098. தெளிவான ஆதாரம் !

Share this:

பி யொருவர் வருவார்- நன்
நெறி அவரும் தருவா ரென
நம்பிக்கைக் கொண்டதுபோல்
நடித்துக் கொண்டிருந்தனர்…

வேதம் வரப் பெற்றோரும் – பல
விக்ரக வழிபாட்டினரும்!

நம்பிய நபியையும் நன் மறைதன்னையும்
கண்டதும் மறுத்தனர்; நன்மையை எதிர்த்தனர்
சாட்சியங்கள் காட்டச்சொல்லி
சந்தேகம் எழுப்பினர்;
இம்மையில் லயித்தனர் !

தெளிவான சான்றாக
நபி வந்த பின்னரும்
வழிகாட்டும் நெறியாக
மறை தந்த பின்னரும்
வேதம் வாய்க்கப் பெற்றோர்
விட்டுப் பிரியவில்லை -அவர்கள்
கட்டுக் குலையவில்லை!

ஓரிறையை அன்றி
வேறொன்றை வணங்காதீர்
நேர்வழியை விட்டு
கணம்கூட விலகாதீர்

என்ற வழிகாட்டலும்…

தொழுகையைக் கொண்டே
துதித்திட வேண்டியும்
ஏழைக்கான நிதியைக்
கொடுத்திடத் தூண்டியும் –

கட்டளைகள் கொண்டதும்
சட்டங்கள் சொன்னதும் அன்றி
பாரமாய் ஏதுமில்லை
படைத்தவனின் மாமறையில் !

எத்துணை ஆதாரங்கள்
எடுத்துரைத்த பின்னரும்
பித்தரைப் போலன்றோ
பிதற்றித் திரிந்தனர்…

சில வேதம் பெற்றோரும்
சிலைவணக்கம் புரிந்தோரும்
நன் நபியை மறுதலித்து
நரக நெருப்பினுள்
நிலைத்திருப்பர்- இவர்களே
படைப்பினங்களிலேயே
படுமோசமானோர் !

நம்பிக்கை கொண்டு
நல்லறங்கள் செய்தோரே
படைப்பினங்களிலேயே
மிகச் சிறந்தோ ராவார் !

இத்தகைய புண்ணியர்தம்
இருப்பிடம் இன்பம்தரும்
நிரந்தர சொர்க்கமாகும்;
சலசலக்கும் நதியோடு
சுவனமது சுகமாகும் !

படைத்தவனைப் பொருந்தியதால்
படைத்தவனும் திருப்தியுற்று
முடிவிலா அவ்வாழ்வை
முழு அருளாய்த் தந்திடுவான்!

oOo

(மூலம்: அல் குர்ஆன் /சூரா: அல் பய்யினா)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.