முத்திரை பசும்பொன் மட்டுமா உலகில் பொன்? இல்லை இல்லை…..
முகில் கிழக்கும் ஆதவனின் மூலக்கதிர்கள் அனைத்தும் பொன்னே!
வெள்ளி நிலா ஒளியும் பொன்னே! விடியும்வரை
வெள்ளமென கண் சிமிட்டும் தாரகையும் பொன்னே!
வற்றாத ஜீவ நதிகளும் பொன்னே! வரு மழையும் பொன்னே!
இல்லை இல்லை என்று சொல்லாத எல்லா இதயங்களும் பொன்னே!
வள்ளலாய் நின்று வறியோர்க்கு வாரித்தரும் கரங்களும் பொன்னே!
பள்ளமிலா சமுதாயம் பரிமளிக்க செய்பவனும் பொன்னே!
மழலைகளின் கள்ளமிலா சிரிப்பொலியும் பொன்னே!
ஏழைகளின் துள்ளல் பசிக்கு உணவளிக்கும் மனித நேயமும் பொன்னே!
விதவைக்கு வாழ்வளிக்கும் விவேக ஆடவரும் பொன்னே!
உதவிக்கு ஓடிவந்து உற்றதை செய்பவரும் பொன்னே!
மதவெறி கொல்லுகின்ற மக்களும் மாசறு பொன்னே!
இதமாக பேசி இன்னல் களைபவரும் நாட்டின் பொன்னே!
பெண் சிசுவை கொல்லாத பெற்றோரும் உலகில் பொன்னே!
பெண்மை போற்றி பெருமை சேர்த்தலும் பொன்னே!
உவமையாய் திகழ்ந்து உண்மை பேசுகின்ற உத்தமர்கள் நாட்டின் பொன்னே!
உள்ளமெலாம் மகிழ்ந்திடவே கற்பை போற்றும் காரிகையும் பொன்னே!
கர்ம வீரனுக்கு காலமும் பொன்னே! அவன் செய்யும்
கடின உழைப்பும் பொன்னே! கடமை உணர்வும் பொன்னே!
கட்டுப்பாட்டில் உள்ள நல்ல குடும்பமும் களிப்புறு பொன்னே!
கவிஞர்களின் கவிதை சுரக்கும் மணற்கேணி மனமும் பசும் பொன்னே!
இறையோன் நமக்களித்த இஸ்லாமும் பொன்னே! வல்லோன் அவன் படைத்த
இயற்கை அனைத்தும் பொன்னே! இதமான தென்றலும் பொன்னே!
ஆக்கம்: அபுயாசின்