ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்

மாற்றம் காணும் மாணவர்கள்
Share this:

மேற்கு வங்காளம் முழுவதும் ஆங்கில மொழியில் பாடம் நடத்தும் புதிய மத்ரஸாக்களை உருவாக்க இருப்பதாக” மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. “இதன் மூலம் ஆயிரக் கணக்கான முஸ்லிம்/முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பயன் அடைவர்” என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்ரஸா (مدرسة) எனும் அரபுச் சொல்லுக்கு “கல்வி கற்றுக் கொள்ளும் இடம்” என்று பொருள். அரபு மொழியில் இது பாடசாலை/பள்ளிக்கூடம் என்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியினால் ஆதிக்கச் சக்திகள்  ‘ஜிஹாத்’ எனும் சொல்லுக்கு, “அப்பாவிகளைக் கொல்லுதல்” போன்ற தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் களங்கம் ஏற்படுத்தியதுபோல் ‘மத்ரஸா’ எனும் சொல்லின் தூய்மைக்கும் பங்கம் விளைவித்துள்ளனர் என்பது வேறு விஷயம்.

மேற்கு வங்க அரசின் இந்த அறிவிப்பிற்கு முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு அறிவிப்பின் முதல் கட்டமாக, சிறுபான்மையினர் பெருகியுள்ள 11 மாவட்டங்களில் 11 ஆங்கில மத்ரஸாக்கள் துவங்கப்பட உள்ளன.

இந்த மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்கள் இஸ்லாமியக் கல்வியினை ஆங்கில மொழியில் பயில்வர். இது ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப் பள்ளி வரையிலான பாடத்திட்டமாகும்.

“மேற்கு வங்கத்தின் பத்தொன்பது மாவட்டங்களிலும் பத்தொன்பது புதிய இஸ்லாமிய மத்ரஸாக்கள் உருவாக்கப் படும். இதன் அடிப்படை மொழி ஆங்கிலமாக இருக்கும்!” என்கிறார் மேற்கு வங்க சிறுபான்மை வளர்ச்சித்துறை அமைச்சரும் மத்ரஸாக் கல்வி அமைச்சருமான அப்துல் சத்தார். செய்தியாளர்களுக்கு நேற்று (20-12-2009) அளித்த பேட்டியில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடையே மேலும் பேசுகையில், “இத்தனை காலமாக இருந்து வந்த எங்களின் மரபுக் கல்வி முறையினை இந்த ஆங்கில மத்ரஸாக்கள் முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்று நம்புகிறோம். இன்றைய காலகட்டத்திற்குக் கட்டாயத் தேவையான ஆங்கிலக் கல்வியோடு இஸ்லாமிய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு இத்தகைய மத்ரஸாக்கள் உதவியாக இருக்கும். இத்தகைய மத்ரஸாக்கள் மூலம் பயிலும் மாணவர்கள், நவீன யுகக் கல்வியாளர்களோடு போட்டி போடும் வகையில் சிறந்த பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நெறிஞர்களாகவும் மாறுவர். இஸ்லாமிய மத்ரஸாக் கல்வியில் நவீனத்துவம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை, தாமதம் என்றாலும் சரியாகவே உணர்ந்திருக்கிறோம்!” என்கிறார் அப்துல் சத்தார்.

மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே மாநில அரசு நடத்தும் 474 மத்ரஸாக்கள், அரசு பள்ளிக் கூடங்களிலேயே இயங்கி வருவதும், இத்தகைய மத்ரஸாக்களில் முஸ்லிமல்லாத, பிற மத மாணவர்கள் 20% இடம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், புதிய மத்ரஸாவில் இஸ்லாமியக் கல்வியுடன் நவீன அறிவியல், கணிதம், கணினிக் கல்வி ஆகியவை இணைவதைக் கண்டு கவரப்பட்டு புதிய மாணவர்கள் பெருமளவில் விண்ணப்பித்துள்ளனராம்.

“பல்லாயிரக் கணக்கான ஏழை இந்திய மாணவர்களின் கல்வி நிலையினை மேம்படுத்துவதே இத்தகைய ஆங்கில மத்ரஸாக்களின் குறிக்கோளாகும்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

“தற்போதைக்கு மத்ரஸாக்கள் தந்து கொண்டிருக்கும் ஆங்கிலம் அல்லாத, மாநில மொழிகளை மட்டும் போதிக்கும் கல்வி முறையினால் எதிர்காலக் கல்வி-வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயத்தை உணர்ந்திருப்பதால் ஏழை முஸ்லிம் மாணவர்கள்கூட சாதாரண மத்ரசாக்களில் சேர்ந்து கல்வி பயிலத் தயங்குகின்றனர். இத்தகையச் சூழல் தொடருமானால் ஏழைகள் என்றென்றும் நிர்க்கதியாய் நிற்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கை மணி ஒலித்ததைக் கண்டு, இத்தகைய ஆங்கில மத்ரஸாக்களை உருவாக்குகிறோம். இதன் மூலம் கல்வி பெறும் மாணவர், நிறைய பொருட்செலவில் ஆங்கிலக் கல்வியை வழங்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாகக் கல்வி அறிவில் மேம்பட்டு நிற்பர்” என்று தொடர்கிறார் அப்துல் சத்தார்.

“சிறந்த கல்வி என்றாலே ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி என்றாகி விட்ட இந்தியக் கல்விச் சூழலில், தரமான கல்வியை இலவசமாக வழங்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இப்புதிய ஆங்கில வழி மத்ரஸாக்கள் செயல்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள இந்த மத்ரஸாக்கள், ஏழை-சிறுபான்மை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன.

 

” கல்வி நிலையில் மேம்பாடு அடைவதில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், நாட்டில் சுய கவுரவத்துடன் மதிக்கப்படுவதற்கும் அதிகார, ஏகாதிபத்திய, ஃபாஸிஸ சக்திகளால் அநியாயமாக ஒடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறவும் தேவையான அதிகாரங்களிலும் உயர் வேலை வாய்ப்புகளிலும் மட்டும் முஸ்லிம்களின் சதவீதத்தை ஒப்பு நோக்குவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும் “

பல்லாண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் கல்வி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டனர். அதனாலேயே ஆதிக்கச் சக்திகளின் அடக்குமுறைக்கு உள்ளாகிப் பெரும் அவலங்களைச் சந்திக்க நேர்ந்தது. இதனைச் சமீபத்தில் சச்சார் கமிட்டி அறிக்கை மிகத்தெளிவாக வரைந்து காட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில், “நாட்டுப்பற்றுள்ள இந்திய முஸ்லிம்கள் ஆங்கில மொழியைக் கற்பதும், கற்பிப்பதும் ஹராம்” என்று ஃபத்வாக்கள் கொடுக்கப் பட்டு அதில் உறுதியாக நின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த மனோநிலை முஸ்லிம்களிடையே மாறாமல் இருந்திருக்கிறது என்பதற்கு ஆங்கிலக் கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியிருப்பதே சாட்சியாக உள்ளது. இதனாலேயே  அரசின் அதிகார மையங்களான நீதித்துறை, காவல்துறை, இராணுவம், உளவுத்துறை ஆகிய எத்துறையிலும் முஸ்லிம்களைக் காண்பது மிக அரிதான விஷயமாக உள்ளது. அத்தோடு உயர்கல்வி கற்பவர்களுள் முஸ்லிம்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர்.

“கல்வியைத் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று ஊக்குவிக்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்வியல் நெறியாகக் கொண்ட இந்திய முஸ்லிம்கள், ஏனோ கல்வி விஷயத்தில் உறக்கம் கலைந்து இன்னும் எழுந்த பாடில்லை.

கிறித்துவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினரை ஒப்புநோக்குகையில் முஸ்லிம்கள் மட்டுமே அவர்களின் சதவீதத்திற்கொப்ப கல்வி நிலையங்களில் இடம் பெற்றிருக்கவில்லை. கல்வி நிலையில் மேம்பாடு அடைவதில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், நாட்டில் சுய கவுரவத்துடன் மதிக்கப்படுவதற்கும் அதிகார, ஏகாதிபத்திய, ஃபாஸிஸ சக்திகளால் அநியாயமாக ஒடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறவும் தேவையான அதிகாரங்களிலும் உயர் வேலை வாய்ப்புகளிலும் மட்டும் முஸ்லிம்களின் சதவீதத்தை ஒப்பு நோக்குவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.

அத்தோடு, காலனித்துவ காலத்திலிருந்தே மேற்கு வங்காளத்தின் ஆரம்பப் பள்ளிகளில் இடம் பெற்று வந்த ஆங்கிலக் கல்வி, கடந்த 1980இல் இடதுசாரி மார்க்ஸிஸ்ட்-இன் ஆட்சிக் காலத்தில் முற்றிலும் நீக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.

“ஆங்கிலம் கற்காததால் உயர் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் இடம் கிடைக்காமல் முன்னேற முடியாமல் போராடும் முஸ்லிம் மாணவர்கள் அதிகரித்துள்ளதால், ஆங்கில மீடியம் மத்ரஸாக்களின் தேவை இன்றிமையாதது!” என்கிறார் நூருல் இஸ்லாம். இவர் மேற்கு வங்காளத்திலுள்ள கலத்பூர் மத்ரஸாவின் தலைமை ஆசிரியர் ஆவார்.

இத்தகைய ஆங்கில மீடியம் மத்ரஸாக்கள், ஆங்கிலக் கல்வியறிவு பெற வசதியற்ற முஸ்லிம் மாணவர்கள் இதுநாள்வரை கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, எதிர்காலச் சமுதாயக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் உயர் கல்விகளிலும் வேலை வாய்ப்புகளிலும் நவீன தொழில் சந்தைகளில் நிலவும் போட்டிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் தரமான கல்வியை வழங்கி நவீன தொழில் சந்தையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்களையும் ஃபாஸிஸ, அதிகார வர்க்கங்களின் அடக்குமுறைகளையும் முறியடிக்கத் தயாராகும் என்று எதிர்பார்ப்போம்.

ஆக்கம்: அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.