சாயல்கள் (கவிதை)

ன் அன்பு மகளே!

நீ
முகத்தில் அம்மாவின் சாயல்
அகத்தில் அப்பா

உடல் வடிவில் அம்மா
உள வியலில் அப்பா

உன்
விழிகள் அம்மாவின் சாயல்
பார்வையோ அப்பாவின் கோணம்
 
பெண்மையிலும் மென்மையிலும் அம்மா
உண்மையிலும் தன்மையிலும் அப்பா
 
நடையுடை பாவனையில் அம்மா
நடைமுறை தோரணையில் அப்பா

அன்பிலும் பண்பிலும் அம்மா
வசிப்பிலும் வாசிப்பிலும் அப்பா

உன்னில்தான் எத்துணை சாயல்கள்!

இறைமறை நீ ஓத
வசனங்களை உன் வாயுரைக்க
உன்
இனிய குரலில்
இசையின் சாயல்

தொழுகைக் கம்பளத்தில்
தளர்க் குப்பாயமணிந்து
உனைப்
படைத்தவன் முன்பாக
பணிவாகக் கைகட்டியது
நன்றியின் சாயல்

அடுத்தவர் வலியுணர்ந்து
ஆறுதல் சொல்வதில் – நீ
அன்பின் சாயல்;
படித்ததைப் பிறர்க்கு
பக்குவமாய்ச் சொல்வதில்-நீ
பண்பின் சாயல்

மாற்றான் பார்வையைப்
மட்டுப்படுத்தவும்
கயவர் நோக்கத்தைக்
கட்டுப்படுத்தவும்
ஹிஜாபுக்குள் குளிர் நிலவாய்
நீ
அழகின் சாயல்

மெத்தென்ற நடையிலும்
கத்தாத குரலிலும்
கண்ணியத்தின் சாயல்

வாழ்வியலில் நீ
வான்மறை சொல்லும்
மாதுவின் சாயல்

வாதிப்பதில் நீ
வாக்குகள் மாறாத
நீதியின் சாயல்

ஈடேற்றம் வேண்டி
இறைஞ்சிடும் மகளே
இரவிலும் பகலிலும்
இயல்பாய் வாய்க்கட்டும்
இஸ்லாத்தின்
ஒழுங்கியல் சாயல்

உலக மகளிர்க்கு நீ
உதாரணமாயிரு
உண்மை மார்க்கத்தின்
எல்லா சாயல்களும்
இருக்கட்டும் உன்னில்

ஓரிறைக் கொள்கையில்
தியாகங்கள் செய்த
நபித் தோழியர் சாயலில்
தொடரட்டும் பயணம்
 
மகளிர்க்கு மார்க்கத்தை
மறவாமல் எத்தி வை
இஸ்லாத்தின் சாயலில்
இலங்கட்டும் இவ்வையகம்!

– சபீர்

முதல் பகுதி: (மகளுக்கொரு மனு – I)
http://www.satyamargam.com/articles/arts/lyrics/1790-1790.html