரசுகள் எப்படி மதுவினை ஒழிக்க முடியும்?. மதுவினை அருந்துவது ஒருவித கெளரவம், நாகரிகம் என நினைப்பவர்களும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: ”அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் மிகச்சில) பலன்களுமுள்ளன. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் (அவ்வற்பப்) பலன்களைவிட மிகப் பெரிது…” (அல்குர்ஆன் 2:219).

என்று இறைமறை கூறுகிறது.

உலகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தெள்ளத் தெளிவான தீர்வுகளைத் தன்னகத்தே கொண்ட இறைமறை, “என்னிடம் உள்ள தீர்வைவிடச் சிறந்த தீர்வை வேறு எவராவது சொல்ல முடியுமா?” என்று அறைகூவல் விட்டவண்ணமே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும், (முஹம்மது என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள் (அல்குர்ஆன் 2:23).

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன் 10:38).

ஆக்கம்: சகோதரர் ம். பைஜூர் ஹாதி, துபை, அமீரகம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.