இளமையில் வறுமை

Share this:

வறுமையின் நிறம் சிகப்பு என்றால் – அதில்
வாடிடும் இளமையின் நிறம் கருப்பு என்பேன்!
வாழ்க்கையின் இன்பத்தில் உதித்து விடும் – வாளிப்பான
இளமையில் வறுமை கொடிது என்பேன்!

மக்களை ஈன்ற மகிழ்ச்சியிலே – தாயோ – தன்
மடிதனில் சேய் கிடத்திக் கொஞ்சி பசி மறப்பாள் – ஆனால்
பசி தாங்கா சேயோ, பாலுண்ண சேலையை பிடித்திழுக்கும்!
பாழும் வறுமை உலுக்கியதால் பாலுக்கு தாய் எங்கே போவாள்?
வறண்ட காம்பின் சுவையறியா சேயின் வயிறு வற்றிக் காயும்! – இப்படி
ஆண்டுகள் சில கடக்கும்; ஆண் பிள்ளை எழுந்து நடக்கும்!

வறுமையின் போராட்டம் முழு வடிவமுற்று தலை தூக்கும் – பிள்ளை
சோறுண்ணும் வயதில் வீட்டில் சோறும் இல்லை – பெற்றோர்
சோர்விலா உழைப்பை செய்தும் சோறு செய்ய வருமானம் இல்லை
சொந்தத்தில் ஒன்றுமில்லை; சொகுசான வாழ்வுமில்லை,
சுற்றம் யாரும் உதவவில்லை; சுகம் என்பதை கண்டதேயில்லை!

"அம்மா பசிக்குது" என்று அருமை பிள்ளை சொல்லக் கேட்கும்
அன்புநிறை பெற்றோரோ ஏதும் அறியாது கலங்கி நிற்பர்!
அடுத்த வீட்டு செல்வந்தன் பிள்ளை வெள்ளித் தட்டில் அமுதுண்ணும் – அதை
ஆவலாக பார்த்திருக்கும் இந்த வறுமையின் செல்லப் பிள்ளை!
பார்த்திருந்தே பசி மறக்கும் பரிதாபத்தை சொல்ல வேண்டாம்
மண் பானை நீரிருக்கும் அந்த மடமையிலா வயிற்றினுக்கு!

வளமையின் செண்பகப்பூ வறுமைச் சூட்டில் சருகாகும்,
பள்ளி செல்ல நாளும் வரும்; பசியும் உடன் செல்லும்,
பாடங்கள் கேட்பதெல்லாம் பசி வெல்ல மறந்து போகும்,
பல நேரம் உணவின்றி பட்டினியால் வாடிச் சாயும் – இளமையின்
பசித்துன்பம் உலகில் கொடுமையிலும் கொடுமை என்பேன்!

வாழ்க்கையிலே தேக்காய் (தேக்கு மரம்) நெடிதுயரும் மழலை
வறுமையின் சாக்காட்டில் உழன்றதனால் – இன்று
வலுவிழந்த முருங்கையாய் (முருங்கை மரம்) தானுயரா நிற்கிறதே!

ஆற்றல் கொண்ட அரசோரே, அன்பு காட்டி ஆள்வோரே!
வருங்கால உலகத்தை உருவாக்கும் பெரியோரே!
ஆலையின் கரும்பாக ஆட்டி வைக்கும் வறுமையினை
அகற்றுதற்கோர் திட்டம் செய்வீர்; அஃதிலும்
இளமையில் வறுமையினை எப்படியும் விரட்டிடுவீர்!!

இளமையில் வறுமையினை எப்படியும் விரட்டிடுவீர்!!
 
ஆக்கம்: இப்னு மொஹிதீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.