வாக்களிப்பது நமது கடமை !

ரபரப்பான அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நம் தமிழகத்தில்…! என்னுடைய நண்பர் வேடிக்கையாகக் கூறினார்:

“மற்ற மாநிலங்களிலும்கூட சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன, நம் மாநிலத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், நம் தமிழக மக்களுக்கு ஓட்டுப் போடுவதற்குப் பணம் கொடுக்கப்படும். வேறெங்கும் இருக்கின்றதா இந்த அவலம்…? ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுப்பவர்கள் நம்மை ஆட்சி செய்ய இருக்கும் ஆட்சியாளர்கள். அவர்கள் எப்படி இருக்க வேண்டும்; யாராக இருக்க வேண்டும் என்பதனை நமது ஓட்டுகள்தான் தீர்மானிக்க இருக்கின்றன. அப்படியிருக்க, சில்லரைக் காசு சில ஆயிரம் ரூபாய்களுக்காக தகுதியே இல்லாத நபர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதா? என்னைக் கேட்டால் ஒரு அரசியல்வாதி பணம் கொடுக்கின்றார் என்றால் அதுவே போதும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் தகுதியில்லாதவர் என்பதற்கு….!”

சரி, இன்றைய அரசியல் சூழலுக்கு வாருங்கள்…! நம் தமிழகத்தில் யாராலும் சீந்தப் பெறாத பி.ஜே.பி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகப் பிற கட்சிகளையும், கட்சிப் பொறுப்பாளர்களையும் கெஞ்சிக் கூத்தாடுகின்றது. ‘வளர்ச்சி’ என்கின்ற ஒற்றை வார்த்தையை வாயளவில் கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்தி, இன்று சாமானிய, பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி வருகின்றது. எல்லாத் துறைகளிலும் தங்களுக்கு சாதகமான ஆட்களை அமர்த்தி, அதிகாரத்துடன் பிறரை அடக்கி, ஒடுக்கவும் செய்கின்றது.

  • இந்துத்துவத்தை எதிர்த்துக் கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் பன்சாரே என்ன ஆனார்? கல்புர்க்கி என்ன ஆனார்? பத்திரிகையாளர்களும் பிற துறையைச் சார்ந்தவர்களும் சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனரே, என்ன செய்தது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு?
  • மேக் இன் இந்தியா – என் தேசத்தின் சாமானிய மனிதனை எதன்பால் வளர்ச்சியடைய செய்தது? அதானியும், அம்பானியும்தானே வளர்ச்சியடைந்தார்கள்….!
  • ஒவ்வொரு நாட்டிற்கும் பிரதமர் மோடி பயணம் செல்லும் போதெல்லாம் பல்வேறு தொழிலதிபர்களை அழைத்துப் பேசி நம் நாட்டில் தொழில் செய்வதற்காகக் கூவி, கூவி அழைக்கின்றாரே, அதனால் என் தேசத்தின் சாமானியனுக்கு என்ன பயன்?
  • தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் எம் தேசத்தில் மலம் அள்ளும் தோழனுக்கு என்ன விடிவு காலம் பிறந்தது? சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வசிக்கும் எத்தனை நகரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன? வீட்டில் கழிவறை இல்லாத எத்தனை குடும்பங்களுக்குக் கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன?
  • சமூகத்தில் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலையே நிலவிக் கொண்டிருக்கின்றது. காரணங்களே இல்லாமல் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மனித உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. இங்கே சட்டங்கள் எல்லாம் ஒன்றுதான். ஆனால் தீர்ப்புகள் வேறு, வேறாக இருக்கின்றன. அஜ்மல் கசாபிலிருந்து யாகூப் மேமன் வரைக்கும் நிறைவேற்றப்பட்ட தூக்குதண்டனைக்கான தீர்ப்புகளும், குஜராத் இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்புகளும் ஒரே சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவைதான் என்று கதை அளந்தால் நாம் அதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்…!
  • சங் பரிவார ஆட்சியாளர்கள் வரலாறுகளை மாற்றி எழுதுகின்றார்கள். கல்வியைக் காவிமயமாக்குகின்றார்கள். அறிஞர்களும் மருத்துவர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நம் நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, “நாம்தான் இந்த உலகிற்கு முதன் முதலாக பிளாஸ்டிக் சர்ஜரியை அறிமுகம் செய்தோம்” எனப் பிள்ளையாரை ஆதாரமாகக் காட்டுகின்றார். பெங்களூரிலே நடந்த அறிவியல் மாநாட்டில் “சிவபெருமான் சிறந்த சுற்றுச்சூழல்வாதி” என ஆய்வறிக்கை சமர்ப்பிக்கின்றார்கள். அதில் கலந்து கொண்ட பல்வேறு அறிவியல் அறிஞர்களும் “எப்படி இந்தத் தலைப்பை அனுமதித்தார்கள்?” எனக் கடிந்து கொண்டார்கள்.
  • பனாராஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது? திரு.சந்தீப் பாண்டே அவர்கள் ஏன் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்? காந்தியவாதியான அவர் பல போராட்டங்களை நடத்தினார் என்பதற்காக அவரை நக்சல் எனக் குற்றம் சாட்டி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளது மத்திய காவி நிர்வாகம்.
  • தமிழக IIT-இல் பெரியார் அம்பேத்கர் பேரவைக்கு என்ன நடந்தது? ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலாவுக்கு என்ன நடந்தது? டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கண்ஹையா குமாருக்கும், உமர் காலிதுக்கும் என்ன நடந்தது? ஆட்சிக்கு எதிரான கருத்துகள் வரும்போது அதற்குத் தகுந்த பதிலளிக்க வக்கில்லாமல், அந்தக் கருத்துகளைக் கூறியவர்களின் குரல்வளையை நெறிக்கும் சகிப்புத்தன்மையற்ற அரசாகவே மத்தியில் ஆளும் பிஜேபி அரசு செயல்பட்டு வருகின்றது.
  • இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போது மக்களை உண்மையான வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும் எண்ணம் இவர்களிடம் இருப்பதைவிட, RSS-ன் மதம், இனம், ஜாதி அடிப்படையில் சமூகத்தைக் கூறு போடும் சிந்தனையையும், இந்துத்துவா ரீதியிலான ஆட்சியினை அமைப்பதற்கான எல்லா வழிவகைகளையும் கட்டமைப்பதற்கான பணியினைத்தான் பி.ஜே.பி அரசு செய்து வருகின்றது என்பது தெளிவாகின்றது. RSS நடத்தும் பயிற்சிப் பட்டறைகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்கின்றார்கள்; கலந்து கொள்கின்றார்கள்; அவர்கள் துறை சார்ந்த விவாதங்கள் அங்குதான் நடத்தப்படுகின்றன. RSS-ன் உறுப்பினர்கள் இந்தியாவின் தலைசிறந்த பொறுப்புகளில் பணியமர்த்தப்படுகின்றார்கள். தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்திற்கான இந்திய நிறுவனத்திற்கான சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள கஜேந்திர சவான் சுயம் சேவக் அல்லாமல் வேறு யார்? இதுமட்டுமல்ல இன்னும் பல துறைகளிலும் சுயம் சேவக்களின் ஊடுறுவல் வேகமாக நடக்கின்றது….!
  • இந்த பி.ஜே.பி கட்சி தமிழகத்தில் காலூன்ற வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கின்றது. திமுக-வையும், அதிமுக-வையும் சட்ட ரீதியில் பந்தாடி வருகின்றது. தொடர்ந்து திராவிடக் கட்சிகளை விமர்சனம் செய்து கொண்டே கூட்டணிக்கும் முயன்று வருகின்றது. இங்குள்ள சிறு கட்சிகளைத் தன்னுள் இழுக்க மீண்டும் முயற்சி செய்கின்றது. அதுமட்டுமல்லாமல் தமிழர்களை அவர்களின் மொழி, பண்பாடு, கலை, கலாச்சார ரீதியில் அணுகி அவர்களின் உணர்வுகளை வென்றுவிட முயற்சி செய்து வருகின்றது. அதற்காகவே ஓரிருவரை நியமித்து வேலை வாங்குகின்றது.

தமிழகத்தில் என்ன நடக்கின்றது? நம்மை இதுவரையிலும் ஆண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் செய்வதில் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். எங்களைவிட்டால் வேறு யாரும் இல்லை என்கின்ற தைரியத்தில் அவர்களின் போக்கு அமைந்துவிட்டது. தமிழகத்தை மேம்படுத்துவதில், தமிழக மக்களின் வாழ்க்கையை செழிக்கச் செய்வதில், இங்குள்ள வளங்களை அதிகப்படுத்துவதில் காட்டும் அக்கறையைவிட ஆளும் அரசியல்வாதிகள் தம் சுய வாழ்க்கையை மேம்படுத்துவதில்தான் முழுமையான ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக அவர்கள் தமிழகத்தின் வளங்களைச் சூறையாடுவதற்கும் தயங்குவதில்லை.

தமிழகத்தின் கனிம வளங்களும் ஆற்றுமணலும் மிகப்பெரும் அளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நியூட்ரினோ ஆய்வு செய்வதற்காகவும், மீத்தேன் வாயு எடுப்பதற்காகவும் தமிழகத்தின் இயற்கை வளங்களையும், விவசாய நிலங்களையும் அழிப்பதற்கான முடிவுகளை ஆள்வோர் எடுத்துள்ளனர். மக்களுக்குப் பெருமளவில் பாதிப்பு இருப்பதை உணர்ந்தும், மக்களின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கூடங்குளத்தில் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களின் எதிர்பார்ப்பு என்ன? மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதா? பிறகு ஏன் மக்களின் எதிர்ப்புகளை ஒடுக்குகின்றார்கள்? ஒடுக்க நினைக்கின்றார்கள்?

மது ஆலைத் தொழிலதிபர்களைக் காப்பதற்காக, அவர்களுக்கான வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களை நல்வழியில் நடத்துவதற்குக் கடமைப்பட்ட அரசாங்கமே மது விற்பனையைத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கின்றது. இதைவிட வெட்கங் கெட்ட செயல் வேறு என்னவாக இருக்க முடியும்? மதுவினால் நாளுக்கு நாள் மக்கள் வளத்தை – குறிப்பாக இளைஞர் வளத்தைப் பெரிதும் இழந்து வருகின்றோம். “மதுவினால் அரசுக்கு வருமானம் கிடைக்கின்றது” என்று பொய் வாதத்தைக் கூறி மக்களை இந்த அரசு ஏமாற்றி வருகின்றது. மக்களே இதனை தடைசெய்யுங்கள் என வீதியில் இறங்கிப் போராடியதற்குப் பிறகும் அவர்கள் ஏன் மதுவைத் தடைசெய்ய முன்வரவில்லை? இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகின்றனர்? யாரை திருப்திப்படுத்த விரும்புகின்றனர்?

மக்களுக்காக, மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படக்கூடிய அரசியல்வாதிகள் எங்கே? கண்களுக்கு மிகவும் சொற்பமானவர்கள்தான் தெரிகின்றனர். பெருந்தலைவர் காமராசர் அய்யா அவர்களும் அறிஞர் அண்ணா போன்ற பெரும் பெரும் அரசியல் தலைவர்களும் இங்குதான் வாழ்ந்து, தங்களுக்கென்று சொத்துச் சேர்த்துக்கொள்ளாமல் மறைந்து போனார்கள். அவர்களுக்குத் தன் நலனை விட மக்களின் நலன்தான் முதன்மையாக இருந்தது. அவர்களின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்குக் காங்கிரசுக்கும் திமுக-விற்கும், அதிமுக-விற்கும், எந்தத் தகுதியும் இல்லை.

சமூகத்தைப் பிளவுபடுத்தக்கூடிய, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக்கூடிய, நாட்டின், மாநிலத்தின் வளங்களைக் கொள்ளையடிக்கக்கூடிய, நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அக்கறை கொள்ளாத அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் புறம் தள்ள வேண்டும். அவர்களுக்கு நாம் ஓட்டுப் போடுவது அவர்களை நாம் அங்கீகரிப்பதோடு நம் தலையில் நாமே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது போன்றாகிவிடும்.

மக்களின் பிரச்சினைகளை அரசியல் நோக்கத்திற்காக அன்றி உண்மையான அக்கறை கொண்டு அணுகும், அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்லும் மக்கள் நலன் (Welfare) பேணும் கட்சியையும், வேட்பாளர்களையும் அங்கீகரிப்பது நமது கடமை. அது சிறிய கட்சியாக, பெரும் பின்புலம் இல்லாத சாதாரண மனிதர்களைக் கொண்டதாக, தேர்தலில் இவர்களால் பெரும் கட்சிகளை எதிர்க்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு நமது வாக்கை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கான சரியான அங்கீகாரத்தை நம்மால் வழங்க முடியும். நல்ல மனிதர்களுக்கு நம்முடைய அங்கீகாரத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் நமக்கான ஆட்சியாளர்கள் எப்படி அமைவார்கள் என்பதனை நமக்குக் காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றது; நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

நம்மை ஆள்வதற்கு, தகுதியுள்ள நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்போம்…! நமது ஓட்டு நமக்கும் பிறருக்கும் சிறந்த முறையில் பயன்படட்டும்…!

–    M..சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil.,(Ph.D)