பரிசு மழை

பார்புகழும் வித்தகர்க்குப் படிக்கட்டாய் உலகப் பரிசு!
பெரிய சாதனைக்கும் பரிசு! அரிய கண்டுபிடிப்பிற்கும் பரிசு!
அமைதிக்கும் பரிசு! அஹிம்சைக்கும் பெரும் பரிசு!
அன்புத் தொண்டிற்கும் பரிசு! ஆன்மீகச் சொற்பொழிவுக்கும் பரிசு!

கல்விச் சிறப்பிற்கும் பரிசு! கணினி அறிவிற்கும் பரிசு!
கலைநயக் கவிதைக்கும் பரிசு! கருத்தில் பதியும் கதைக்கும் பரிசு!
கற்பிக்கும் ஆசிரியர்க்கும் பரிசு! கற்றுயர்ந்த அறிஞர்க்கும் பரிசு!
காவலருள் நல்லோர்க்கும் பரிசு! கலைமாமணிகளுக்கும் பரிசு!

நிர்வாகத் திறமைக்கும் பரிசு! நிறைவுதரும் நீதிக்கும் பரிசு!
வீரதீரச் செயலுக்கும் பரிசு! விளையாட்டு வீரருக்கும் பரிசு!
கின்னஸ் சாதனைக்கும் பரிசு! கேள்வி ஞானத்திற்கும் பரிசு!
சாகசச் செயலுக்கும் பரிசு! சரித்திர நாயகர்க்கும் பரிசு!

இது போல் உலகப்

பரிசுகள் பல உண்டு நாம் அறிவோம் – ஆனால்
பாசமிகு இறைவன் தந்த பரிசுகளை நாம் அறியோம்!
ஆறு அறிவை நமக்களித்த ஆற்றல்மிகு இறைவன் தந்த
ஆறரிய பரிசுகளை மட்டுமேனும் அறிந்து கொள்வோமே!!

‘இஸ்லாம்’ எனும் முதற்பரிசை இறைவன் நமக்களித்தான்!
இங்கிதமாய் நாம் வாழ இனிய தீன் கொடுத்தான்!
எல்லோரும் இணையற்ற சகோதரர்கள் என்றுரைத்து
இனிய வாழ்வுக்காய் இஸ்லாத்தில் ஐங்கடமை என்று வைத்தான்!

‘அல்குர்ஆன்’ எனும் இரண்டாம் பரிசைத்தந்து நம் எல்லோரையும்
கொடுஞ்செயல் குற்றம் தவிர்த்து வாழ வகை செய்தான்!
அவனி மக்கள் அனைவருமே அருள் நெறியைப் பின்பற்ற
அரியதோர் வேதம் தந்து நம் அக இருளை அகற்றி வைத்தான்!

அகிலத்து அருட்கொடையாம் அண்ணலை அரும்பரிசில் மூன்றாக்கி
அருள்மறையின் இறை கருத்தை அனைவரும் உணரச் செய்தான்!
அதன்படி வாழ்ந்து காட்டி அவர் வழியைப் பின்பற்ற
ஐங்கடமை மாளிகையில் நம்மை அன்றாடம் வசிக்கச் செய்தான்!

நான்காம் பரிசாக ‘ஆஃபியத்’ எனும் உடல் ஆரோக்கியத்தை
நம் அனைவருக்கும் அவன் அளித்தான்! அன்பு காட்டி வாழ்ந்திடவே
நானிலத்தில் பல வழிகள் செய்தான் – நம்பிக்கையூட்டி நின்றான்!
நபிவழி மருத்திவத்தை நல்கியே நல்மனம் மகிழச் செய்தான்!

வழங்கிய பரிசுகளை வளமுடன் நாம் சுவைத்து வாழ
வறுமை நீக்கும் ‘பொருட்செல்வம்’ எனும் ஐந்தாம் பரிசைத் தந்தான்!
செல்வத்தின் செழுமை கொண்டு சேவை மனக் கடமை செய்து
செருக்கற்ற மனத்தோடு தேவை உடையோர்க்கு உதவச் செய்தான்!

கொடுத்துக் கொடுத்து மகிழ்ந்த இறைவன் நமக்கெல்லாம்
‘குழந்தைச் செல்வம்’ எனும் ஈடற்ற ஆறாம் பரிசைத்தந்து
கொண்டாடி மகிழச்செய்தான்! கூட்டமாய் பகிர்ந்துண்ண வைத்தான்!
மறுமைப் பரிசை மனத்தில் கொண்டு, இம்மைப் பரிசுகளுக்கு நன்றி சொல்வோம்!

ஆக்கம்: எம். அப்துல் ரஹீம், M.A, B.Com, B.G.L, P.G.D.B.A, கோயம்புத்தூர்.