அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் பேரருளால் பைத்துல் முகத்தஸ் தலைமை இமாம் அவர்களால் கடந்த (2013) ஆண்டு துவக்கப்பட்ட ILMI தனது கல்விப்பணியில் வெற்றிப் பாதையில் பயணிப்பது தாங்கள் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ்.
ILMI நடத்தும் அழகிய கடன் IAS அகாடமியின் முதல் மாணவர் அஷ்ரப், அனைத்துத் தேர்விலும் வெற்றி பெற்று, பயிற்சிக்குத் தேர்வாகி தற்போது சிம்லாவில் பயிற்சியில் இருந்து வருகிறார்.
மேலும் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான SSC தேர்வில் நமது அகாடமியின் மாணவர்கள் 7 பேர் தேர்வாகி வருமான வரித்துறை அதிகாரிகளாக சென்னையில் பணியில் அமர்ந்துள்ளனர்.
மேலும் TNPSCன் குரூப் 2 தேர்வில் 22 பேர் தேர்வாகி அவர்களுக்குத் தமிழக அரசின் கல்வித் துறை, வருவாய்த் துறை, வணிகவரித் துறை, மருத்துவத் துறை போன்ற பல துறைகளில் தற்போது பணி ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு எழுதிய 7 லட்சம் பேரில் நமது மாணவர் மீரா சாஹிப் 5 வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றிகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருளாலும் நமது சமுதாய நன்மக்களின் துஆவினாலும் மட்டுமே கிடைத்தன என்பதை நாங்கள் மிக உறுதியாக நம்புகிறோம்.
சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015
எங்களின் சமூகப்பணியின் அடுத்த மைல்கல்லாக…….
தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 பேர் எடுக்கவுள்ளனர்.காவல் துறையில் நமது சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் எவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்தது என்பது தங்களை போன்ற சமூக அக்கறை உள்ளவர்களுக்கு தெரியும்.
கோயமுத்தூர் கலவரம் தொடங்கி S.P. பட்டணம் லாக்கப் படுகொலை வரை காவல் துறை உட்பட பல்வேறு அரசுத் துறைகளில் நமது சமுதாயம் அலைக்கழிக்கப்படுவதும் அநீதமிழைக்கப்படுவதும் அதைக்கண்டு நம்மவர்கள் அங்காலாய்ப்பதும் வழமையாகிவிட்டது.
இந்தக் கொடுமைகளில் இருந்து விடுபட அல்லாஹ் கொடுத்த அரிய வாய்ப்புதான் இந்த சப் இன்ஸ்பெக்டர் தேர்வு. இதற்கு முன் இது போன்ற ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளை நமது சமுதாயம் முறையாகப் பயன்படுத்தியிருந்தால் இப்போது நாம் அனுபவித்து வரும் இந்த அவல நிலை நமக்கு ஏற்பட்டிருக்காது .(குறிப்பாக இதற்கு முன் 2009இல் இதுபோன்று சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்குத் தேர்வு நடந்தபோது தேர்வான 1000 பேரில் 2 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பது வேதனையில்லையா?).
{youtube}5Tq0RHe-fXE{/youtube}
இந்த வேதனைகளைக் களைவதற்கான உருப்படியான முயற்சிகளில் ஈடுபட ILMI களமிறங்கி உள்ளது. இந்தத் தேர்வில் பங்கு பெற தேவையான அனைத்துப் பயிற்சிகளோடு சேர்த்து நேர்மையான இறையச்சமுள்ள காவல் அதிகாரிகளாக செயல்படுவதற்குத் தேவையான இஸ்லாமிய தர்பியத் பயிற்சிகளையும் நமது சமுதாய இளைஞர்களுக்கு இலவசமாக வழங்க ILMI முன்வந்துள்ளது. அதற்காக சென்னை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய 4 நகரங்களில் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 முஸ்லிம் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, குறைந்தது 100 பேரை வெற்றி பெற வைப்பது எங்கள் இலக்காகும்.
இந்த இலக்கை இலகுவாக அடைவதற்குப் பள்ளிவாசல் முத்தவல்லிகள், கண்ணியத்திற்குரிய இமாம்கள், சமுதாய அக்கறையுள்ளவர்கள் அனைவரும் துஆச் செய்வதுடன் இந்த அவசர செய்தியை முஸ்லிம் இளைஞர்களுக்கு தெரிவித்து அவர்களை ஊக்கமூட்டி உடனடியாகப் பதிவு செய்ய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மிகக்குறுகிய கால அவகாசமே உள்ளது என்பதை நினைவுறுத்துகிறோம். அல்லாஹ் நமது முயற்சிகளை இக்லாசான முயற்சியாக்கி வெற்றியைத் தருவானாக!
admin@makkamasjid.com