இன்பம் நிலைக்கும் இன்ஷா அல்லாஹ்!

வெய்யிற் காலம் வந்து போகும்
வேடந் தாங்கல் பறவைக் கூட்டம்
மெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்
வேடந் தாங்கும் பக்தர் கூட்டம்

உதயம் தொடங்கி அந்தி வரைக்கும்
உணவும் நீரும் வேண்டா(து) ஒதுக்கல்
இதயம் கொள்ளும் இறைமை நினைவை
இருந்தும் நாவில் ஏனோ பொய்கள்?

நோன்பில் வந்த ஞான வேதம்
நன்றாய் ஓத நன்மை கற்போம்
நோன்பில் மட்டும் ஓதி விட்டு
மூடி வைத்தல் யாரின் குற்றம்?

குர்ஆன் இறங்க ரமளான் மாதம்
கூறும் சரிதம் இன்றும் உண்மை
பரணில் வைத்தோம் பின்னர் மறந்தோம்
பொதுவாய் நோன்பில் இறக்கிப் பார்ப்போம்

விரதம் இருந்து, வேண்டும் இறைமை
உணர்வைக் கொண்டால் உள்ளம் சிறக்கும்
விருந்தில் மிகைத்து வேண்டாத்  தீமை
செயல்கள் புரிந்தால் உள்ளம் இறக்கும்

நோன்பில் பெற்ற நல்ல வழிகள்
நாளை மறுமை நிலைத்த வெற்றி
ஆன்மச் சிறப்பில் அழியா பேறு
அடைவ தொன்றே வாழ்க்கை நோக்கம்

முறையாய் நின்று மறையின் வழியில்
நிறைவாய் வென்று நன்மை கொள்ள
இறையை வேண்டி எடுப்போம் முயற்சி
இன்பம் நிலைக்கும் இன்ஷா அல்லாஹ்.

– பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)