ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’

வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

 


சித்த வயிறின் பான்மை உணர்ந்தோம்
பாவம் போக்கும் பாதை அறிந்தோம்
நிசியில் தொழுதோம்; நிலைகள் உயர்ந்தோம்
நேசம் மிகைத்து நெஞ்சம் மலர்ந்தோம்.


புசிக்கும் உணவில் பலரின் உழைப்பு
புரிந்த மனதில் பொதுமை இறையே..
நசியும் உலகை நினைவில் கொண்டு
நாளும் பொழுதும் நன்மைத் தொடர்வோம்.


நோன்பின் பயிற்சி நோற்பில் தெரியும்
நோய்கள் தீரும்; ஞாயம் புரியும்
மாண்பாய் ஈகை மனதில் நிறைக்கும்
மண்ணில் இரக்கம் மலரும் வளரும்

ஆன்மத் தேடல் அகிலம் எங்கும்
அன்பின் வழியில் அறிவுப் பயணம்.
சான்றோர் கூற்று சுமக்கும் காற்று
சொல்லும் செய்தி சுவர்க்கப் பாதை.

மறையும் ஓத மனமும் திறக்கும்
மனிதர் வேண்டும் மகிழ்வே என்றும்.
விரையும் உலகில் வேண்டு மிலக்கு
வேண்டா சிந்தை வேகம் விலக்கு.

முறையாய் எவரும் மார்க்கம் காணின்
மறுமை வெற்றி இறையின் நாட்டம்
இறையின் உவப்பே இனிய நோக்கம்
இன்பப் பரிசாய் பெருநாள் இருக்கும்!

ஆக்கம்: கவிஞர். இப்னு ஹம்துன்