முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கும் அல்காயிதா அமைப்பிற்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் இருந்திருக்கவில்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் (Pentagon) நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவு மூலம் அமெரிக்கா உலக மக்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் முட்டாளாக்க நடத்திய பெரும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றிய பிறகு அங்கிருந்து பெறப்பட்ட 600,000-த்திற்கு அதிகமான ஈராக்கின் அரசாங்க ஆவணங்கள், மற்றும் சதாமுடன் பணி புரிந்தவர்களிடம் ஆயிரக்கணக்கான மணி நேரங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ப்ளூ-ரிப்பன் செப்-11 கமிஷன் என்ற அமைப்பும் பெண்டகனின் பொது ஆய்வாளரும் இணைந்து நடத்திய ஆய்வுகளும் இதே முடிவை வெளிப்படுத்தியிருந்த போதிலும் இம்முறை பரிசீலிக்கப்பட்ட ஆவணங்களும் தகவல்களும் முந்தைய ஆய்வாளர்களுக்குக் கிடைத்திருக்கவில்லை.
அமெரிக்க அரசு இதுபோன்ற ஆய்வு அறிக்கைகளைத் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களுக்கும் அதன் பிரதிகளை அனுப்பி வைப்பது வழமை. ஆனால் இம்முறை அவ்வாறு செய்யாமல், தனிப்பட்ட முறையில் இந்த அறிக்கையை வேண்டிக் கேட்பவர்களுக்கு மட்டுமே அனுப்புகிறது.வழக்கத்திற்கு மாறான இச்செயல், இந்த ஆய்வறிக்கை சொல்லும் உண்மைகள் பெருமளவில் ஊடகங்களில் வெளியிடப்படுவதை கட்டுப் படுத்தும் நடவடிக்கையோ என்ற சந்தேகத்தை விளைவித்துள்ளது.
“சதாம் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கிறார்; அவருக்கும் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் அல்காயிதா அமைப்பிற்கும் தொடர்பு இருக்கிறது” என்ற இந்த இரு காரணங்களை முன்வைத்தே அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. அதிபர் ஜார்ஜ் புஷ், துணை அதிபர் டிக் ச்செனி ஆகியோர் இந்தக் காரணங்களையே திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர். இருந்தும் கடந்த 5 ஆண்டுகளாக ஈராக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா இன்றுவரை அங்கிருந்து பேரழிவு ஆயுதங்கள் எதனையும் கண்டு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் சொன்ன முதல் காரணம் பொய் என தெளிவானது. இப்போது இந்த ஆய்வு அறிக்கையின் மூலம் இரண்டாவது காரணமும் பொய் என்பது அம்பலமாகியுள்ளது.
இந்த அறிக்கை சதாமுக்கும் அல்காயிதா அமைப்பிற்கும் எந்த நேரடித் தொடர்பும் இருந்திருக்கவில்லை எனச் சொல்லும் அதே சமயத்தில், அவரது அரசு பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தது எனவும் தெரிவிக்கிறது. “ஈராக்கின் நீண்டகாலத் திட்டங்களுக்கு இந்த அமைப்புகள் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் சதாமின் அரசு, இந்த அமைப்புகளுக்கு நேரடியான, அதே நேரத்தில் மிக கவனத்துடனான, ஒத்துழைப்பை நல்கி வந்துள்ளது” என்கிறது இந்த அறிக்கை “பாலஸ்தீன அமைப்புகளுடனான தொடர்புகளை ஈராக்கிய அரசு மிகக் கவனமாக அரசு ஆவணங்களில் பதிவு செய்துள்ளது. உதாரணமாக, காஸா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் குடும்பத்தினருக்கு ஈராக் நிதி உதவி அளித்துள்ளது” எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகவல் உண்மையெனில், சதாம் ஹுசைன் அமெரிக்காவுக்கோ மற்ற நாடுகளுக்கோ அல்லாமல் இஸ்ரேலுக்கு மட்டுமே பெரும் அச்சுறுத்தலாக விளங்கியிருக்கிறார் என்பது தெளிவு. ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்காவுக்கு எந்த உண்மையானக் காரணமும் இருந்திருக்கவில்லை. அதே சமயத்தில் சதாமை ஒழித்துக் கட்டுவதால் இஸ்ரேலுக்குத்தான் அனுகூலம் இருந்திருக்கிறது. அப்படியானால் இஸ்ரேலின் அடியாளாகத்தான் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்ததா? அப்படித்தான் தோன்றுகிறது!