மனதின் மறுபக்கம்

சிதறும் சிந்தனை

மனதின் வலிமை மனிதனுக்குத் தெரியுமா!

மனதின் மௌனஒலி மற்றவர்க்குப் புரியுமா?

மனதின் ஆழத்தை மனித மனம் அறியுமா?

மனதின் சக்தியை மாற்ற அதற்கு முடியுமா?

 

இப்படி………….

 

வினாடிக்கு வினாடி வினாக்களைத் தொடுக்கலாம்!

விடை எங்கே என்று தேடி அதை நாம் கொடுக்கலாம்!

மனதின் மறுபக்கத்தைக் காண மனம் துடிக்கலாம்!

கண்டபின் மனம் மாறி வாழ்ந்தும் முடிக்கலாம்!

 

மனம் கிளைக்குக்கிளை எப்போதும் தாவுமா?

இத்தத்துவம் பொய்யென்றால் அது மேவுமா?

மானுடம் மெய்த்தன்மை காணாமல் போகுமா?

கண்டால் மனதைத் தன் கட்டுக்குள் வைக்குமா?

 

உட்கார்ந்த இடத்தில் உலகைச் சுற்றுகின்ற மனம்!

ஓரிறைப் படைப்பின் ரகசியத்தில்  தனி இனம்!

அல்லாஹ்வின் கொடையால் மகிழ வேண்டிய மனம்!

அல்லல்பட்டு நிறம் மாறுகிறதே அனுதினம்!

 

ஆற்றல் அனைவருக்கும் அருளப்பட்ட அருமருந்து!

அதை உண்ணும் மனம் தினம் சுவைக்கும் விருந்து!

மருவிலா மனம் கொள்வதே மனிதனின் பொறுப்பு!

சமுதாயத்தின் மீது அவன் காட்டக்கூடாது வெறுப்பு!

 

மனதை மானசீகமாக இயக்கும் தனியன் யார்?

படைத்தவன்மேல் தொடுக்க முடியுமா போர்?

மனதைப் பிறருக்கும் அளிப்பதே நன்முறை!

அளிக்காமல் வாழ்ந்தால் அதுவே பெருங்குறை!

 

ஆழ்மனதின் சுவடுகள் அழகாய்ப் படிக்கும் பாடம்!

அது அதிவேக மின்காந்த சக்தியின் செயற்கூடம்!

அகிலத்தையே அகத்துள் அடக்கும் அபூர்வ சக்தி!

அன்றாடம்  ஒளிவீசி அது நாடும் இறை முக்தி!

 

சலிக்காமல் அஞ்சாமல் சாதிப்போர் சாமர்த்தியசாலி!

சாதிக்காதோர் தாண்ட வேண்டும் பலமுள்வேலி!

ஏழையான மனதை கோழையாக மாற விடலாமா ?

ஏணியாய் இருந்த மனம் எட்டி உதைக்கப்படலாமா?

 

பரிசுத்த மனம் பாருக்குத் தந்தது நல் வைத்தியம்!

பாதை மாறிய மனம் பெற்ற பட்டமோ பைத்தியம்!

உத்தமர்கள் உலகிற்கு உரைத்ததெல்லாம் போதனை!

போதனையைத் துறந்த மனம் கொண்டதே வேதனை!

 

உள்மனம் செய்யச்சொல்லும் உண்மையை நாடி,

வெளிமனம் செய்யும் விபரீதங்கள் எத்தனை கோடி?

வறியவர் வாட்டம் கண்ட மனம் அவரைத் தேடி,

வள்ளலாய் மாறி வாஞ்சையுடன் உதவியது எப்படி?

 

உரிமைக்குப் போராடிய மனம் உலகில் பெற்ற புகழ்,

சரித்திரதில் உயிரோடு வாழ்கிறதே அதற்கேது நிகர்!

சர்வாதிகார மனம் மக்களுக்குத் தந்த சாட்டையடி,

சமுதாயம் அவரை விரட்டியடித்துக் கொடுத்த பேரிடி!

 

தந்திரமாய் பிறரை வீழ்த்திய தன்னல மனத்தோர்,

தரங்கெட்ட வஞ்சகராய் மாறிய இழி குணத்தோர்!

எதையும் தாங்கி இன்சொல் கூறிய இனத்தோர்,

எல்லா மக்களின் இதயம் நின்ற நல் மனத்தோர்!

 

குமுறும் மனம் குடும்பத்தை அழித்ததில்லையா?

கொட்டமடித்த மனம் குன்றிப் போகவில்லையா?

அஞ்சிய மனம் அகில வாழ்வில் தோற்கவில்லையா?

அடங்கிய மனம் ஆன்மீகத்தில் திளைக்கவில்லையா?

 

சோர்ந்து படுத்த மனம் சோம்பேரியாகவில்லையா?

சுறுசுறுப்பான மனம் சொகுசாய் வாழவில்லையா?

கல்-கஞ்ச மனமெல்லாம் கருகிப் போனதில்லையா?

பெற்றமனம் பிள்ளைப் பாசத்தைத் தந்ததில்லையா?

 

இறைவன் படைப்பில் எல்லா மனமும் மாறுபட்டதா?

இல்லை தன் செயலால் ஒவ்வொன்றும் வேறுபட்டதா?

மனிதன் நினைத்தால் கொணரலாம் அதைக் கட்டுக்குள்!

கொணராவிட்டால் படுத்துறங்கலாம் தன் கட்டிற்குள்!

 

மன வலிமை, ஆழம், மொழி அவன் இதயத் துடிப்பு!

தெரியாததுபோல் இருப்பது மட்டுமே அவனது நடிப்பு!

மனதிற்கு மனிதனே நல்ல எஜமான் என்ற தத்துவம்,

மறைக்காமல் எல்லோரும் படிக்கும் திறந்த புத்தகம்!

 

நல்ல மனம் தன்மானத்தைத் தாங்கும் கருவறை!

மானம் போகும்படி செயல்படலாமா பலமுறை?

மனதின் செயல் மற்றவற்கு தரக்கூடாது தொல்லை!

நட்பும், நல்லெண்ணமுமே நல்ல மனதின் எல்லை!

 

அடங்கிய மனம் ஆன்மாவிற்கு பலம் அது படியும்!

அடங்காத மனம் ஆர்ப்பரித்து வீழும் மறுபடியும்!

நல்லெண்ணெத்தை நாடினால் நல்லபொழுது விடியும்!

நாடாவிட்டால் பிறரிடம் மண்டியிட்டு மடியும்!

 

மனதின் வலிமை மனித எண்ணத்தின் உயிர்நாடி!

எதிராய்ச் செயலுற்றால் இடிபட்டுச்சாகும் மனம் வாடி!

எண்ணத்தின் சக்தி நல்லதையே ஈர்க்கும் காந்தம்!

ஈர்த்தால் மட்டுமே இதயம் கொள்ளும் சாந்தம்!

 

பாவத்திற்கு ஈருலகில் கிட்டிடுமே நரக வேதனை!

சரியான பாதை சென்றால் கிட்டாது அந்த சோதனை!

எண்ண நாணயத்தில் இரு புறமும் தலை வேண்டும்!

ஒருபக்கம் பூவானால் மனவேதனைதான் மீண்டும்!

 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வளரும் ஆன்மா!

பிறரின் தூண்டுதலால் தன் நிலை குலைந்துவிடுமா?

ஆன்மாவின் சக்தி மனிதனுக்குக் கிடைத்த மகுடம்!

மனக்கட்டுப்பாடு அதைத் தாங்கி நிற்கும் பொற்குடம்!

 

மனம், எண்ணம், செயல் மூன்றும் உடன் பிறப்பு!

ஒன்று விலக நினைத்தாலும் தளரும் உடலுறுப்பு!

ஒவ்வாத போதனைகள் எல்லோருக்குமே வெறுப்பு!

உதாரணத்தைப் பார்ப்பதே இப்போது நம் பொறுப்பு!

 

தொழுகைக்கு நின்றபின் தூய சிந்தனை பிறக்கும்!

தொடரப்படும் சூராக்கள் செவி கேட்டுச் சிறக்கும்!

மனத்திரையில் மாறுபட்ட எண்ணங்கள் பிறப்பின்

மறையோன் முன் நிற்கின்ற பயத்தை மனம் துறக்கும்!

 

ஒருநிலையான மனதில் இறையச்சம் வேண்டும்!

ஒழுங்காக தொழுவதற்கு உள்ளத்தை இது தூண்டும்!

ஓர் இறையின் பால்  மனம் காட்டும் முழு ஈர்ப்பு!

உயர்ந்த தொழுகையின் பலன் கிட்ட அரிய வாய்ப்பு!

 

தூய்மையான  தொழுகைக்குக் கிட்டும் நன்மை!

தொடர்ந்து நாம் கேட்பதைத் தரும் அது உண்மை!

ஆழ் மனதில் அனைவரும் கொள்ள வேண்டிய ஈமான்,

அஞ்சாத பலம் தந்து அகிலத்தை வெல்லும் சீமான்!

 

நற்செயலை நாடி மனம் நாளும் துணியும்!

நாற்புறமும்  தடுக்கவரும்  மனம் அதற்குப் பணியும்!

இடையூறு செய்ய  நினைக்கும் ஷைத்தான் எண்ணம் !

ஈடேறாமல் போகும் என்றென்றும் இது திண்ணம்!

 

உள்மனதை ஒரு நிலைப்படுத்தி உண்மைபேசி,

ஒவ்வாத காரியத்தை விலக்கி உன் மனதை நேசி!

தீய வாழ்க்கை தீயினும் கொடுமை அதை நீ யோசி!

தூய வாழ்க்கை தொடந்தால் நாமே சுவர்க்கவாசி!

 

ஆக்கம்: எம்.அப்துல்ரஹிம், கோவை.