அமாவாசை நிலாக்கள் – 4

தாருல் ஹிக்மா – 1
HOUSE OF WISDOM

“Knowledge exists potentially in the
 human soul, like seed in the soil, through
 learning, that potential turns into reality”
-Al-Ghazali

மெரிக்க தேசம் என்று தற்பொழுது அறியப்படும் நிலப்பரப்பு ‘கண்டுபிடிக்கப்’ படுவதற்காகக் காத்துக் கொண்டிருந்த காலகட்டம். பழங்குடிகளாக அரைகுறை ஆடைகளுடன் காடுகளில் சுற்றித் திரிந்த – இன்றைய அமெரிக்கர்களின் – முன்னோடிகளை வேட்டையாடி அடிமைகளாக ஸ்பெயினுக்குக் கொண்டு செல்ல, அமெரிக்காவின் முதல் அடிமை வியாபாரி1 கிரிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமி கரை இறங்க இன்னும் சில ஆண்டுகள் மீதமிருந்தன.

1492 ஆகஸ்ட் மாதம் ஸ்பெயினிலிருந்து மூன்று கப்பல்கள் இசபெல்லா மற்றும் ஃபெர்டினன்ட் (Isabella and Ferdinand) என்ற ஆட்சியாளர்கள் இருவரின் பொருட்செலவில் பூவுலகின் புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடிப்பதற்காகக் கொலம்பஸின் தலைமையில் புறப்பட்டன. பொன்னும் ரத்தினங்களும் நறுமணப் பொருட்களும் தேடி மேற்கு வழியெடுத்து இந்தியாவிற்கு வருவதற்காகத் தொடங்கப்பட்ட பயணம் திசை மாறி, அக்டோபர் மாதம் மேற்கிந்தியத் தீவில் இறங்கியபோது அதை இந்தியா என்றே தவறாக நினைத்து அங்கு வாழ்ந்த பழங்குடியினருக்கு ‘இந்தியர்கள்’ என்றே பெயரிட்டார் கொலம்பஸ். நம் இந்தியாவில் அன்றும் வளங்கள் குவிந்துதான் கிடந்தன. கடல் பயணம் திசை மாறிப் போனதால் கொலம்பஸ் கனவு கண்ட இந்தியாவையும் அவர் வந்தடையவில்லை; எதிர்பார்த்துச் சென்ற செல்வங்களும் கிடைக்கவில்லை. உடலின் மறைவிடத்தை மட்டும் இலை தழைகளால் மறைத்துக் கொண்டு நிர்வாணமாகத் திரிந்த1 பழங்குடியினரை அடிமைகளாக வியாபாரப்படுத்திப் பெரும் பொருளீட்டத் தொடங்கிய கொலம்பஸ், “வெறும் ஐம்பது சிப்பாய்களின் உதவியுடன் இந்தத் தீவின் மொத்தப் பழங்குடியினரையும் அடக்கிப் பிடித்துவிட முடிந்தது” என்று பெருமையாகக் குறிப்பெழுதுகிறார்.

கொலம்பஸ் பழங்குடியினரை எவ்வாறு நடத்தினார் என்பதை, பதினாறாம் நூற்றாண்டின் ஸ்பானிய சரித்திர ஆசிரியர் De Las Casas இவ்வாறு எழுதுகிறார் “கிறிஸ்தவர்கள் என்று தங்களைப் பெருமையோடு அழைத்துக் கொண்டு ஸ்பெயினிலிருந்து வந்தவர்கள் இரண்டு படிகளாகத் தம் கொள்கைகளைச் செயல்படுத்தினார்கள். மண்ணின் மைந்தர்களை வேரறுப்பதற்காகக் கொடுமையான, நெறியற்ற போர்களின் மூலம் குவியல் குவியலாகக் கொலை செய்து அவர்களை அவர்களின் நிலப்பரபிலிருந்தே துடைத்தெறிவது என்பதே நோக்கமாக இருந்தது.” ஸ்பெயினிலிருந்து கொண்டுவந்த வேட்டை நாய்களுக்குக் குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு உண்ணக் கொடுத்த கொடுமைகள் எல்லாம் சரித்திரம் முழுவதும் ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது.

ஸ்பானியர்கள் இவ்வளவு அட்டூழியங்களும் அராஜகங்களும் நடத்திக் கொண்டிருந்த அதே ஆண்டில்தான் சுமார் எண்ணூறு ஆண்டு கால இஸ்லாமிய ஆட்சியின் கடைசிக் கண்ணியாக இருந்த கிரனடா (Kingdom of Granada) வீழ்ந்தது.

oOo

முதல் முப்பது வருடங்களில் அதாவது ஒரு தலைமுறைக்கு உள்ளாகவே பாரசீக சாம்ராஜ்ஜியம், சிரியா, எகிப்து உட்பட்ட வட ஆப்பிரிக்கா மற்றும் அதன் இடைப்பட்ட பகுதிகள் இஸ்லாத்தின் கீழ் வந்துவிட்டன எனக் கண்டோம். இப்படி அமைக்கப்பட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் உலக சரித்திரத்திலேயே முதன் முறையாக ஒரு ‘உலகளாவிய உன்னத நாகரிக’த்திற்குத் தொடக்கமிட்டது. அதாவது பரந்துபட்ட, மாறுபட்ட கலாச்சாரங்கள் கொண்ட சீன, இந்திய, அரபிய, கிரேக்க, ரோமானிய கலாச்சாரக் கூறுகளுடைய நிலப்பரப்புக்கள் ஒன்றாக இஸ்லாமியப் பேரரசுகளின் கீழ் வந்ததால் இஸ்லாம் முன்வைத்த – அன்றுவரை உலகிற்கு அன்னியமாக இருந்த – ஆப்பிரிக்கக் கறுப்பர்களையும், ஐரோப்பிய வெள்ளையர்களையும் ஒன்றாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்த “சமத்துவம்” என்ற மந்திரச் சொல்லும் இந்த மாபெரும் அற்புதத்தை நடத்திக் காட்டியது.

இப்படி மாறுபட்ட கலாச்சாரக் கூறுகளுடைய நிலப்பரப்புகள் இஸ்லாமியப் பேரரசுகளின் கீழ் வந்ததால் வெவ்வேறு கலாச்சாரங்களின் நற்கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, ஒரு புதிய நாகரிகம் அன்றைய உலகில் முற்போக்கான, நவீன சக்தியாக உருவெடுத்தது. மனித குல வரலாற்றின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத காரணிகளுள் ஒன்றாக அன்று பரிணமித்த இஸ்லாமிய நாகரிகம் ஒரு நூற்றாண்டுக்கு உள்ளாகவே பலவகை மாற்றங்களை நிகழ்த்தியது.

முற்றிலும் புதியதான ஒரு வாழ்க்கை முறை, அன்று வரை அறியப்பட்ட முறைகளிலிருந்து வேறுபட்ட கண்ணியமான வணக்க வழிபாட்டு முறைகள், புதிய சிந்தனைகள், சமூக மேம்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகம் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் எண்ணூறு ஆண்டு காலம் உலகின் அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக நிமிர்ந்து நின்றது. ஸ்பெயினிலும் இன்னும் பக்தாத்திலும் அமையப்பெற்ற இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஆன்மீகம் மற்றும் அறிவின் இருபெரும் தலைநகரங்களாக பக்தாதும், கொர்தபாவும் போட்டிபோட்டு ஒளிவீசத்தொடங்கின. பின்னாட்களில் எகிப்து, மொரோக்கோ, ஆப்பிரிக்கா, சிசிலி (இத்தாலி), மத்திய ஆசியா மற்றும் இந்தியா முதலான பிரதேசங்களுக்கு இஸ்லாமிய நாகரிகம் எடுத்துச் செல்லப்பட்டது.

ரோமர்களின் வீழ்ச்சிக்குப்பின் பட்டினியிலும் குழப்பத்திலும் தவித்துக் கொண்டு இருண்டகாலத்தில் உழன்று கொண்டிருந்த ஐரோப்பாவிற்குள்ளும் இஸ்லாமிய நாகரிகம் மெதுவாக ஊடுருவியது. இஸ்லாமிய நாகரிகத்தின் கணக்கிலடங்காப் பங்களிப்புகளை தத்தெடுத்துக் கொண்டுதான் பின்னாளில் ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என்பது சாத்தியமானது. “முஸ்லிம் ஸ்பெயின் மத்தியக் கால ஐரோப்பிய வரலாற்றின் மிகப் பிரகாசமான அத்தியாயத்தை எழுதியது” என்கிறார் வரலாற்றாசிரியர் பிலிப் ஹிட்டி (‘History of the Arabs’ – Philip K. Hitti)

இடையறாத போர் முஸ்தீபுகள், அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பேராசையால் நடக்கும் கலகங்கள் போன்ற காரணங்களால் எழும் சச்சரவுகளுக்கிடையிலும் எப்படி இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு மட்டும் அறிவியலில் அடங்காக் காதல் மேலோங்கி புதுப்புது அறிவுத்தேடல்களுக்கு வாரி இறைத்து உற்சாகமூட்டி அரசவைகளை அறிவின் சபைகளாக மாற்றி உலகின் அறிவுச் செல்வங்களை தேடித் தேடி கொண்டுவர முடிந்தது?

இதற்கு முன் இருந்த ரோமானியப் பேரரசுகளின் அரசவைகளில் வக்கிரங்கள்2 நுரைத்துப் பொங்கிய வரைமுறையற்ற, கொடூரமான, முறைகேடான, காமக் களியாட்டங்களும் ஒழுக்கக் கேடுகளும் ஒரு பக்கமென்றால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அடிமைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொலையுண்டு மாள்வதும், மனிதனைக் கொடிய விலங்குகளுடன் நிராயுதபாணியாக மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் பொழுதுபோக்காகக் கொண்டாடப் படுவது3 இன்னொருபக்கம் வழக்கமாக இருந்தபோது, ரோமை வென்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு மட்டும் எங்கிருந்து இந்த அறிவுத்தாகம் வந்தது என்ற கேள்விக்கு பெரும்பாலான சரித்திர ஆசிரியர்கள் பின்வரும் காரணங்களை அடுக்குகிறார்கள்:

கல்வியற்ற, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் உதித்த இறைவனின் தூதருக்கு அருளப்பட்ட வேதம் “படிப்பீராக” அல்லது “ஓதுவீராக, படைத்த இறைவனின் திருநாமத்தால்” என்ற முதல் வசனத்தோடு இறங்கிற்று. பின்னர் அது பிரளயமாயிற்று. கல்வியின் முக்கியத்துவம் அங்கிருந்து ஆரம்பமாகியது.

குர்ஆன் மனிதனை உலகில் சுற்றித்திரிந்து “பார்க்கச்” சொல்லியது. வானம், பூமி, கோள்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கடல், மலை, தரை, கரைகள், காலம், முந்தைய சமுதாயங்கள் மற்றும் அவர்தம் கலாச்சாரம், கருவறை, சிசுவின் தோற்றம், தேனீக்கள், எறும்புகள், பறவைகள்… இவை பற்றியெல்லாம் பேசியது. பல இடங்களில் சிந்திக்கக் கோரியது. ஆராயக் கட்டளை இட்டது.

அறிவியலும் வானியலும் முஸ்லிம்களின் தின வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தின. இன்று மிகச் சாதாரண நிகழ்வாக கருதப்படும் விஷயங்கள் நூற்றண்டுகளுக்கு முன்னால் பெரும் கவனமும் உழைப்பும் தேவைப்பட்ட ஆராய்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, தீர்க்கப்பட்டன. உதாரணமாக தினமும் ஐந்து வேளை தொழுகைக்காக முஸ்லிம்கள் துல்லியமாக புனித மக்காவை நோக்கித் திரும்பியாகவேண்டும். அதனால் மசூதிகளைக் குறிப்பிட்ட திசை நோக்கியே எழுப்ப வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு இருந்தது. இந்தத் தேவைதான் சிக்கலான கணிதமுறைகளையும், புதிய திரிகோணவியலையும்5 (Spherical trigonometry) பயன்படுத்தி வான சாஸ்திரத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியது. இது ஓர் உதாரணம் மட்டுமே.

கற்பவரையும் கற்பிப்பவரையும் இறைவேதம் கண்ணியப்படுத்தியது. அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்துகள் வழங்கப்பட்டன. கல்வி கற்பதை இஸ்லாம் எவருக்கும் எந்தவித விதிவிலக்குமின்றி கடமையாகவும் கட்டாயமாகவும் ஆக்கியது. கற்றேயாக வேண்டும். ஆயிரக்கணக்கான மைல் பிரயாணம் என்பது கற்றலுக்காகவே என்பது முஸ்லிம்களின் அறிவுத் தேடலுக்குச் சான்றாக விளங்கியது. கற்றலை விதந்தோதும் அரபுப் பழமொழியொன்று, “சீனம் சென்றேனும் ஞானம் தேடு” என்று பன்னெடுங்காலமாகத் தமிழாக்கப்பட்டு வழக்கில் உள்ளது. அன்றைய பயணம் என்பது சிரமத்தின் உச்சம். முஸ்லிம்கள் கற்காமலிருப்பதற்கு எந்தவிதமான நியாயமும் எந்தவடிவிலும் சொல்ல அனுமதிக்கப் படவில்லை. இப்படியாக முஸ்லிம்கள் கல்வித்தாகத்தை உணரத் தொடங்கினார்கள். சமூகத்தை அறிவுப்பசி ஆட்கொண்டு எரிமலையாகக் குமுறி வெளிவர ஒரு தீப்பொறிக்காகக் காத்துக் கொண்டிந்தது. எப்படி எங்கு ஆரம்பிப்பது?.

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் விரிவடையத் தொடங்கியபோது திடீரென்று பெரும் திரளான மக்கள் அரசின் குடிகளானர்கள். உலகில் அதுவரை ஆட்சி செய்யப்பட்டிராத அளவிலான நிலப்பரப்புகள் இந்த ஆட்சியின் கீழ் வந்தன. இப் பெரும் நிலப்பரப்புகளையும் மக்களையும் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்வது பெரும் சவாலாயிற்று. சவாலை நேர்கொள்ள புதிய அறிவு தேவைப்பட்டது. புதிய நகரங்கள் நிர்மாணித்து நிர்வகிக்க, பலதரப்பட்ட இனக் குழுக்களுக்கிடையில் சுமுக உறவு ஏற்படுத்தி உற்சாகமூட்ட, பெருந் தொகையான மக்கள் கூட்டத்திற்கு உணவளிக்க, ஆரோக்கியம் பேண, பிரமாண்டமான வணிகத்தேவைகளை நிவர்த்தி செய்ய, மேற்பர்வையிட புதிய யுக்திகளைக் கண்டடைந்தே ஆகவேண்டிய நிர்பந்தம் ஆட்சியாளர்களை அழுத்தியது. தேவைகள் அல்லவா கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அன்னை? இந்த நிர்பந்தம்தான் தேவைப்பட்ட தீப்பொறியாகியது.

எரிமலை குமுறியது. ஸ்பெயினிலும் பக்தாத்திலும் கணிதமும் அறிவியலும் கட்டடக் கலையும் புதிய உச்சகங்களைத் தொட்டன. ஆயிரம் வருடங்களில் முஸ்லிம் அறிஞர்கள் பறத்தலின் விதிகளையும், பார்வை மற்றும் ஒளியின் தன்மைகளையும், திரிகோணமிதியின் சமன்பாடுகளையும், வேதியியல் கண்டுபிடிப்புகளையும் சமைத்தார்கள். பேரண்டத்தின் மாயைகளையும் புதிர்களையும் அவிழ்க்கத் தொடங்கினார்கள்.

இதில் மற்றுமொரு ஆச்சரியம் என்னெவென்றால் இக்காலத்திலிருந்து பல நூறாண்டுகள் வரை அறிவு என்பது – இன்று அறியப்படும் துறை சார்ந்த, தனிச் சிறப்பு வகைகளாக பிரிக்கப்படமால் – முழுவதுமாக ஒரே வடிவமாகக் கருதப்பட்டது. உதாரணமாக, இசைக் கோட்பாட்டை வரையறுத்த அதே அறிஞர்தான் வானத்தின் நட்சத்திரங்களைக் குறிப்பெடுத்து கணித சமன்பாடுகளைத் தோற்றுவித்து வானியல் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவரேதான் பின்னர் மருத்துவ முறைகளைப் பற்றி புத்தகமெழுதியும், ஆய்வகத்தில் வேதியல் சோதனைகளிலும் ஈடுபட்டார்.

 
பிற்காலத்தில் வாழ்ந்த அறிவியலாளர்களையும் அறிஞர்களையும் திருச் சபைகள் கொடுமைப்படுத்திய போது6, அதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்லாமிய மன்னர்கள் அறிஞர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து ஊக்குவித்தார்கள்.

இந்த அறிவுப் புரட்சி நடந்துகொண்டிருந்த ஸ்பெயினின் அன்றைய வாழ்க்கை முறையை இப்படி விவரிக்கிறார், டாக்டர் விக்டர் ராபின்சன் எம்.டி, தனது மருத்துவத்தின் கதை என்ற நூலில் :-

சூரிய அஸ்தமனத்திற்குப்பின் ஐரோப்பா இருளில் மூழ்கியபோது ஸ்பெயினின் கொர்தொபாவில் தெருவிளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. ஐரோப்பா அழுக்குப் படிந்திருந்தபோது கொர்தொபாவில் ஆயிரக்கணக்கான குளியலறைகள் கட்டப்பட்டிருந்தன. ஐரோப்பியர்கள் நாறிக் கொண்டிருந்தபோது கொர்தொபாவில் மக்கள் உள்ளாடைகளை தினமும் மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பா சகதியில் உழன்றபோது கொர்தொபாவின் தெருக்களில் நடைபாதைகள் (paved) வடிவமைக்கப் பட்டிருந்தன. ஐரோப்பாவின் பங்களாக்களின் மேற்கூரையில் புகை போக்க ஓட்டைகள் இருந்தபோது, கொர்தொபாவில் நேர்த்தியான அரேபியச் சித்திர வடிவங்கள் (arabesques) அலங்கரித்தன. பெயர் எழுதத் தெரியாத ஐரோப்பிய கனவான்கள் உலாவந்தபோது கொர்தொபாவின் குழந்தைகள் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஐரோப்பிய பாதிரிமார்கள் ஞானஸ்நான சேவையைப் படிக்கத் திணறிக்கொண்டிருந்த போது, கொர்தொபாவின் ஆசிரியர்கள் பண்டைய அலெக்சாண்ட்ரிய நூலகங்களுக்கு ஒப்பான அறிவுக் கூடங்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இரத்தக் கறை படிந்த ஸ்பெயினின் நீண்ட வரலாற்றில், மூரியர்களின் காலத்தில் மட்டுமே அறிவு பிரகாசித்திருந்தது7.

நிலாக்கள் தோன்றும், இன்ஷா அல்லாஹ்.

உதவியவை:
————————————————————
1. De Las Casas, A Brief Account of the Destruction of the Indies
2. http://en.wikipedia.org/wiki/Caligula
3. http://en.wikipedia.org/wiki/Gladiator
4. http://en.wikipedia.org/wiki/Mathematics_in_medieval_Islam
5. http://en.wikipedia.org/wiki/Galileo_affair
6. The Story of Medicine , Dr. Victor Robinson MD. Temple University School of Medicine, Philadelphia..