நிற்க,
நீரூற்று ஏதுமில்லை
நிலத்திலும் ஈரமில்லை
விழியருவி பெருக்கும் நீரில்
செழிக்கிறது பாலைவனம்
பாலை மணல் பகுத்து
பாத்திப் பாதை வகுத்து
புதர்களால் அலங்கரித்து
பயணிக்கிறது என் பிழைப்பு
பிழைக்க உடல் உழைத்து
களைத்து நான் படுக்க
வதைக்கிறது உன் நினைவு
உறைக்கிறதா உனக்கு அங்கும்
அங்கும் இங்கு மென
தங்கு மிடம் மாற்றி
அடுக்கு மாடி குடியிருப்பில்
ஒடுக்கி உடல் சாய்க்க
சாய்ந்த உணர்வலைகள்
சடுதியில் தலை தூக்க
போர்வைக்குள் விழித்திருக்கு
பேரழகி உன் கண்கள்
கண்களை இமை மூட
கனவுகளில் உன் வதனம்
புரண்டு படுத்தாலும்
முரண்டு பிடிக்கிற தேன்?
ஏனென்று கேட்பதற்கு
எத்தனையோ கேள்விகள்
என்னிடம் உண்டு அன்பே
எவரறிவார் பதிலுரைகள்
பதிலில்லாப் புதிர்களடி
பாலைக்கு வந்த கதை
தீரவில்லை தேவைகள்
தேய்கிறது என்னுடலும்
உடல்வதைத்து உணர்வழித்து
உண்டாக்கிய துதான் என்ன
உன்னருகில் நானின்றி
உழல்கின்றேன் உத்தமியே
உத்தமி உன் நினைவில்
உயிர் வாடிப் போகு முன்னே
ஊருக்கு வருவதற்கு
உன்னிலையை அறிந்திடனும்
அறியத்தா அம்மணியே
அன்பென்ன மாறியதா
காட்சிப் பிழைகளென என்
கண்கள் உனைப் பார்க்கிறதா?
பார்க்கும் திசைகளெல்லாம்
பாவப்பட்ட நான் தெரிய
புறப்பட்டு வந்துவிட்டால்
பிழைப்புண்டா எழுந்து நிற்க?
oOo
நிற்க,
எழுத்துகளைக் கோர்த்துவைத்து
ஏக்கம் சொல்லத் தெரியாது
வார்த்தைகள் வரிசைப்பட
வாழ்க்கை சொல்ல விளங்காது
அன்பென்ன மாறிடுமோ
அடிவானம் கருகிடுமா
அத்துணை முகங்களிலும்
ஐயா நீர் தெரிகின்றீர்
காசுபணம் கைப்பற்ற நீர்
கடல் கடந்த நாள் முதலாய்
காலையிலும் விடியலில்லை
கனவுகளுக்குக் குறைவுமில்லை
ஒரு ஜன்மம் முழுக்க நீங்கள்
ஓயாமல் உழைத்தாலும்
ஒரு வாய்தான் உணவு மெல்லும்
ஒரு ஜான்தான் வயிறும் கொள்ளும்
என்னருகில் நீர் இருந்தால்
என்விழியில் நீரிருக்கா
எண்ணுகிறேன் நாட்களைநான்
என்னுயிரே வந்திடுவீர்
தள்ளுவண்டிக் காரர்களும்
தார்ச்சாலை போடுவோரும்
தொழில்முடித்துத் திரும்பியதும்
தோள்சாய வழியுண்டு
உயர்தர உணவுகளும்
வெளிநாட்டு உடுப்புகளும்
தந்துவைத்தீர் என்ன செய்ய
தாங்களின்றித் தரணி இல்லை.
நாணயங்கள் வெட்டிப்போட்டு
நாக்குருசி பார்ப்பதில்லை
நோட்டுக்கட்டைக் கொளுத்திப்போட்டு
சோற்றடுப்பை எரிப்பதில்லை
வயிற்றுக்கு நிறைவாக
உண்டுவாழ வழியுண்டு
வாழ்க்கைக்கு உறுதுணையாய்
வந்து சேர்வீர் என்னவரே!
– சபீர்