அமாவாசை நிலாக்கள் – 3

“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது —அல் குர்ஆன்(81:8-9).

அல்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்…

அரபு தேசங்களில் பெரும்பாலான  மருத்துவ மனைகள் மற்றும் மருந்துக் கடைகள் ‘அல்ஷிஃபா’ என்ற பெயரில்தான் இருக்கும். கெய்ரோ, பக்தாத், திமிஷ்க் (டமாஸ்கஸ்) போன்ற பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த   பட்டணங்களிலிருந்து ரியாத், தோஹா, துபை போன்ற நவீன வளம் கொழிக்கும் பளபளப்பான பளிங்கு நகரங்கள் வரை அல்ஷிஃபா எனும் பெயரில் ஒரு மருத்துவ மனையோ, மருந்தகமோ இல்லாத தெருக்களைப் பார்க்க இயலாது. இந்தியாவின் சில நகரங்களில்கூட இப்பெயரில் தற்போது பல மருத்துவ மனைகள் இயங்குகின்றன. அல்ஷிஃபா என்ற அரபிப் பதத்திற்கு, “முற்றிலும் குணமடைதல்” என்ற பொருத்தமான, அருமையான பொருள் இருப்பது தான் அதற்கான காரணம்!!

இஸ்லாத்தின் மீளெழுச்சியின் ஆரம்ப காலத்தில் ஒரு அரபுப் பெண்மணி, பெண்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்ததோடு மருத்துவத் தொழிலும் செய்து சிறப்படைந்தார் என்பதும் அதனால் ‘அல்ஷிஃபா’ எனும் காரணப் பெயரால் அழைக்கப்பட்டார் என்பதும் முஸ்லிம்கள் பலருக்கே தெரியாது என்பதே உண்மை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களுள் ஒருவரான  அல்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் என்பவர்தான் இஸ்லாமிய மீளெழுச்சி வரலாற்றின் முதல் ஆசிரியை என்ற பெரும் அந்தஸ்த்தைப் பெற்றவர். அதுவும் இறைத்தூதர் முஹம்மது நபியின் (ஸல்)  காலத்திலேயே. அவர், கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில்  அரசாங்கப் பதவியில் அமர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்ட முதல்  இஸ்லாமியப் பெண்மணியும்கூட.

அதிகம் படிப்பறிவில்லாத, பெண்கல்வி  என்பதை  நினைத்தே பார்க்க இயலாத, பெண் சிசுக்களான  பிஞ்சு மழலைகள்  பிறந்து சில மணி நேரத்திலேயே உயிருடன் புதைக்கப்படும் வழக்கம் பரவிக்கிடந்த  இருண்ட காலத்தில், மக்காவில் குறைஷிக் குலத்தின் ‘அதவி’ கோத்திரத்தில் பிறந்த அல்ஷிஃபாவின் இயற்பெயர் லைலா பின்த் அப்துல்லாஹ் பின் அப்துஷ் ஷம்ஸ் என்பதாக இருந்தது.  லைலா,   அக்காலத்தில் நிலவிய மருத்துவ முறைகளைக் கொண்டு தம் மக்களுக்குச்  சிகிச்சை செய்து வந்ததால் ‘குணமாக்குபவர்’ என்ற பொருள்படும் ‘அல்ஷிஃபா’ என்ற காரணப் பெயரால் கண்ணியப் படுத்தப்பட்டார். அந்தக் காலத்தில் பெண்களின் சமூக அந்தஸ்து எவ்வாறிருந்தது  என்பதை,  இஸ்லாம் வருவதற்கு முன் அரேபியப் பிரதேசங்களில் பெண்களின் வாழ்க்கையும் அவர்களுக்கு இருந்த அற்ப உரிமைகளும் எவ்வாறிருந்தன என்பதை ஆராய்ந்து, அதன்  பின்னணியில் பார்த்தால் மட்டுமே விளங்கிக் கொள்ளமுடியும்.

இஸ்லாமிய மீளெழுச்சிக்கு முந்தைய அன்றைய அரேபியத் தீபகற்பத்தில் மக்கள் வேறுபட்டக் கலாச்சாரக் கூறுகளையும் வாழ்க்கை முறைகளையும் கொண்ட – நாடோடிக் குழுக்கள் (Bedouins) உட்பட – பல குலங்களாக வாழ்ந்தார்கள். அக் குலங்களின்  வாழ்க்கை முறை(Life Style),  அதிகாரத்தின் அடுக்குமுறை (Structure), பழக்க வழக்கங்கள் (Customs)  ஆகியன  பெண்களின் உரிமை சார்ந்த விஷயங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லாதவை என்பதாகவே ஒதுக்கி வைத்திருந்தன.

குலம் என்பது அன்றைய  சமூகத்தின் முக்கியமான அலகு. வாரிசுகள், உறவுகள் அடங்கிய பல கோத்திரங்களைக் கொண்டிருந்தது ஒரு குலம். ஒரு கோத்திரம் பல குடும்பங்களைக் (Hayy) கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் தனக்கென ஒரு  கூடாரத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்தது. இரத்த பந்தம் கொண்டு இணைக்கப்பட்ட இந்தக் குலங்கள் ஒரு தலைவரின் (Sheikh) ஆணைக்குட்பட்டு இயங்கியது. பெரும்பாலும் தலைவர் எனப்படுவோர் சுவாதீனமுள்ள முக்கியமான குடும்பங்களிலிருந்து மூத்தோர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அதீத ஒற்றுமையுடனும் (“asabiyah”) நிபந்தனையற்ற விசுவாசத்துடனும் இருந்தனர். “ஒருவன் தன் மனைவியைத் துறக்கவேண்டும் என்று ஆணையிடுவதற்கு அவனின் கோத்திரத்திற்கு அதிகாரமிருந்தது”1.  அப்படி ஆணையிடப்பட்டவன் மறுபேச்சின்றி மனைவியைத் தள்ளி வைத்தான்.

இப்படியாகத் தமக்குள் அதிசயிக்கத்தக்க ஒற்றுமையுடன் இருந்த குலங்கள்,  அதைப் போன்ற இன்னொரு குலத்தை எப்பொழுதும்  எதிரியாகக் கருதின. மக்களையும் அவர்களின் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் எதுவும் அன்று மையப்படுத்தப் படாததால் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மனிதனும் தனது குலத்தைச் சார்ந்தே வாழ்ந்தாக வேண்டியது கட்டாயமாக இருந்தது.

இக் குலங்களுக்கிடையில் சில்லறை விஷயங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக வருடம் முழுதும் ஓயாமல் சண்டைகளும் சிறு போர்களும் நடந்த வண்ணம்  இருந்தன. இரத்தமும் கொலையும் சாதாரண நிகழ்வுகளாயின. சட்டமும் நீதியும்  தங்கள் செல்வாக்கையும்  வலிமையையும் பொருத்து  ஒவ்வொரு குலத்திற்கும் மாறுபட்டன. குலங்களுக்கிடையேயான போரில் வெற்றி பெறுவது, அக்குலம் நிலைத்து நிற்பதற்கும் வலுவிழந்த குலத்தை அடிமைப் படுத்துவதற்கும் அவசியமாயிற்று. அதனால் போரை முன்னெடுத்து நடத்தும் வீரர்கள் சமூகத்தில் மதிக்கப் பட்டனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் போர்க்குணம் கொண்ட வீரர்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.

போர்க்களங்களில் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் மக்கா போன்ற பெருநகரங்களின் நடுவீதிகளில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். அவ்வாறு விற்கப்பட்ட அடிமைகள் வாழ்க்கை முழுதும் எல்லாச் சுதந்திரத்தையும் இழந்து, எஜமானர்களைக் கடவுளாகக் கொண்டு அல்லது பிறிதொருவருக்கு விற்கப்படும் வரை மீதமுள்ள நாட்களைக் கழித்தாக வேண்டும். அந்த அடிமைப் பெண்கள் பெற்றெடுக்கும் குழநதைகள் எஜமானருக்கே சொந்தம்.

அதனால் பெற்றோர்கள் ஆண் மக்களையே அதிகம் விரும்பினார்கள். பெண் குழந்தைகள் பயனற்றச் சுமையாகக் கருதப்பட்டன. போரில் தோற்றவர்களின்  பெண்குழந்தைகளை, வென்றவர்கள் கைதிகளாகக் கவர்ந்து சென்றார்கள். இது, தோற்ற  குலத்திற்குப் பெருத்த அவமானமாகவும் கண்ணியக் குறைவாகவும் இருந்தது. இப்படி ஏழ்மைக்கும் அவமானத்திற்கும் பயந்து, தான் பெற்ற பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துக்  கொன்றார்கள். குழந்தை பிறப்பதற்கு முன்னமேயே குழிகள் வெட்டப்பட்டுத் தயாராக இருக்கும்2. பெண் குழந்தையாயின்  ஏற்கனவே வெட்டப்பட்ட குழிகளில் அப்படியே உயிருடன் புதைத்துக் கொல்லப் பட்டார்கள். “பெண் குழந்தைகள் அனுப்பப்பட்டது கருணை என்றால் அவர்களைப் புதைப்பது அதைவிட உன்னதமான செயல்“ என்ற பழமொழி அந்நாட்களில் புழக்கத்தில் இருந்தது3.  

ரோமர்களிடமிருந்து தொற்றிக் கொண்ட,  அரேபியாவில் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் மூடத்தனம் இஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது புதையுண்டு போனது. ஆனால், இந்தக் கொடுமை உலகளவில் சமீப காலம் வரை பல கலாச்சாரங்களில் விரவிக் கிடந்திருக்கிறது. “பழைய கிரேக்கத்தில் பலவீனமானவர்களையும், தேவையற்ற குழந்தைகளையும் அழித்தார்கள். சீனர்கள் ஆண் குழந்தைகளை வைத்துக் கொண்டு  பெண் குழந்தைகள் பிழைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். ஜப்பானியர்கள் வயல் வெளிகளிலும், பிரேசில் நாட்டவர் காடுகளிலும் பெண் குழந்தைகளைத் “தொலைத்தனர்”. இந்தியாவில் இன்றும் சில இடங்களில் “கள்ளிப்பால்” கலாச்சாரம் காணக் கிடைக்கிறது. 1860 வரை இலண்டன் மாநகரில் செத்த குழந்தைகளின் பிணங்கள் சாலையோரங்களிலும் சாக்கடைகளிலும் காணப்படுவது சாதாரண நிகழ்வாயிருந்தது. ஆப்பிரிக்காவில் தாய் பிரசவ சமயத்தில் அல்லது அதற்குப்பின் இறந்துவிட்டால் தாயோடு சேர்த்துக் குழந்தையையும் புதைக்கும் பழக்கம் இருந்தது4.

சாதாரணப் பெண்கள் மனிதப் பிறவிகளாகவே மதிக்கப்படாத பண்டைய  அரேபியாவில் இஸ்லாத்தின் மீளெழுச்சி, பெண்களின் வாழ்க்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை வரலாற்றுப் பேராசிரியர் வில்லியம் வாட்5 இப்படி எழுதுகிறார்: “இஸ்லாம் இப்பொழுதும், பல காரணங்களால், ஆண்களுக்கான மதமாகவே இருக்கிறது என்பதில் உண்மை இருந்தாலும் முஹம்மது, பெண்களின் நலனை மேம்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள்  ஆரம்ப காலத்திலிருந்தே சாட்சிகளாக இருக்கின்றன. இஸ்லாமிய மீளெழுச்சியின் ஆரம்ப காலகட்டங்களில் பெண்களின் நிலைமை பயங்கரமானதாக இருந்தது. சொத்துரிமை இல்லை. தந்தையின் மறைவுக்குப்பின் எல்லாச் சொத்துகளும் ஆண் மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது. இங்குதான் முஹம்மது பெரும் முன்னேற்றத்தை உண்டாக்கினார். சொத்து வாங்கும் உரிமை, பாரம்பரியச் சொத்தில் பங்கு, கல்வி, விவாகரத்து செய்யும் உரிமை முதலியவற்றைப் பெண்களுக்கு வழங்கி, பெண்களின் வாழ்வைப் பாதுகாப்பானதாகவும் கண்ணியமானதாகவும் ஆக்கினார். முஹம்மத் பெண்ணுரிமைக்குச் சாட்சியம் வகித்த ஆளுமைகளுள் ஒருவராகவே வரலாற்றின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.“

இஸ்லாத்தின் மீளெழுச்சி, குலப்பெருமையை முற்றிலுமாக அழித்தொழித்தது. குலத்தாலோ, பிறப்பாலோ உயர்வு-தாழ்வில்லை என்று அறைகூவல் விடுத்த இஸ்லாம் முற்றிலும்  தனி மனித ஒழுக்கம் சார்ந்த வியூகத்தை முன்வைக்கிறது. எக்குலத்தில் பட்டவரும் சமமே என்ற ஒப்பற்ற சமத்துவக் கொள்கையைப் பிரதானப்படுத்துகிறது. பயங்கரமான எதிர்ப்புகளிடையே ஓர் உன்னத சமுதாயத்தைச் சிறிது சிறிதாக உருவாக்கியதில் பெண்களுக்கிழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்சங் கொஞ்சமாக மறையத் தொடங்கின.

oOo

இந்தக் காலகட்டத்தில்தான் இறைத் தூதரின் ஓரிறைக் கொள்கையால் கவரப்பட்ட அல்ஷிஃபா, ஹிஜ்ரத்துக்கு முன்னமேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கா முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி, உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டபோது, தங்கள் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி  மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்தார்கள்.  அவர்களுடன் அல்ஷிஃபாவும் இணைந்து கொண்டு மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து, அங்குத் தன் மருத்துவக் சிகிச்சையை  ஆரம்பித்தார்.

சமூகத்தில் கண்ணியமும் மரியாதையும் கிடைக்கப் பெற்ற பெண்மணி ஆனார் அல்ஷிஃபா (ரலி). முஹம்மது (ஸல்)  அவர்களின் மனைவியர்களுள் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)க்கு ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து, சரும வியாதிக்கான சிகிச்சை முறையையும் கற்றுக் கொடுக்கும்படி முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அங்ஙனமே பயிற்சியும் தந்தார். பெண் கல்விக்குப் பெருமானார் கொடுத்த முக்கியத்துவமும் உற்சாகமும் இந் நிகழ்வில் பொதிந்திருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றின் முதன் முதலில் கல்வியும் மருத்துவமும் கற்பித்தவர்களுள் ஒருவர் என்ற பெருமையை ஒரு பெண்மணிக்கு வழங்கி கௌரவித்தது இஸ்லாம்.

மதீனாவில் சமுக மாற்றம் நடைபெற்று இஸ்லாமிய அரசு நிலைபெற்றவுடன் கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு நாட்டில் நடைபெறும் வர்த்தகத்தை மேற்பார்வை இடவும்,  வர்த்தகம் மேம்பட ஆலோசனைகள் வழங்கவும் தேவை ஏற்பட்டபோது, அல்ஷிஃபா பின்த் அப்துல்லா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமரவைக்கப்பட்டார். இஸ்லாமிய விழுமியங்கள் வர்த்தகத்தில் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்கவும், எடைகுறைத்தல், ஏமாற்றுதல், பதுக்கல், சுரண்டல் போன்ற, இஸ்லாம் தடைசெய்த வணிக மோசடிகளைத் தடைசெய்து நடைமுறைப் படுத்தலுமே அவருடைய முதன்மைப் பணியாக இருந்தன. வணிகர்கள் வியாபாரச் சட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை அல்ஷிஃபாவிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்பது கலீஃபாவின் கட்டளையாயிருந்தது. அல்ஷிஃபாவின் அறிவுக் கூர்மையும் இஸ்லாமியச் சட்டங்களில் அவருக்கு இருந்த தெளிவும் அவரை வெற்றிகரமான நிர்வாகி ஆக்கியிருந்தன. அல்ஷிஃபா தமக்கு ஏற்படும் ஐயங்களைக் கலீஃபாவிடமோ கலீஃபாவால் ஏற்படுத்தப்பட்ட ஆலோசனைக் குழுவிடமோ முறையிடுவார்.

அல்ஷிஃபாவிற்குப் பின் மக்காவிலும் அத்தைகைய பதவியில் இன்னுமொரு பெண் அதிகாரி சம்ரா பின்த் நுஹைக் அமர்த்தப்பட்டார். இதிலிருந்து அன்றைய காலகட்டத்தில் வர்த்தகத்தில் சாதாரணப் பெண்கள் மிகுந்த அளவில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. அதனால் தான் பெண் அதிகாரிகள் அன்றைய காலகட்டத்தில்  வெற்றிகரமாக வலம் வந்திருக்கிறார்கள்.

நிலாக்கள் தோன்றும், இன்ஷா அல்லாஹ்.


1. Philip Hitti, History of the Arabs.
2. W. Robertson Smith, Kinship & Marriage in Early Arabia.
3. R.A. Nicholson, A Literary History of The Arabs.
4.(Glen Hausfater, et al, ed. Infanticide. New York, Aldine Publishing Company)
5. William Montgomery Watt