முதல் இடம்

ஊர்க்குருவி மட்டுமா உயரே பறக்கமுடியும்?
உன்னாலும் முடியும் முயன்று பார்!
ஓரிடத்தில் நில்லாதே! உடல் தளராதே!
ஒடும்வரை ஒடு! உயரே பறக்க முயற்சி செய்!

உயரே பறப்பதென்பது உயிரை இழப்பதன்று!
ஒருகணம் நின்று நிதானித்து சிந்தித்துப்பார்!
உயிரென்பது உடலை இயக்குவது!
உயிர் காத்தால்தானே உயரே பறக்கமுடியும்!

உயிர்-மெய் இரண்டையும் பாதுகாத்துக்கொள்!
உன்னிப்பாய்க் கவனி! எதையும் உதாசீனப்படுத்தாதே!
உத்தமர்கள் பலர் சிறகுகளே இல்லாமல்
உயரத்திலே வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?

ஒருகணம் அவர்களை உள்ளத்தில் நினைத்துப்பார்!
ஒவ்வொருவரும் சொன்ன உயரிய கருத்துக்கள்
உள்ளத்தால் அசைபோட்டு உன் கருத்தினில் ஏற்றினால்
உன்னை, உன்னத நிலைக்கு உயர்த்தும் கவனி!

உள்ளார்ந்த செயல்திறனால் எதுவும் முடியும் என்பதை,
உணர்ந்துகொள்! ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காதே!
உயர்வதற்குண்டான இலக்கை அடைய
ஓயாமல் சிந்தி! ஒருநாள் வழிதெரியும்!

வாழ்க்கை என்பது தொடர் ஓட்டம்-அது நிற்பதற்குள்,

நினைத்ததை சாதிக்க நீ நிய்யத்துச் செய்துகொள்!
உறுதியான நிய்யத் செயலாக வெளிவந்தால்
உனக்குக் கிடைக்கும் முதல் இடம்!

– ஆக்கம் : எம். அப்துல் ரஹீம், எம்.ஏ, கோவை