தமிழகத்தின் நெ.1 ஊடக விபச்சாரி (PRESSTITUTE) யார்?

Share this:

தேர்தல் வெற்றிக்காகப் பொய்களையும் கட்டுக்கதைகளையும் அரசியல் கட்சிகள் அவிழ்த்து விடுவது வழக்கம்தான். ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக வெளியிடுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என சொல்லிக் கொள்ளும் ஓரிரு ஊடகங்கள் சில “ஆதாயங்களுக்காக” வேண்டுமென்றே பொய்ச்செய்தியையும் கட்டுக்கதைகளையும் சுயமாக வெளியிடும் வழக்கம் கொண்டவை.

தாம் சார்ந்திருக்கும் மதம், சாதி, அரசியல் கட்சி போன்றவற்றின் ஆதாயத்துக்காக இட்டுக்கட்டி அவதூறான செய்திகளைப் பரப்பும் வழக்கம் கொண்டவை அவை. அத்தகைய இதழ்களை – ஊடகங்களை- Presstitue – ஊடக விபச்சாரி என்பர். அந்த வகையில், Presstitute பெயரைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள தமிழகத்தில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு செய்தி நிறுவனம் தினமலர்.

தேர்தல் காலப் பொய் என்பதுபோலன்றிப் பொதுவாகவே சிறுபான்மைச் சமுதாயத்தின் மீது – குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தின் மீது – வெறுப்பை உருவாக்க, வேண்டுமென்றே கற்பனையாகச் சில பொய்ச்செய்திகளைத் தொடர்ந்து உருவாக்கிப் பரப்பி வரும் வழக்கம் கொண்டது தினமலர் என்பது பெரும்பாலான இந்துக்களே ஒப்புக்கொள்ளும் உண்மை.

டி.வி. ராமசுப்பு ஐயர் 1951 இல் நிறுவிய தினமலரின் அனைத்து உரிமையாளர்களும் சங்பரிவாரத்தினர் என்பதில் அந்த நிறுவனம் என்றைக்கும் ஒளிவு மறைவு செய்தது கிடையாது. அக்குடும்பத்தில் இந்துத்வ பயங்கரவாத அமைப்பான வி எச் பி யின் தமிழ்நாடு பொதுச்செயலாளராக இருக்கும் ஆர். ஆர். கோபால்ஜி யைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதாவது ஒரு செய்தி வெளியானால் அதைப் பெரிதுபடுத்துவார்.  அப்படி ஏதும் செய்தி இல்லையெனில் தானாகவே ஒரு பொய்ச்செய்தியை உருவாக்கி வெளியிடுவார். அதற்குப் பற்பல சான்றுகள் அவ்விதழில் வெளியான செய்திகளிலேயே காணக் கிடைக்கின்றன.

எனினும் சமீபத்திய, ஓரிரு புதிய சான்றுகளை இங்கே காண்பித்தால் தினமலர் ஆசிரியர் குழுவினரின் அடி ஆழம் வரை வேரூன்றிப் போயிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் அளவு என்னவெனத் தெரியவரும்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை, உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலானவர்களாக நேசிப்பதால், நபியை இழிவு படுத்தினால் முஸ்லிம்களை எளிதில் கோபமூட்டிக் குளிர் காயலாம் என ப்ரெஸ்டிட்யூட்கள் பல வகையில் முயல்வர். கார்ட்டூன், கதை, துணுக்கு எனப்பல வடிவங்களில் காழ்ப்புணர்ச்சிகள் வெளிப்படும்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) எனச் சித்திரித்து எப்போதோ டென்மார்க் இதழ் வெளியிட்ட கார்ட்டூனைத் தமிழகத்தின் ரமலான் நோன்பு முதல் பிறையன்று தினமலர், மீள் பதிவு செய்து சம்பந்தமில்லாச் செய்திக்குள் செருகி வெளியிட்டது. டென்மார்க் இதழில் வெளியான கார்ட்டூனை எதிர்த்து நடந்த போராட்டங்களையும் அவற்றின் விளைவுகளையும் நன்கு அறிந்த, அவற்றைச் செய்தியாக வெளியிட்ட அதே தினமலர், மீண்டும் அந்த கார்ட்டூனை புனித ரமலான் நோன்பு துவங்கி விட்டது என்பதை அறிந்து வேண்டுமென்றே சீண்டும் நோக்கத்துடன் வெளியிட்டது.

அதற்கு எதிராக முஸ்லிம்கள் நோன்புக் காலத்தில் போராடிய பின்னர் மறுப்பு வெளியிட்டு, மன்னிப்புக் கேட்டு அசிங்கப்பட்டது.

******

உ பி மாநிலம் தாத்ரியில், முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் முஹம்மத் அஹ்லாக் எனும் முதியவரை கொலைவெறி கொண்ட சங்பரிவார் கும்பல் அடித்தே கொன்றது. கொலைக்குற்றத்திலிருந்து தப்பிக்க, மாட்டுக்கறி வைத்திருந்ததால் கொன்றோம் என்ற காரணத்தையும் சொல்லிக்கொண்டது. ஆனால் அவர் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில் அங்கிருந்தது ஆட்டுக்கறியே; மாட்டுக்கறி இல்லை எனக்கண்டு பிடிக்கப்பட்டபின் புதுக்கதை புனைந்தது சங்பரிவார் கும்பல். அம்மணமாகித் தனது சுயரூபம் வெளியாகி மீண்டும் அசிங்கப்பட்டதால், மக்களைத் திசை திருப்ப எண்ணி அக்கதையைத் தினமலர் வெளியிட்டுத் தன் கு(ல)ணத்தைக் காட்டியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1378184

தினமலர் எடிட்டர் எழுதியுள்ள கதைப்படி முதியவர் அஹ்லாக்கின் வீட்டின் பின்புறம் கன்றுக்குட்டியின் எலும்புத் துண்டுகள் கிடப்பதைக் கண்டு ராகுல் சண்டை போட்டாராம்.

மாடு திருடியவன், கொன்ற பின் அதன் எலும்பைத் தன் வீட்டின் பின் புறத்தில் எல்லோரும் காணும்படியா வீசி எறிவான்? பிடறியில் புத்தி இருப்பவன் செய்யும் செயல் அது.

முதியவர் அஹ்லாக் வீட்டில் மாட்டிறைச்சி இருக்கிறது என ஒரு கோவில் ஒலிபெருக்கியில் ஒப்பாரி வைத்து அப்பகுதி மக்களுக்கு மதவெறி ஏற்றியது எதனால்?

“ஒலி பெருக்கியில் ஊர் மக்களைத் திரட்டியவர்கள் வெளியூர்க்காரர்கள்” எனக் கோயில் பூசாரி கூறியுள்ளான். உள்ளூரில் மாடு திருட்டுப் போனதற்கு வெளியூர்க்காரன் ஏன் கோயில் ஒலிபெருக்கியில் ஓலமிட்டான்? என்ற கேள்விக்கு தினமலர் பதில் தராது.

திருட்டுப் போனது மாடு என்றால் அஹ்லாக்கின் வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்தது ஆட்டுக்கறி என போலீஸ் ஆய்வக அறிக்கை சொன்னது ஏன்?

தினமலர் சொன்ன மாடு திருட்டுக் கதையை, போலீஸ் ஏன் இதுவரை சொல்லவில்லை?

மோடி, ராஜ்நாத் சிங், சாக்ஷி, மகேஷ் ஷர்மா, எச். ராஜா போன்றோர் கூட இதுவரை மொழியாத உண்மை தினமலருக்கு மட்டும் தெரிந்து விட்டது.

அடித்துக் கொல்லப்பட்ட அக்லக் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவர் எதற்காக பாக்., சென்றார்? அவருக்கு விசா உள்ளிட்ட அனுமதிகள் எவ்வாறு கிடைத்தது? பாக்.,ல் இருந்த திரும்பி வந்த உடனேயே அக்லக் கார் வாங்கியது எப்படி? அவருக்கு அந்த அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது? அக்லக்கிற்கு பாக்., உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இல்லை என்பதற்கு ஆதாரம் என்ன? அவர் பாக்.,ல் பயிற்சி பெறவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? அக்லக்கிற்கு பாக்., உடன் இருந்த தொடர்பு பற்றி இதுவரை யாரும் விசாரிக்காதது ஏன்?  http://www.dinamalar.com/news_detail.asp?id=1378184

எனப் பெரிய புலனாய்வுப் பு’ளி’யாட்டம் பாய்ண்ட்களை அள்ளி வீசியுள்ள தினமலர், அடித்துக் கொலை செய்யப்பட்ட அஹ்லாக்கின் மகன் இந்தியாவைப் பாதுகாக்கும் படைவீரனாகப் பணியாற்றுகிறார் என்பதைச் சொல்ல மறந்து விட்டது.

சினிமா நடிகர் செத்ததுக்கு பதினைந்தே நிமிடத்தில் ட்வீட் செய்து வருத்தம் தெரிவிக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் சங்க் பரிவார் அரசு, நாடே கொந்தளித்த படுகொலை பற்றி வாய் திறக்க வில்லையே ஏன்? என தினமலர் எழுதவில்லை.

இவர்களைப் பொறுத்தவரையில் உண்மையையும், உரைகல்லையும் இந்திய தேசியக்கொடிக்கு செய்ததுபோல் கையெழுத்து போடவும், வியர்வை துடைக்கவும், காலுக்கு கீழே போட்டு அமரவும் செய்து விட்டு, அடுத்தவன் “பாரத  மாதாவுக்கு ஜே போடவில்லை!” என கொடுத்த காசுக்கு மேல் கூவுவதற்குப் பெயர் தான் பிரஸ்ட்டிட்யூட். அதாவது தினமலர்.

******

இரண்டாண்டுகளுக்கு முன் நோன்புப் பெருநாள் விடுமுறையை முடிந்து மீண்டும் மதரஸா சென்ற 48 மாணவர்களை, குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சந்தேகத்தில், ரயிலிலிருந்து இறக்கி போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில், 48 மாணவர்களும் பீகார், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மதரஸாவில் படித்துவருவதும் தெரியவந்தது.

கோழிக்கோடு நோக்கிச் சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டனர். [courtesy :- http://lalpetexpress.com/lptexp/17599]

இந்நிகழ்வை ப்ரெஸ்ட்டிட்யூட் தினமலர்

“இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல பயிற்சிகளை கொடுப்பதற்காக 49 சிறுவர்களையும் கோழிக்கோடுக்கு அழைத்துச் செல்வதாகவும், அங்கு 12 ஆண்டுகள் இவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது…”

என்று எழுதி உண்மையின் உரைகல்லை பிட்டத்தில் போட்டு, சம்பவத்தைத் திரித்து வெளியிட்டுத் தன் அரிப்பைச் சொறிந்து கொண்டது.

*****

மற்றொரு முறை, “தீவிரவாதப் பயிற்சி எடுக்க மதரஸா முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி பகிரங்க அழைப்பு” என்ற தலைப்பில் பரபரப்பான ஒரு செய்தி வெளியிட்டு, சான்றுக்கு உருது மொழியில் அமைந்த துண்டுப்பிரசுரத்தையும் இணைத்திருந்தது.

தினமலர் வாசகர்களில் எவருக்கும் உருது மொழி தெரியாது என்ற குருட்டு நம்பிக்கையில் வெளியிட்டு மீண்டும் அசிங்கப்பட்டது.  உண்மையில் அந்தத் துண்டுப்பிரசுரத்தில், இஸ்லாமின் பெயரால் நடத்தப்படும் எந்தத் தீவிரவாதச் செயல்களிலும் முஸ்லிம்கள் ஈடு படக்கூடாது; பணம் பெற்றுக்கொண்டு எந்தக் குழுவிலும் இணையக்கூடாது எனத் தீவிரவாதச் சிந்தனைக்கு எதிராகவே எழுதப்பட்டிருந்தது.

ஆனால் ப்ரெஸ்டிட்யூட் தினமலர் உண்மையை மறைத்து, தீவிரவாதச் செயலுக்குப் பணம் வழங்கி முஸ்லிம்களை அழைப்பதாகவும் இது முஸ்லிம் மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் எழுதியிருந்தது. உண்மையின் உரைகல் தூக்கு மாட்டிக் கொள்ளட்டும்!

இதே உத்தியைப் பயன்படுத்தி, 02/04/2016 தினமலர் இதழில் படத்துடன் கூடிய ஒரு செய்தி வெளியானது. மூன்று நாட்களாகத் தொடர்ந்து முதல் பக்கத்திலேயே featured news ஆக இருக்கும் படி காட்டப்பட்ட, புனைந்து வலிந்து திரித்து எழுதப்பட்ட ஒரு செய்தி.

அது:-

தேர்தல் பிரசாரத்தில் பாக்., கொடியுடன் கூடிய பேனர்: கண்டுகொள்ளாத மீடியா

http://www.dinamalar.com/news_detail.asp?id=1492808

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு), அதன் தலைவர் நவாஸ் ஷரீஃப் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநிலக் கிளை வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதாக — சற்றொப்ப மூன்றாண்டுகளுக்கு முன்- அதாவது 2013 ஜூன் ஏழாம் தேதி – கட்டப்பட்டிருந்ததாகச் சொல்லப்படும் பேனர் அது. இப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக வைக்கப் பட்ட பேனர் இல்லை.   போட்டோஷாப் செய்து உருவாக்கப்பட்டது என்று பரவலாக அறியப்பட்ட அந்த பேனருக்கு தினமலர் புனைந்து எழுதிய தலைப்பு .. “கண்டு கொள்ளாத மீடியா”வாம். ஏதோ தினமலருக்கு மட்டும் நாட்டுப்பற்று இருப்பது போலவும் பிற மீடியாக்கள் எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பம்மாத்துக் காட்ட முயற்சித்து தோற்றுள்ளது.

அந்தப் பேனரில் மலையாள மொழியில் உள்ள வாசகம் :-

ഹരിത പതാക പറക്കട്ടെ ലോകം മുഴുവനും പാക്കിസ്ഥാനിൽ അധികാരത്തിൽ തിരിച്ചെത്തിയ പാക്കിസ്ഥാൻ മുസ്ലിം ലീഗിനും നവാസ് ഷരീഫിനും ഇന്ത്യൻ യൂണിയൻ മുസ്ലിം ലീഗിന്റെ അഭിവാദ്യങ്ങ്ങ്ങൾ.

தமிழில்

உலகம் முழுவதும் பச்சைக்கொடி பறக்கட்டும். பாகிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கிற்கும் நவாஸ் ஷரீஃ புக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் வாழ்த்துகள்.

ஆங்கிலத்தில்

Indian union Muslim league congratulating pakistan muslim league and its leader nawas sherif after their victory in pakistan. The green flag will fly high all along the earth.

இப்படமே ஃபோட்டோ ஷாப் மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என அப்போதே பலர் கருத்தும் தெரிவித்திருந்தனர். ஆதாரமற்றதால் இந்தப் படத்தை ஓரிரு இணைய தளங்களைத் தவிர வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. வேறு எந்த மீடியாக்களிலும் இப்படம் அல்லது தொடர்புடைய செய்திகள் வெளியாகவில்லையே என மனம் வெதும்பிப் போன தினமலர், “கண்டு கொள்ளாத மீடியா” என தலைப்பிட்டு இருந்தது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது,  மேற்கண்ட இணைய தளச் செய்தியை ஏற்கனவே கடந்த 2013 ஆகஸ்ட் ஏழாம் தேதி, இந்துத்வ பயங்கரவாத இயக்கமான பஜ்ரங் தள் தன் முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளது.


https://www.facebook.com/AryaRashtra/photos/a.357723284311521.84350.356860061064510/494305143986667/?type=1&theater


ஆகஸ்ட் 2013 இல் ஒருசிலர் வெளியிட்ட ஒரு பழைய பதிவை, ஊடக விபச்சாரம் செய்யும் தினமலர் புதுச்செய்தி போல இருவருடங்கள் கழித்து தேர்தல் நேரத்தில் இப்போது ஏப்ரல் 2016 இல் வெளியிட்டுள்ளது ஏன்?

இ யூ மு லீ ஒட்டியதாகச் சொல்லப்படும் அந்தச்சுவரொட்டியில் உள்ள வாசகங்கள் சட்ட விரோதமானவை அல்ல. வேறொரு நாட்டின் பிரதமருக்கு வாழ்த்துச் சொல்வது தவறும் அன்று.

இலங்கை வடமாகாண முதல்வரான விக்னேஸ்வரனுக்குத் தமிழ் நாட்டில் இருந்து வாழ்த்துச் சொன்னது போன்றதே அது.

இந்துத்வக் கும்பலுக்குப் பிடிக்காத முஸ்லிம்கள் – முஸ்லிம் லீக் – காங்கிரஸ் எனும் மூன்று சொற்களையும் இணைத்து ஒரு புதுக்கதை புனைந்து வெளியிட்டுள்ளது தினமலர்.

பின்னணியில் பச்சை வண்ணக்கொடி இருப்பதால் தினமலரின் ஈனக் கண்களுக்கு அது பாகிஸ்தான் கொடியாகத் தென்பட்டுள்ளது. உண்மையில் அக்கொடி இந்தியன் யூனியன் முஸ்லிம்லீகின் கொடி. நவாஸ் ஷரீஃபின் கட்சிக்கொடியின் நிறமும் அதுதான்.

காமாலைக் கண்ணனுக்கு எல்லாம் மஞ்சளாகவே தென்படுவது போல் எங்கெங்கு பச்சை தென்படுகிறதோ அவையெல்லாம் பாகிஸ்தானாகவே தினமலருக்குத் தென்படும்.

கண்ணன் மேல் காதல் கொண்ட பாரதி,

“காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா”

 என்று பாடினான்.

ஆனால் தினமலர் ஆசிரியர் குழுவின் காவிக் கண்ணிற்கோ பார்க்கும் பச்சையெல்லாம் பாகிஸ்தானாகவே தோன்றுகிறது

ஒருவேளை இச்செய்தி உண்மையெனில் கேரள ஊடகங்கள் பெரிதுபடுத்தியிருக்கும். காட்சி ஊடகங்களில் நான்கு பேர் அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டு இருந்திருப்பார்கள். கேரள பா ஜ க ஆட்களான ஓ ராஜகோபாலும் சுரேந்திரனும் – ஏன் கேரள மாநில பாஜக பொறுப்பாளரான, தமிழ்நாட்டின் நாலாந்தரப் பேச்சாளர் எச் ராஜாவும் விட்டு வைத்திருப்பார்களா?

மீடியா எல்லாம் தினமலர்போல் மதவெறி பிடித்தவையா? கருத்துக் குருடுள்ளவையா? அல்லது தினமலர் போல் ப்ரெஸ்டிட்யூட்களா?  வாசகர்களையெல்லாம் சிந்தனைத் திறனற்ற ஆட்டுமந்தை சங்பரிவார் மடையர்களாக எண்ணிக்கொண்டு ….

காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்., கின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, பாகிஸ்தான் கொடி, மற்றும் வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டை பல இடங்களில் வைத்துள்ளது.

எனத் தினமலர் கூறியுள்ளது

தேர்தல் பிரச்சாரம் என்றால் அந்த பேனரில் வேட்பாளர் பெயர், தொகுதி மற்றும் வாக்களிக்கும் நாள் பற்றிய விபரம் இருக்க வேண்டும். அப்படி எதுவும் அதில் இல்லாததால்தான் தைரியமாக புளுகு மூட்டையை திறந்து, “பாகிஸ்தான் கொடி, மற்றும் வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டை பல இடங்களில் வைத்துள்ளது” என மழுப்பியுள்ளது.

இச்செய்திக்குப் பின்னூட்டமாக முஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போல் பல்வேறு பெயர்களில் தானே எழுதி தானே பதிந்து அரிப்பைச் சொரிந்து கொள்ளும் தினமலருக்கு டாக்டர் ராமதாஸ் சரியாகத்தான் பெயர் வைத்தார்.

ஒன்று மட்டும் நிச்சயம்! இப்படிப்பட்ட பல்வேறு ஆதாரமற்ற செய்திகளில் அநியாயம் இருப்பதைச் சுட்டி விளக்கும் வாசகர் கருத்துக்களுக்கு அனுமதி மறுத்தும், முஸ்லிம்களுக்கு தேசபக்தி இல்லை எனவும் முஸ்லிம்கள் தேசத்துரோகிகள் எனவும் ஓரிருவரே பல பெயர்களில் எழுதி பதித்துக் கொள்ளும் பின்னூட்ட களவாளித்தனங்கள், பா ஜ க தமிழகத்தில் வெற்றி பெற உதவாது; சங்பரிவாரம் காலூன்ற துணை செய்யாது.

நவாஸ் ஷரீ ஃ பைத் தம் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து, முன்கூட்டியே அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நவாஸ் ஷரீஃபின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல பாகிஸ்தான் சென்று, நவாஸ் ஷரீ ஃ பின் பேத்தியின் கல்யாணத்துக்கு அழையா விருந்தாளியாகச் சென்று கட்டிப்பிடித்த நரேந்திர மோடிக்கு தேச பக்தி உண்டென்றால் இந்திய முஸ்லிம்களுக்கும் “அது” உண்டு. தினமலர் போன்ற எழுத்து விபச்சாரிகளால் அதை உணர முடியாது .

தமக்கு எதிராக எழுதும் ஊடகங்களை எதிர்த்து சங்பரிவாரக் கும்பல்களால் வைக்கப்பட்ட பெயர் ப்ரெஸ்டிட்யூட். இந்திய ஊடகங்களை ப்ரெஸ்டிட்யூட் (Presstitute) என முதலில் அழைத்தது மத்திய அமைச்சர் வீ கே ஸிங்.

அது முற்றிலுமாகப் பொருந்துவது தினமலருக்குத்தான்.

 – மஹ்மூத் அல் ஹஸன்

தினமலர் போன்ற இணைய தளங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் காணும் வாசகர்கள், சத்தியமார்க்கம் குழுமத்தினருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனநாயத்தின் நான்காம் தூண் என நம்பப்படும் ஊடகங்கள் மீது நம்பிக்கை கொண்டு உண்மையையும் நேர்மையான செய்திகளை மட்டுமே விரும்பும் வாசகர்கள் நேரடியாகவே இண்டிய பிரஸ் கவுன்ஸிலுக்கு முறையிடலாம்.

முகவரி: http://www.presscouncil.nic.in/Content/5_1_Complaint.aspx


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.