அழுக்கு எண்ணங்கள் புகுந்து
சறுக்கி விடாமலும்
அன்பு உள்ளத்தில் நலிந்து
வெறுப்பு மிகாமலும்
விளக்கு ஒளிரும் சுடரென
வெளிச்ச மயமாக்கும்
ஆன்ம அறிவால் உள்ளம்
விரித்தளித்தோம், அன்றோ?
கனத்தச் சுமையாய் முதுகை
முறித்த எடையை
இறக்கி வைத்துமக்கு
இலக்கை இலேசாக்கினோம்!
இழித்து உரைத்த நாவைப்
புரட்டிப் போட்டு
நிலைத்தப் புகழை உமக்கு
இகத்தில் உயர்த்தினோம்!
இருட்டுச் சூழும் கணங்கள்
விலகிப் போனதும்
வெளிச்சம் நிலவும், அதுபோல்
துன்பத்துள் இன்பம் !
வருத்தும் துன்பம் கண்டு
அயர்ச்சி வேண்டாம்
இருக்கும் இன்பம் அதற்குள்
தொடர்ச்சி உண்டு !
துரத்தும் துன்பம் சற்றே
நிறுத்தும் போதும்
சிரத்தைத் தரையில் வைப்பீர்
வருத்தம் நீங்கிப் போகும்!
oOo
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 94 அஷ்ஷர்ஹு)
-Sabeer Ahmed abuShahruk