வயோதிக வலிகள்!

லிகளோடு வாழப் பழகுவதே

வயோதிகத்தை

வரவேற்கும் வித்தை!

வலிகளில் – சில

மூட்டில் வருபவை – பிற

வீட்டில் தருபவை!

 

நிவாரணங்களைப் பற்றிய

உதாரணங்களின் பட்டியலில்

வயோதிகத்தின் வலிகளுக்கு

நிவர்த்தி பற்றிய குறிப்பில்லை!

 

மூட்டின் தேய்மானங்களும்

வீட்டில் அவமானங்களும்

கவனிப்பாரற்ற தருணங்களில்

கடுமையாய் வலிக்கும்!

 

களிம்பு பூசியோ

கனிந்து பேசியோ

ஆசுவாசப்படுத்தினாலும்

வலி நீங்க – நிரந்தர

வழி இல்லை!

 

எனினும்,

வலிநீக்கும் குளிகைகளிலும்

வாஞ்சையான விசாரிப்புகளிலும்

தற்காலிகமாக

விழிநீர்க்கும் வயோதிகம்!

 

தேங்காய்ப் பாலின்

மூன்றாம் பால்கஞ்சி

தெவிட்டாது முதுமைக்கு!

 

எனினும்,

காப்பகங்களில் விடுவதும்

கருங்குழியில் இடுவதும்

ஒன்றோ வேறோ?

 

நினைவு தப்புவதற்கு முன்

அன்பையும் அக்கறையையும்

நெஞ்சு நெகிழ

அனுபவிக்கத் தருவதால்

வாழ்க்கையை வென்றதாய்

திருப்தியுறும் வயோதிகம்!

 

இந்த

அன்பைவிட விலைகுறைவாய்

ஏதுமுண்டோ உலகில்

இவர்களுக்குத் தர?

 

– சபீர்