பொய்த்தது புத்தம்! (கவிதை)

த்தம் குடிக்கிறது
புத்தம்;
மரணம் விதிக்கிறது
சரணம்;
கச்சாமியோ
கைவிடப்பட்டது!

‘ஆசையே அழிவிற்குக் காரணம்’
தாரக மந்திரம்
தலைகீழாய் மாறிப்போய்
அழிவையே ஆசைப்படுகின்றனர்
புத்த பிட்சுகள்

கலிங்கத்து மண்ணின்
போர்முனைக் காட்சியால்
அசோகன்
பெளத்தம் தழுவினான்;
பர்மிய பிட்சுகளோ
ரோமங்களை மழித்து
கோரைப்பற்கள் வளர்த்து
குதறிவிட்டனர் புத்தரை

ஆயிரமாயிரம்
ஆக்டோபஸ் கரங்களால்
அபலைகளை அழிக்கின்றனர்

வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு
வாழ்விடங்கள் தகர்க்கப்பட்டு
கப்பல் கப்பலாய்
கடலில் வீசப்படுகின்றனர்
கையாலாகாத அப்பாவிகள்

கப்பலேறியது
முஸ்லிம்கள் மட்டுமல்ல
மனித உரிமை பேசுவோர்
மானமும்தான்

தங்கள் தேசத்தில்
தங்க அனுமதியில்லை
அண்டை நாடுகளோ
அண்ட விடவில்லை
உப்புநீர்க் கடலில்
உடல்நீர்க் காய
உயிர்கள்
ஊசாலாடுகின்றன

மனிதன் உண்ணும்
மாமிசத்திற்காக
மாக்களைக் கொல்வதை
பிராணிவதைத் தடுப்பும்
பாரிய மதவாத அமைப்பும்
எதிர்க்க…

மனித வதையையோ
மக்களைக் கொல்வதையோ
ஏனென்று கேட்க நாதியில்லை
என்று விடியும் எனும் சேதியில்லை

காசுக்குத்
‘தொழில்’ செய்யும் ஊடகங்களோ
பேசுபொருளைப்பற்றி
ஒரு
வரிகூட பேசுவதில்லை

கற்காலத்தில்கூட
கண்டிராத கொடுமையாய்
தற்காலத்தில்
கொத்துக் கொத்தாய்
கொலைகள்

கடலலைகள்
உடல்களை மட்டும்
கரை ஒதுக்குமுன்
உயிரோடு
கரை சேர்க்குமா காலம்?

– சபீர்