அக்ஸா பள்ளியைச் சுற்றித் தோண்டும் பணியை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் – யுனெஸ்கோ

{mosimage} ஐநாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO), அல்அக்ஸா பள்ளியைச் சுற்றி இஸ்ரேல் செய்துவரும் பள்ளம் தோண்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பிப்ரவரி 6 முதல் ஜெருஸலத்தில் இருக்கும் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத்தலமான அல்அக்ஸா பள்ளியைச் சுற்றி இஸ்ரேலிய அரசு அகழ்வாராய்ச்சி செய்வதாகச் சொல்லி பெரும்பள்ளங்கள் தோண்டி வருவது அனைவரும் அறிந்ததே!

இந்தப் பள்ளம் தோண்டும் திட்டம், அல்அக்ஸா பள்ளியின் கட்டிட அடித்தளத்தை வலுவிழக்கச் செய்யும் சதிச்செயல் என உலகம் முழுவதிலும் இருக்கும் முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆயினும், இந்தக் கண்டனத்தையும் கோரிக்கையையும் கண்டு கொள்ளாத இஸ்ரேலிய அரசு, பெரும் புல்டோசர்களுடன் அகழ்வாய்வுப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கிடையே இவ்வளாகத்தினும் இருந்த பழமைவாய்ந்த மரப்பாலம் ஒன்று கடந்த பிப்ரவரியில் சிதைந்து போனது.

இஸ்ரேல் முன்னின்று நடத்தும் இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று தனது கடும் கண்டனத்தை தற்போது தெரிவித்துள்ள யுனெஸ்கோ அமைப்பு, "இஸ்ரேலின் இம்முயற்சி சரியான திட்டமிடாமல் செய்வது போலத் தோன்றுகிறது. இஸ்ரேல் மனம் போன போக்கில் பள்ளங்களைத் தோண்டி வருவதால் அக்ஸா பள்ளி இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளது. இஸ்ரேல் இப்பணிகளைத் தொடரவிரும்பினால், பன்னாட்டுக் கண்காணிப்புக் குழு ஒன்றின் முன்னிலையில் மட்டுமே தொடரவேண்டும். அதுதான் இஸ்ரேல் செய்ய விரும்புவதாகச் சொல்லும் அகழ்வாய்வுக்கு உதவமுடியும்" என்று கூறியுள்ளது.

1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அக்ஸா பள்ளியைப் புராதன வரலாற்றுச் சின்னமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இப்பள்ளியில் இருந்துதான் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வானுலகப் பயணம் தொடங்கினார்கள் என்பது உலக முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.