விதி
தன்
மதியைக் கொண்டு
திட்டமிட்ட
சதியோ இது!
கடல்
கருணை அல்லவா-
சுருட்ட மட்டும்
சுனாமி எனும்
பினாமி பெயரா?
சற்றே எழுந்தாலும்
சமனப்படும்
சப்பானியர் உயரம்
இத்தனை அடிகள்
எழுதல் அவசியமா?
எங்கோ நிகழ்கிறது
எனினும்
இங்கே நெகிழ்கிறது
இதயம்!
கால்கள்
நனைத்த
செல்ல அலைகள்
கழுத்தை
நெறித்து
கொல்ல எழுந்தனவே!
எழுந்த அலைகள்
விழுந்தன தலையில்
அழுந்தத் துடைத்து
அழித்தது நிலத்தை!
{youtube}APEsVeE7FGk{/youtube} |
உயிர்களும்
உறையுளும்
உடமையும்
ஊர்திகளும்
அழுக்கா என்ன-
அவசர அவசரமாக
அலைகள்
அடித்துத் துவைக்க?
ஊருக்குள்
ஊடுருவும் காட்சிகளில்
உயிருறுஞ்சும் வேட்கை…
சப்பானியர் மட்டுமல்ல
சுறுசுறுப்புக்கு
எடுத்துக்காட்டு-
சப்பானில் சுனாமியும்!
இறைவா,
இழந்தவர்களுக்கு
இதயத்தில் அமைதி கொடு…
இனியொரு
சுனாமி எனில்
கரைகளுக்குள் இருக்கட்டும்.
உன்னைக்
கெஞ்சிக் கேட்கிறோம்
இனியும் வேண்டாம்
எல்லை தாண்டிய …!
– சபீர்