சிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்

Share this:

முஸ்லிம் சமுதாயம் சர்வதேச அளவில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படுவதை எதிர்த்து அவர்களால் உரிமைக்குரல் கொடுக்க இயலாமல் போவதற்கும், அரசியல் விளையாட்டில் பகடைக்காயாய் ஆங்காங்கே உருண்டு கொண்டிருப்பதற்கும் அவர்களிடையே நிலவும் “அறியாமை” ஒரு மிகப் பெரும் காரணியாகத் திகழ்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

 

விழித்துக் கொண்ட ஒரு சிலர், சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அறியாமை எனும் இருளைப் போக்கிடும் ‘அறிவொளி’ யைப் பாய்ச்சி ஆங்காங்கே வெளிச்சம் கொணர முயற்சித்தும் பெருமளவில் சமுதாயத்திற்குப் பலன் கிடைக்காததற்குக் காரணம்,  சிகிச்சை முறைகள் பற்றிய போதிய அறிவு இல்லாததும், அப்படியே கல்விக்கான வாய்ப்பு முஸ்லிம்களுக்குக் கிடைத்தாலும் அதனைப் புறந்தள்ளும் அலட்சிய மனோபாவமும் தான் என்பது வருந்தத்தக்கதொரு உண்மையாகும்.

 

அத்தகையதோர் விழிப்புணர்வை சிறுபான்மைச் சமுதாயத்தினரும் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அரியதோர் திட்டம் ஒன்று திரு. சைதை துரைசாமி அவர்களால் சென்னையில் மனிதநேய அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐ.ஏ.எஸ்.(Indian Administrative Service), ஐ.எஃப்.எஸ்.(Indian Foreign Service) மற்றும் ஐ.பி.எஸ் (Indian Police Service)போன்ற உயர்கல்விகளுக்கான தேர்வுகளில் வெற்றிபெற மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக அளிக்க இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இம் மையத்தின் அறக்காவலரான திரு. சைதை துரைசாமி அவர்கள் தொடங்கி உள்ள இந்த மையத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுத இலவச பயிற்சி, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள், இலவச பாடநூல்கள், இலவசமாக தங்குமிடம், தரமான உணவு வகைகள், தனித்தனியாக பத்திரிகைகள் ஆகியவை வழங்கப்பட்டு திறமை மிகுந்த பயிற்றுனர்களால் பாடம் கற்பிக்கப்படுகிறது.

 

இந்தப் பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ். தேர்வின் மாதிரி வடிவ பயிற்சிகள் வாரம்தோறும் நடத்தப்படுகின்றன. கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.ஏ.எஸ். பிரதானத் தேர்வின் முடிவு நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த இலவச பயிற்சி மையத்தில் படித்த 17 மாணவ-மாணவிகளில் ஒரு மாணவி உள்பட 8 பேர் தேர்வுபெற்று நேர்முகத்தேர்வுக்குச் செல்ல உள்ளனர். சென்னை, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒரு மாணவரும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 2 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் புவியியல், வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல், வணிகவியல் ஆகியவற்றை முதல் விருப்பப் பாடமாக எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான தரமான பயிற்சியும், அவர்கள் டெல்லி சென்று தேர்வை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்றும், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இந்த மையத்தை நேரில் அணுகலாம் என்றும் சைதை துரைசாமி கூறியுள்ளார். தற்போது இந்த மையத்தில், 2008-ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு எழுத 100 மாணவர்கள் பயிற்சி பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சிறுபான்மை பிரிவு மக்களுக்கு முதலிடமும், பெண்களுக்கு 33 சதவீதமும் ஒதுக்கப்பட்டு ஐந்து மாதப் பயிற்சி வகுப்புக்களை முற்றிலும் இலவசமாக வழங்கும் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான இப்பயிற்சி மையத்தின் முகவரி:

 

The IAS and IPS Free Coaching Centre,
28, First Main Road,
West CIT Nagar,
Chennai-600 035.

 

Phone : 044 2433 0952 / 2433 0095
Mobile : 9282 202151


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.