அமாவாசை நிலாக்கள் – 5

Share this:

தாருல் ஹிக்மா HOUSE OF WISDOM – 2

மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற ஆரம்ப நாட்களிலேயே தொழுகைக்கான முதல் பள்ளிவாயில் கட்டப்பட்டது. இஸ்லாமிய மீளெழுச்சியின் வரலாற்றுத் துவக்க அத்தியாயங்கள் பல இந்தப் பள்ளியிலிருந்துதான் எழுதப்பட்டன.

மதீனா நகரின் இப்பள்ளி, தொழுகைக்கான இடமாக மட்டுமின்றி அறிவு பயிலும் கூடமாக, நீதி அமைச்சகமாக, அரசியல் ஆலோசனைக் கேந்திரமாக, நாடாளுமன்றமாக, இவைபோல் இன்னும் பன்முகத் தன்மை கொண்டதாக விளங்கியது. இந்த வழக்கத்தை ஒட்டி பின்னர் வந்த ஆட்சியாளர்களும் பள்ளிவாயில்களை அறிவின் ஆஸ்தான இடமாக வைத்துக் கொண்டனர். தொழுகையை நிறைவேற்றுவதற்காகச் செல்லும் சமூகத்திற்கு அறிவின் கதவுகளும் திறக்கப்பட்டன. பெண்களுக்குத் தனி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அறிஞர்களின் பேச்சுகளும் விவாதங்களும் சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் வெறும் பதினேழு பேர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த குறைஷிக் குலத்தினை உள்ளடக்கிய அரபிய சமூகம் கல்வியின்பால் உற்சாகத்துடன் முன்னேறத் தொடங்கியது.

மக்களின் அறிவு வேட்கைக்குத் தீனி போடுவதற்கு ஒவ்வொரு பள்ளிவாயில்களுடனும் விசாலத்தையும் பரப்பையும் பொருத்து தாருல்-இல்ம், தாருல்-குதுப், தாருல்-ஹதீது, பைத்துல்-குதுப், கிஸனா-அல் ஹிக்மா போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட நூலகங்கள் உள்ளடங்கிய அறிவுக் கூடங்கள் பல பொதுவானவையாகவும் சில தனிப்பட்டவையாகவும் இயங்கின.

பக்தாத்திலும் பிற அரேபியப் பகுதிகளிலும் அறிவுப் புரட்சி ஏற்பட இன்னொரு முக்கிய காரணியாக இருந்தது காகிதத்தின் வரவு. காகிதம் செய்யும் கலையை சீனர்களிடமிருந்து கற்ற அரேபியர்கள் காகிதத் தொழில் உற்பத்தியை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் சென்றனர். அன்றைய சமர்கண்டில் காகித ஆலைகள் செழித்திருந்தன. பக்தாத்தில் காகிதத்திற்கேன்றே தனிச் சந்தை இருந்திருக்கிறது. நூற்றுக் கணக்கான காகித விற்பனை மையங்களிலிருந்து உலகத் தரம் வாய்ந்த பலவகையான காகிதங்கள் உலகம் முழுவதற்கும் அனுப்பப் பட்டிருக்கின்றன. ரோம, கிரேக்க நூல்கள் பல, காகிதத்தை “bagdatixon” என்றே குறிப்பிடுகின்றன1.

கல்விச் சாலைகளில் காகிதம் – இன்று மடிக்கணினிகள் வழங்கப் படுவதுபோல – இலவசமாக வழங்கப் பட்டதாகக் குறிப்புகள் இருக்கின்றன.

ஐரோப்பாவின் மிகச் சிறந்த நூலகங்கள் சில டஜன் புத்தகங்களைக் கொண்டிருந்தபோது, பக்தாத்தின் மிகப்பெரிய நூலகமான தாருல் ஹிக்மாவில் மட்டும் சுமார் நான்கு இலட்சம் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன1. கி.பி 1300இல் பிரெஞ்சு அரசனின் நூலகத்தில் நானூறு தலைப்புகளில் மட்டுமே புத்தகங்கள் இருந்த காலத்தில், பக்தாதில் தனியொரு நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்காக வேறோர் இடத்திற்கு மாற்றுவதற்கு புத்தகங்களைச் சுமந்து செல்ல மட்டும் சுமார் நானூறு ஒட்டகங்கள் தேவைப்பட்டன2.

கிறிஸ்தவ ஐரோப்பா, புத்தகங்களையும் வரைபடங்களையும் பதிப்பிக்க அல்லது புதுப்பிக்க மாதக்கணக்காக உலர்த்தி, சுத்தப்படுத்தி, பதப்படுத்திய, செலவு மிகுந்த விலங்குகளின் சருமத்தை நம்பியிருந்த கால கட்டத்தில், அப்பாஸிய கலீஃபாக்களின் பிரதேசத்தில் நடந்ததென்ன? எடுத்துச் செல்லப் படுவதற்கு இலகுவானதாக, உடனே கிடைக்கப் பெற்ற, உபயோகப்படுத்த இலகுவான காகிதங்கள், நூல்கள் எழுதப்படும் வேகத்தையும் எண்ணிக்கையையும் அமோகமாகப் பெருக்கியதோடு பரவலாகத் தேவைப்படுபவருக்குக் கிடைக்கவும் வழிவகுத்தன. சொல்லத் தேவையின்றி, அறிவுப் பரிமாற்றம் துரிதப்பட்டது. கூடுதல் ஆராய்ச்சிகள், கல்விப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பிரதிகளைச் சேமிப்பது, நூலகங்கள் அமைப்பது, படியெடுப்பது போன்ற பழக்கங்களும் எழுதுவது, ஆராய்ச்சி, மொழிபெயர்த்தல் போன்ற சேவைகளுடனூடாக வளரத் தொடங்கிற்று.1

1234இல் பக்தாதில் தொடங்கப்பட்ட அல்-முஸ்தன்ஸ்சிரிய மதரசாவின் நூலகத்தில் மட்டும் கலீஃபாவின் நன்கொடையாக அவருடைய சொந்த நூலகத்திலிருந்து வழங்கப்பட்ட சுமார் எண்பதினாயிரம் புத்தகங்கள் இருந்ததாம்.3 அவை அத்தனையும் சுண்டெலியின் பொத்தானை அழுத்திவிட்டு நகலெடுக்கக் கட்டளையிட இயலாத அந்தக் காலத்தில் நடந்த வித்தைகள்.

இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் விரிவடைய விரிவடைய அறிவுக் கூடங்களும் பெருக ஆரம்பித்ததோடு அன்றைய உலகின் அறிவுக் குவியல்கள் இக் கூடங்களில் குவியத் தொடங்கின. புதிய கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி சுமார் மூன்று நூற்றாண்டு காலம் உலகில் அன்றுவரை பரவலாகக் காணக் கிடைத்த அறிவுக் கருவூலங்களை முஸ்லிம்கள் ஒரே இடத்தில் சேமித்து அரபியில் மொழிபெயர்க்கும் – இன்றுவரை அறிவுலகம் கண்டிராத – பிரமாண்டமான பணியை ஆட்சியாளர்களே முன்னின்று செயல்படுத்தத் தொடங்கினர். இவ்வறிவு வேள்வியை ஏறத்தாழ அனைத்து சரித்திர ஆசிரியர்களும் எழுத்தியக்கம் (Literary Movement) என்றே குறிப்பிடுகிறார்கள். அன்றுவரை மனித சமுதாயத்திற்குக் கிடைத்த அறிவை ஓரிடத்தில் திரட்டி, போற்றிப் பாதுகாத்து, மொழிபெயர்த்து, பின்னர் உலகுக்கு அளித்த மாபெரும் சேவையை இவ்வியக்கம் முன்னெடுத்தது.

பண்டைய அறிவியல் நூல்கள் நூற்றுக்கணக்கில் மொழிபெயர்க்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான நூல்களும் அறிவியலின் எல்லா கிளைகளுக்குமாகப் புதிதாக எழுதப்பட்டன. இவ்வெழுத்தியக்கம் வெகு உற்சாகமாக இயங்குவதற்குத் தலைமைச் செயலகமாகத் திகழ்ந்து புகழ்பெற்றதுதான் நவீன அறிவுலகின் கருவறையான ‘தாருல் ஹிக்மா‘. அன்றைய மொத்த அறிவுலகமும் குவிந்துகிடந்த, இஸ்லாத்தின் பொற்கால ஆட்சிக்குக் காரணமாக விளங்கிய தாருல் ஹிக்மா. பின்னாளில் கணிதமும் மருத்துவமும் வானியலும் தத்தமது புதிய அத்தியாயங்களை வரையறுத்துக் கொண்ட தாருல் ஹிக்மா. பழைய சித்தாந்தங்கள் பலவற்றின் தவறுகள் களையப்பட்டு புத்தறிவு பரவக் காரணமாக இருந்த, மேற்குலகம் House of Wisdom என்று பெயர் சூட்டி மகிழ்ந்த தாருல்-ஹிக்மா. ஒன்பதாவது நூற்றாண்டின் மத்தியில், உலகிலேயே அதிகமான புத்தகங்களைக் கொண்ட களஞ்சியமாக தாருல்-ஹிக்மா இருந்திருக்கிறது.4

எட்டாவது நூற்றாண்டில் பக்தாதை ஆட்சி செய்த, அறிவியலின் பால் தீராக் காதல் கொண்ட கலீஃபா ஹாரூன் அல் ரஷீதால் தொடங்கப்பட்டு, அவருடைய மகன் அல்-மஃமூன் காலத்தில் உலகின் ஒரே அறிவு மையம் என்ற உன்னத நிலையை தாருல் ஹிக்மா அடைந்தது. அறிவாராய்ச்சிக்காக உருவாக்கிய பல்கலைக்கழகம், இதற்குமுன் உலகில் – குறிப்பாக கிரேக்க, ரோமானிய, பாரசீக மற்றும் இந்திய நிலப்பரப்புகளில் – காணக்கிடைத்த அறிவுப் பொக்கிஷங்களைத் தருவித்து மொழிபெயர்த்து பாதுகாத்துப் பின்னர் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கு உதவிட வழிகோலியது.

இங்குதான் பண்டைய அறிவியலின் ஜாம்பவான்களான பிதகூரஸ், பிளாட்டோ, ஹிப்போக்ரடிஸ், யூக்ளிட், கேலன், ஆர்யபட்டா, பிரம்மகுப்தா போன்றவர்களின் கிரந்தங்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னாட்களில் அரபியில் இருந்து மீண்டும் உலகின் பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டன.

உதாரணமாக 750CEல் எண்களையும் நட்சத்திரங்களையும் பற்றி தாலமி கிரேக்க மொழியில் எழுதிய புகழ்பெற்ற அல்மகெஸ்ட் Almagest உலகில் முதன் முறையாக இங்குதான் இன்னொரு மொழியில், அதாவது அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு “அல் மஜிஸ்தி” எனப் பெயரிடப்பட்டு, பின்னர் அரபியிலிருந்து லத்தீன் முதலான மற்ற மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அல்மகெஸ்ட் என்ற ஆங்கிலப் பெயர் அல் மஜிஸ்தி Al-majisṭī (المجسطي) என்ற அரபிப் பெயரிலிருந்து பெறப்பட்டதென்பது கூடுதல் தகவல். பூமியை மையப்படுத்திய (geocentric) தவறான கருத்தை அல்மகெஸ்ட் கொண்டிருந்தாலும் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சிக்குப் பெரும் வழிகாட்டியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத்தில் அரபிமொழி என்பது அறிவியலின் மொழி என்றாயிற்று. பட்ட மேற்படிப்புகளுக்காகப் பல்கலைக் கழகங்கள் வேகமாக அமைக்கப்பட்டன. பல திசைகளிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் வரவழைக்கப்பட்டனர். அறிவியலைப் போற்றிக் கொண்டாடும் மையமாகத் திகழ்ந்த தாருல் ஹிக்ம்வுக்கு இந்தியக் கணிதவியலாளர் கண்கா (kanka) வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறார். அப்பாசிய அரசவைக்கு இந்தியாவிலிருந்து விஜயம் செய்த பண்டிதர்களால் ஆரியப்பட்டர் பிரம்மகுப்தர் போன்ற அறிஞர்களின் மகத்தான சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் அரபுலகிற்கு அறிமுகமாயின. உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் அறிவு பக்தாதை நோக்கிப் பயணமாகியது.1

நிலாக்கள் தோன்றும், இன்ஷா அல்லாஹ்.

– அபூ பிலால்
உதவியவை:


1. Jonathan Lyons in The House of Wisdom
2. The Mind of the Middle Ages by Artz
3.Johennes Pederson, The Arabic Book
4. http://en.wikipedia.org/wiki/House_of_Wisdom


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.