தூய பாரதம் துவங்கியது தில்லியில்!

தூய பாரதம்
துவங்கியது தில்லியில்!

இது
பதிலடி நேரம்

இலங்கையில்
கழுத்தில் தொங்கும்
ராஜபக்க்ஷே தலை
கயிற்றிலும் தொங்கலாம்.

மோடி அலையை
தில்லியில் அடித்த
சுனாமி
சுருட்டிக் கொண்டு போனது

மீனவர்களுக்கு
மரண தண்டனை என
இலங்கை வில்லன்
முழங்க
விட்டுவிடு என
குஜராத் கொடுங்கோலன் மிரட்ட
வழக்கே இல்லாமல் விடுவிக்கப்பட்ட
ஜனரஞ்சக நாடகத்திற்குத்
திரை.

வாய்ப்பந்தல் ஒரு கலை
இன அழிப்போ படுகொலை
பந்தல் சிதைந்து
பதவி தொலைந்து
இருவருக்கும் இது
இறங்கு நிலை

அறுதிப் பெரும்பான்மை
உறுதி குலைகிறது
ஆணவம் அழிவது
ஆவணம் ஆகிறது

கெஜ்ரிவால் துடைப்பம்
வஜ்ர வாளென
வெட்டிச் சாய்த்தது
அரசியல் ஆக்டோபஸ்களை

துடைப்பத்தை
ஈர்க்குச்சிகள் என
எள்ளி நகையாடிய
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
உட்கார்ந்ததும்
எஃகுக்குச்சிகள் என உணர்த்தியது
பிட்டத்தில் உண்டான புண்

தலைநகரை முற்றுகையிட்ட
நரைதலை வாதிகளுக்கு
நெற்றியில் துவங்கி
உச்சிவழியாக
பிடறிவரை சாத்தியது
பட்டை நாமம்

தாய்மதம் திருப்பும்
தொத்து வியாதி;
சமஸ்கிருத மேம்பாட்டு
சொறி சிரங்கு;
தேசத்தைத் தாக்கவிருந்த
கீதைப் புற்றுநோய்;
புது வைரஸ் வியாதியாய்
பொது சிவில் சட்டம்
என
சீக்குப் பிடிக்கவிருந்த பாரதத்திற்கு
தற்காலிகத் தடுப்பூசி தில்லி

இந்துப் பெண்ணொருவள்
நான்கு பிள்ளைகள் பெறணுமாம்

எதற்குத் தெரியுமா?

நாட்டு மக்களுக்கு
நலத்திட்டங்கள் பலவற்றை
பிரசவம் பார்ப்பதற்காம்

பாரதத் தாய்க்கு
பல முறை கருக்கலைப்பு
செய்தாயிற்று

இனி கரு தாங்குமா?
கருவே உருவாகவில்லை
பிரசவம் எப்படி நடக்கும்?

ராமருக்குக் கோயில்போல்
ராமருக்கொரு ராஜ்யம் வேண்டி
கூத்தாடி கூத்தாடி
இந்த ஆண்டிகள்
போட்டுடைந்தது தில்லித் தோண்டி

பிரதமர் அறிவித்த
பிரமாதத் திட்டம்
தூய்மை இந்தியாவை
துவக்கி விட்டது துடைப்பம்
அரசியல் அசிங்கங்களை அகற்றி

இனி
இந்த
தில்லிப் பாடசாலையில்
பாரத நாட்டினர்
பயிற்றுவிக்கப்பட
எல்லா இடங்களிலுமிருந்தும்
அப்புறப் படுத்தப்படுவர்
ஆன்மீகத்தையும்
அரசாங்கத்தையும் குழப்பிக்கொண்ட
அரைகுறை
அரசியல் கோமாளிகள்!

கவிதை:  சபீர்