போலி ஸம் ஸம் தண்ணீர்!

Share this:

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்!

ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஊர் திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவர முடிவதில்லை.

எனவே, இவர்களில் பெரும்பாலானவர்கள், ‘உங்களது வீட்டுக்கே நேரடியாக ஜம்ஜம் தண்ணீரை அனுப்பி வைக்கிறோம்’ என தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்து சொல்லும் சிலரிடம் பணம் கட்டி ஜம்ஜம் தண்ணீர் ஊரில் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்கின்றனர் . இதன் விலை 20 லிட்டருக்கு ஏறக்குறைய ரூ1800.

ஆனால், எனக்குக் கிடைத்த ஒரு இமெயிலில், “ஜம்ஜம் தண்ணீர் என்ற பெயரில் சௌதி அரேபியா அல்லாத நாடுகளில் வியாபாரம் செய்வது உண்மையான ஜம்ஜம் தண்ணீர் அல்ல” என்று சௌதி அரசால் வெளியிடப்பட்ட ஒரு தகவல் படித்தேன். இது நிஜமா? – (சிங்கையிலிருந்து சகோதரர் அப்துர் ரஹீம்).

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்….

“கேள்விப் படுவதையெல்லாம் தீர விசாரித்தறியாமல் ஏற்று கொள்தல் ஒரு முஸ்லிமுக்கு அழகன்று” என்பதை உணர்ந்து தான் கேள்விபட்ட விஷயத்தைக் குறித்து உண்மை நிலையினை அறிந்து கொள்ள முயற்சி எடுத்தச் சகோதரர் அப்துல் ரஹீம் அவர்களுக்கு அல்லாஹ் மேலும் மேலும் இதயத்தை விசாலமாக்கி வைத்தருள்வானாக.

ஸம் ஸம் நீரை அல்லாஹ் புனிதப்படுத்தியிருக்கிறான். ஸம் ஸம் நீர் தோன்றியதே ஒரு அதிசயத்தக்க வரலாறு. இன்றைய நவீன உலகில் தேவைப்படும் தண்ணீரை எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் குழாய் வழியாகக் கொண்டு செல்ல முடியும். ஆனால் அன்றைய காலத்தில் இது சாத்தியமில்லை. இஸ்லாமிய வரலாற்றுப்படி, ஸம் ஸம் நீரூற்று வெளிப்பட்டது முதல் பல திசைகளிலிருந்தும் ஹஜ்ஜுக்காகவும் வணிக நிமித்தமும் மக்காவுக்கு வரும் அனைவருக்கும் இந்த ஸம் ஸம் நீர் தாகம் தீர்க்கும் அருமருந்தாகவும், உணவாகவும் பயன்பட்டு வந்தது, இன்றும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ், பல லட்சம் மக்கள் ஹஜ் கிரியைகளை மேற்கொள்ளும் இன்றைய காலத்திலும் ஸம் ஸம் நீர் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கிறது. நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் துணைவியார் ஹாஜரா(அலை) மற்றும் அவரது மைந்தர் இஸ்மாயீல்(அலை) அவர்களின் காரணமாக இறைவன் தோன்றச் செய்த இந்த ஸம் ஸம் நீரூற்று, இன்றும் வற்றாத ஊற்றாக பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. கஅபாவை நோக்கிப் பயணிப்பவர்களுக்கு ஸம் ஸம் நீர் ஓர் அருட்கொடையாகும்.

ஸம் ஸம் நீரின் மகத்துவம் பற்றி இஸ்லாம்.

“ஸம் ஸம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அஹ்மத், இப்னுமாஜா)

அபூதர் அல்ஃகிஃபார்(ரலி) அவர்கள் அறிவித்து முஸ்லிம் நூலில் இடம் பெற்ற நீண்ட ஒரு ஹதீஸின் சுருக்கம் வருமாறு…

…பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி ”எத்தனை நாட்களாக இங்கிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ”இரவு பகலென முப்பது நாட்களாக இங்கிருந்து கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன்.

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ”(இத்தனை நாட்களாக) உமக்கு உணவளித்து வந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”ஸம் ஸம் தண்ணீரைத் தவிர வேறு எந்த உணவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் என் வயிற்றின் மடிப்புகள் அகலும் அளவுக்கு நான் பருமனாகி விட்டேன். என் ஈரலில் பசிக்கொடுமை தெரியவில்லை” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ”அது (ஸம் ஸம்) வளமிக்கதாகும். அது (ஒரு வகையில்) வயிற்றை நிரப்பும் உணவாகும்” என்று சொன்னார்கள். (முஸ்லிம், 4878)

ஸம் ஸம் நீரைத் தாகத்திற்காக அருந்தினால் தாகம் தீரும், பசிக்காக அருந்தினால் பசியும் அடங்கும் என அபூதர் (ரலி) அவர்களின் அனுபவப்பூர்வமான நிகழ்வு உணர்த்துகிறது. ஸம் ஸம் நீர் ”பரக்கத்தானது” வயிற்றுக்கு உணவு போன்றது எனவும் நபி(ஸல்) அவர்கள் உரைத்திருக்கிறார்கள். இதிலிருந்து மற்ற நீரைவிட ஸம் ஸம் தண்ணீர் மாறுப்பட்ட தன்மை கொண்டது என விளங்க முடிகிறது.

 

ஸம் ஸம் நீரை மற்றோரிடம் எடுத்து செல்லல்

ஆயிஷா(ரலி) ஸம் ஸம் நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்வது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இதை உர்வா அறிவிக்கிறார். (திர்மிதீ, 886. இது ஹஸன் கரீப் எனும் தரத்திலமைந்ததாகும் என திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார்) 

 

மக்கா சென்று திரும்புபவர்கள் ஸம் ஸம் நீரைக் கையோடு எடுத்துச் செல்வதில் யாதொரு தடையும் இல்லை. எனினும், தவாஃப், உம்ரா, ஹஜ் போன்ற கிரியைகளை நிறைவேற்றும் போது ஸம் ஸம் நீரருந்துவதும், ஹஜ் முடிந்து ஊர் திரும்பும்போது கையோடு ஸம் ஸம் நீரைக் கொண்டு செல்வதும் உம்ரா / ஹஜ்ஜுக் கடமைகளுள் ஒன்றன்று. இதை நினைவில் கொள்ள வேண்டும்.

எந்த ஓர் இபாதத்தையும் இயன்றவரை செய்யுங்கள் என்றே இஸ்லாம் இலகுவாக்கி இருக்கிறது. இபாதத் விஷயத்தில் இயன்றதுதான் நிலைபாடு என்றால் இபாதத்து அல்லாத விஷயத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பது தெளிவு. ஆனால் இபாதத் இல்லாத செயல்களையும் இபாதத்தாகக் கருதி, வலியச் சென்று திணிப்போமேயானால் அது வரம்பு மீறுதல் ஆகும். அதாவது கண்மூடித்தனமாக ஒன்றை நம்புவது, அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி பிறர் நம்மை மோசடி செய்வதற்கு வழி ஏற்படுத்திவிடும். இது ஒரு வகையில் மோசடிக்குத் துணை போவதாகும்.

இன்று இஸ்லாத்திற்கெதிரான அனாச்சாரங்கள் அனைத்தும் இபாதத் என்ற பெயரிலேயே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அனாச்சாரங்களையும் இபாதத் எனச் சொல்லி ஒரு கூட்டம் ஏமாற்றி மக்களிடமிருந்து பொருளாதாரத்தை மோசடி செய்கிறது. மக்களும் இபாதத் என்ற பெயரில் அவர்களிடம் ஈமானையும் பொருளாதாரத்தையும் சேர்ந்தே இழந்து விடுகிறார்கள்.

சில ஊர்களிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள், சென்று திரும்பும் பொழுது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட முகவையில் ஸம் ஸம் நீரை ஊருக்குக் கொண்டு வருகிறார்கள். 200 லிட்டருக்கும் அதிகமாகக் கொள்ளும் ஒரு தேக்ஸாவில் அந்த 20 லிட்டர் ஸம் ஸம் நீரை ஊற்றி, அதோடு 200 லிட்டர் குடி நீரைக் கலந்து ஒவ்வொரு டம்ளர் எனக் குடிப்பதற்கு ஊர் மக்களுக்கு பரிமாறுகிறார்கள். அதாவது ஸம் ஸம் நீரோடு சாதாரண நீரையும் கலப்படம் செய்து ஏதோ நேர்ச்சையைப் போலப் பங்கிடப்படுகிறது. இவ்வாறு ஸம் ஸம் நீரைக் குடித்தே ஆகவேண்டும் என இஸ்லாம் எங்கும் கட்டளையிடவில்லை.

மேலும், இதுபோன்ற தவறான முன்னுதாரணங்கள் நாளடைவில் மூடநம்பிக்கையாக வளர்ந்து, ஸம் ஸம் நீரின் மீது அளவுக்கு மீறிய பக்தியை ஏற்படுத்தி விடுகிறது. பிறகு இஸ்லாத்தில் இல்லாத இபாதத் வியாபாரமாகி, கலப்பட மோசடியும், மோசடிக்குத் துணை போவதாகவும் பரிணாமம் அடைகிறது.

விளைவு

மக்காவிலிருந்து வந்த சுத்தமான ஸம் ஸம் நீரில் குழாய் தண்ணீரையும் கலந்து, அதனுடன் உப்பும் சேர்க்கப்பட்டு இது சுத்தமான ஸம் ஸம் தண்ணீர் என ஒரு பாக்கெட் தண்ணீர் மூன்று பவுண்டுக்கு லண்டனில் விற்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கலப்படம் செய்த தண்ணீரை வாரத்துக்கு 20,000 லிட்டர் வீதம் விற்றுக் கோடிக் கணக்காக சம்பாதித்திருக்கிறார்கள் மோசடிப் பேர்வழிகள் என்பது செய்தி.

ஸம் ஸம் தண்ணீரின் மீதான முஸ்லிம்களின் அளவு மீறிய நம்பிக்கை எவ்வளவு பெரிய ஏமாற்று மோசடிக்குத் துணை போயிருக்கிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.

”நீங்கள் எங்களிடம் பணத்தை செலுத்துங்கள். ஸம் ஸம் தண்ணீரை உங்கள் ஊரில் டோர் டெலிவரி செய்கிறோம்” என்று எவர் சொன்னாலும் அதை அப்படியே நம்பி அவர்களிடம் பணத்தைச் செலுத்துவதைப் புறக்கணிக்க வேண்டும். இச்செயல்பாடுகள் நல்லவனையும் மோசடிக்காரனாக மாற்றிவிடும். எனவே இது ஸம் ஸம் தண்ணீர் என நேரடியாக நமக்கு உறுதியாகத் தெரியாத நிலையில் அதை எங்கு, எவர் விற்றாலும் வாங்காமல் தவிர்த்துக்கொண்டால் மோசடிகள் குறைந்து பின்னர் இல்லாமல் போய்விடும்.

உறுதியாகத் தெரியாத, இருபது லிட்டர் தண்ணீருக்கு 1800 ரூபாய் செலவழிப்பதை விட, உணவுக்கு வழி இல்லாத ஏழைகளுக்கு 1800 ரூபாயை தருமம் செய்வதில், அது ஒரு பேரீச்சம் பழமாக இருந்தாலும் அதனை தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாவல் தேடிக் கொள்வதில் உறுதியான நன்மைகள் மிக மிக அதிகம் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.