கனவில் கிடைக்கும் நீதி!

நீதி தேடும் இதயங்களே!

உறக்கம் உங்களைத் தேடி வராது!

 

உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில்

உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!

 

இறுக்கமான இதயத்துடன் – தினமும்

இரவை நான் கழிக்கின்றேன்!

 

விடிவதற்குள் நீதி தேடி

விம்முகிறதென் கனத்த இதயம்!

 

விடிந்தால் அநியாயத்தின் பிறப்பிடம்

புஷ் இல்லா புது உலகம்!

 

நீதியின் மண்ணில் புதுப்பிறவி துளிர்க்க

நிதமும் ஏங்கும் பொல்லா மனம்!

 

இந்த ஏக்கத்துடன் மூடுகிறது என்

இமைகள் இரண்டும்!

 

***********************************

தட்டப்படும் கதவுச்சத்தம் கேட்டு

தடுமாறி எழுந்து நின்றேன்!

 

வீட்டிற்கு வெளியே

உலக மக்களின் ஒன்றிணைந்த ஆரவாரம்!

 

கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டி

இழுத்து வரப்படும் ஸாட்டிலைட் உலக பரோவா!

 

உற்று நோக்கிய பின்னரே

உணர முடிந்தது – அது பரோவா அல்ல புஷ் என்று!

 

ஓங்கியொலிக்கும் குரல்கள்!

ஒன்றுபட்டிருக்கும் மனிதர்கள்!

 

" இப்பாதகனின் கழுத்திற்குத் தூக்குக்கயிற்றைச்

சார்த்துபவன் யார்?"

 

என் இல்லத்திற்குள் ஓடுகின்றேன் – என்

இறைவனைத் தியானிக்க!

 

முட்டி மடக்கி கர்த்தரின் முன்

கை கூப்பி வேண்டுகிறேன்!

 

ஏகமான கரவொலி என் செவியைத் தொட்டது!

எழுந்து நின்று, பைபிளைத் திறக்கிறேன்!

 

என் விழியில் விழுந்ததோ

யோவான் – அத்தியாயம் 8!

 

உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ

முதலில் அவர் இவளை (வேசியை) கல்லெறியட்டும்…!

 

உலகமெல்லாம் பிணக்குவியல்கள்

ஊடகமெல்லாம் பொய்ப் பிரச்சாரங்கள் என்று

 

இன்னல்கள் பலருக்குத் தந்திட்ட

இரத்தக்கறைகள் தோய்ந்திட்ட

 

பாவங்கள் படிந்திருக்கும் தம் முதுகைப்

பார்த்திராமல் பிறர் செயலைக் கண்டிக்க

 

புஷ்ஷூக்கு உரிமையில்லை!

புனித பைபிளிலும் இடமில்லை!

 

பைபிளைத் தாங்கிப் பிடித்து ஓடுகிறேன்!

பரோவா புஷ்ஷின் கழுத்தில் தூக்குக் கயிற்றை பூட்டுகிறேன்!

 

************************************

கூவும் சேவலின் கூக்குரலோடு – தினமும்

கலைகிறது என் அரை உறக்கம்!

 

பொழுது விடிகிறது!

புதுநாள் மலர்கிறது!

 

துடித்திருக்கும் என் இதயத்திற்கு – தினமும்

கனவிலே நீதி கிடைக்கிறது!

 

நீதி தேடும் இதயங்களே!

உறக்கம் உங்களைத் தேடி வராது!

 

உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில்

உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!

 

கவிதை: அருள்தாஸ்