நகரம்

திகாலை ஐந்தரைக்கு
அலாரம் மட்டுமே
அலறி விழிக்கும்
ஆதவன்கூட ஆறு மணிக்குத்தான்

வாகன நெரிசல்
நகரத்தின் வெளிக்கட்டமைப்பு
மனங்களில் விரிசல்
நகரவாசிகளின் உட்கட்டமைப்பு

வழக்கமான வழித்தடத்தில்கூட
பழக்கமான முகம்
பார்க்க வாய்ப்பதில்லை

மந்தவாயு விளக்குகள்
அசமந்தமாக ஒளிரும்
பின்னிரவில் மட்டுமே
விடியவிடிய விழித்திருந்து
கண்ணயரும் நகரம்

நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி
தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி
விருத்தியாகும் நகரத்தில்
அதிகாலையைத் துரிதப்படுத்தியும்
அந்திமாலையைத் தூசுப்படுத்தியும்
வர்ணங்களை உதிர்த்த
வெற்று வானவில்லாய்
வெளுத்துக் கிடக்கிறது
வாழ்க்கை

விடியலிலும் – பொழுது
வீழ்தலிலும்
சேவலின் கூவலோ
சிட்டுக்குருவிச் சிணுங்களோ
கேட்கக் கிடைப்பதில்லை

வணிகத் தேவைகளில்
பகற் பொழுதுகளும்
மனிதத் தேவைகளில்
இராப் போதுகளும்
நகர நாட்களை
நகர வைக்கின்றன

வெளிச்சமுலாம் பூசி
விற்பனையானப் பொருட்கள்
மறுநாளே மங்கிவிடுகின்றன

அசாதாரணக் கொழுப்பும்
அரைவேக்காட்டு மாமிசமும்
மனிதர்களை
அகலவாட்டில் வளர்க்கின்றன

அலைபேசி வாயிலாக
யுவதிகள்
ஆழ்த்துளைக் கிணறு தோண்டி
அதில் வீழ்ந்து மடிகின்றனர்

விலையுயர்ந்த வாகனத்துடன்
தலைநிமிர்ந்த வாழ்க்கை
சீட்டுக்கட்டுக் கோபுரமாய்ச்
சிலிர்த்து நிற்க
ஒரு சீட்டைச் சீண்டினாலே
சிதைந்து போகிறது மாயை

வாழ்ந்து முடிக்கையில்
நகர வாசிகளிடம்
துண்டிக்கப்பட்டக் கனவுகளே
எஞ்சி நிற்கின்றன

சரீர சுகம் சார்ந்தே
நாகரிகம் புதுப்பிக்கப்பட
பருவக் கோளாறுகள்
பண்பாட்டைப் பதம்பார்க்க
காமத்துப்பால் கலாட்டாக்களால்
கலாச்சார மாற்றம்

தேவைக்கும் – நியாயமான
ஆசைக்கும் அல்லாது
இச்சைக்கும் – இழிவான
இம்சைக்கும்  இணங்கி
இயங்குகிறது நகரம்

இயந்திரங்களின்
தொழில்நுட்பக் கோளாறுகள்
மனிதர்களின்
இதயங்களில் அழுத்துகின்றன

நகரத்தின் நடுவே
நேர்த்தியாக உருவாக்கப்பட்ட
கிராமிய அடையாளங்களுக்காக
அலைமோதுகிறது கூட்டம்

மேலாடை கீழாடை
அளவு குறைத்து
மீசை முதல் ஆசை வரை
பாலினங்களின்
பண்பை மாற்றி
நகரம் தன் நான்கெழுத்தில்
தடுமாறி
தடம் மாறி – இனி
நரகம் என்றாகிடுமோ?

சபீர்