பிஞ்சுத் தூரிகை!

அடுத்த வாரமாவது
சுவருக்குச்
சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.

வட்டங்களும் கோடுகளுமாய்
மனிதர்கள்
சதுரங்களும் செவ்வகங்களுமாய்
கொடிகள்
ஏனல் கோணலாய் ஊர்வலம்

இரண்டு சக்கர
போலீஸ் காரும்
காரைவிட
பெருத்த விளக்குகளும்

விதவிதமான பந்துகளும்
விரட்டும் ஜந்துக்களும்
ஆங்கில எழுத்துகளும்
அதன் தலைகளில் கொடிகளும்

டி ஃபார் டாக்கும்
எஃப் ஃபார் ஃபிஷ்ஷும்
குச்சிக் குச்சி கைகளோடு
குத்தி நிற்கும் சடைகளோடு
வகுப்புத் தோழிகளும்

உடலைவிடப் பெருத்த
தும்பிக்கையோடு
கால்களைவிடப் பெரிய
வாலுடன்
யானையும்

மூவர்ண நிறத்தில்
முக்கோண வீடும்
வாசலைவிடப் பெரிய
சன்னலும்
பாதை யோரப் பூக்களும்

மேகப் பொதிகளுக்குள்
மஞ்சள் சூரியனும்
புகை கக்கும் விமானமும்

நதியும்
நான்கிதழ்ப் பூச்செடிகளும்
ரெட்டைத் தென்னையும்
கூட்டமான பறவைகளும்
ஆங்கிலத்தில் தன் பெயரு மென

அழகா யிருந்தது சுவர்!

கற்றுக்கொள்ள கிறுக்கியதைவிட
வெற்றுச் சுவர்
அழகல்ல
என உணர்ந்து

சுவருக்குச்
சாயம் பூசச் சொன்ன
மனைவிக்கு,
“சரி” எனப்
பொய் சொன்னேன்
… தடவையாக !


 

– சபீர்