தோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (பகுதி-2)

Share this:

ஸுஹைல் இபுனு அம்ரு – 2
سهيل بن عمرو

நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் ஸுஹைல். கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதிய உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஹுதைபிய்யாவுக்குத் திரும்பி விட்டதால், கடுமை தளர்ந்து சமாதான ஒப்பந்தத்திற்கு இணக்கமாக, விட்டுக்கொடுக்கும் மனோநிலையில் இருந்தார்கள் நபியவர்கள். அதை மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார் ஸுஹைல். ‘எங்களுக்கு அவல், உங்களுக்கு உமி’ என்பதுபோல் உடன்படிக்கையின் ஒவ்வொரு அம்சமும் வடிவுக்கு வர ஆரம்பித்தன.

‘இப்பொழுது திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் உம்ராவை நிறைவேற்ற அடுத்த ஆண்டுதான் அனுமதி’ என்பது அதில் ஓர் அம்சம். மற்றொரு முக்கிய விதி, ‘குறைஷிகளில்இருந்து யாராவது தமது பாதுகாவலரான நெருங்கிய உறவினர் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரைக் குரைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம்உள்ளவர்களுள் யாராவது தப்பித்துக் குரைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.’ இது வேடிக்கையாகவும் முரண்பாடாகவும் தெரிகிறதில்லையா? அப்படித்தான் சமாதானம் பேசினார் ஸுஹைல்.

அடாவடியான அந்த உடன்படிக்கையில் தோழர்கள் யாருக்குமே உடன்பாடில்லை. ஆயினும் அனைவரும் நபியவர்களின் முடிவிற்குக் கட்டுப்பட்டனர். உடன்படிக்கையை எழுதுவதற்காக நபியவர்கள் அலீ ரலியல்லாஹு அன்ஹுவை அழைத்து வாசகங்களைக் கூற, அவரும் எழுத ஆரம்பித்தார். முதலாவதாக ‘பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் – அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று கூறினார்கள் நபியவர்கள்.

அதைக் கேட்ட ஸுஹைல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ரஹ்மான்-ரஹீம் என்றால் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. எனவே, அரபியரின் நடைமுறையிலுள்ள பிஸ்மிக்கல்லாஹும்ம – அல்லாஹ்வே உனது பெயரால் என்று எழுதுங்கள்” என்றார். சரியென்று அதை ஏற்றுக்கொண்டார்கள் நபியவர்கள்.

பின்பு ‘இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்’ என்று கூற அலீயும் அவ்வாறே எழுதினார். ஆனால், ஸுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் அவனது வீட்டிற்கு நீர் வருவதைத் தடுத்திருக்க மாட்டோமே! உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோமே! எனவே, அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதுங்கள்” என்று கூறினார்.

குரைஷிகள் முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் நபியவர்களை எதிர்த்ததும் அவர்களுடன் சண்டையிட்டதும் உண்மைதான். ஆயினும் அவ்விஷயத்தில் அவர்கள் எந்தளவு தீவிரமுடன் இருந்தார்கள் என்றால் ஏட்டளவிலும்கூட அதை ஏற்க அவர்களது மனம் ஒப்பவில்லை.

நபியவர்கள் சுஹைலிடம், “நீங்கள் என்னைப் பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதன்தான்” என்று கூறிவிட்டு அலீயிடம், ‘ரஸுலுல்லாஹ்’ என்ற சொல்லை அழித்துவிட்டு முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று எழுதும்படிக் கூறினார்கள்.

ஆனால் அலீ ரலியல்லாஹு அன்ஹுவுக்கு மட்டும் அது தாளவே இல்லை. இஸ்லாத்தின் அச்சாணிச் சொல்லை எப்படி அழிக்க முடியும்? அவர் அதை அழிப்பதற்கு மறுத்துவிட்டார். எனவே அந்தச் சொல்லைச் சுட்டுமாறு கேட்டு, நபியவர்களே தங்களது கையால் அதை அழித்து, உடன்படிக்கை எழுதி முடிக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கை எழுதுவதிலும் பேச்சுவார்த்தையிலும் மும்முரமாக இருந்த ஸுஹைல் இப்னு அம்ரு அப்பொழுது அங்கு நிகழ்ந்த ஒன்றைக் கவனிக்கத் தவறிவிட்டார். கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு மக்காவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிம் எப்படியோ தப்பி ஏதோ ஒரு பாதை வழியாக மலைகளைச் சுற்றி ஹுதைபிய்யா வந்து சேர்ந்திருந்தார். அவர் பெயர் அபூஜன்தல். சுஹைலின் மற்றொரு மைந்தர். தலை நிமிர்த்திய ஸுஹைல் முஸ்லிம்களுடன் தம் மைந்தர் நிற்பதைக் கண்டதும் அவருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. உடனே நபியவர்களிடம், உடன்படிக்கையின்படி அபூஜன்தலை என்வசம் ஒப்படையுங்கள் என்று வாதாட ஆரம்பித்துவிட்டார்.

‘குரைஷிகளில் இருந்து யாராவது தமது பாதுகாவலரான நெருங்கிய உறவினர் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரைக் குரைஷிகளிடம் திருப்பி அனுப்பிவிட வேண்டும்’ என்று உடன்படிக்கையில் ஒரு விதி இருக்கிறதல்லவா? அதைப் பிடித்துக் கொண்டார் ஸுஹைல்.

‘அவர் உடன்படிக்கை எழுதப்படும்முன் முஸ்லிம்களிடம் வந்தவர். அச்சமயம், அது எழுதி முடிக்கப்படவில்லையே’ என்பதை எடுத்துச் சொன்னார்கள் நபியவர்கள்.

“எனில் நான் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட முடியாது” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தார் ஸுஹைல்.

“அவரை என்னிடம் விட்டுவிடுங்கள் ஸுஹைல்” என்றார்கள் நபியவர்கள். குரைஷிகளுடன் வந்திருந்த மிக்ராஸுமேகூட அபூஜன்தலை நபியவர்களிடம் விடவேண்டும் என்றுதான் கூறினார். ஆனால் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ஸுஹைல் இல்லை. அந்த மகன் அப்துல்லாஹ் என்னடாவென்றால் பத்ரு யுத்தத்தில் அந்தப் பக்கம் குதித்தார். இந்த மகனோ ஒப்பந்த நேரத்தில் தப்பித்துவிடப் பார்க்கிறார். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்? அப்பனுக்கே பெப்பேவா? என்று கெட்ட கோபம். முட்கள் நிறைந்த மரக்கிளை ஒன்றைப் பறித்து அபூஜன்தலை அடித்துச் சாத்தத் துவங்கினார் ஸுஹைல். “அவரை விடு, துன்புறுத்தாதே” என்று நபியவர்கள் சொன்னது எதுவும் சுஹைலின் காதில் விழவில்லை. கடைசியாக சுஹைலின் நண்பர்கள் சிலர் அபூஜன்தலுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறியதும்தான் அடிப்பது நின்றது

நபியவர்கள், “அபூஜன்தல். பொறுமை காக்கவும். அல்லாஹ்வுக்காக உமது நிலைமையைப் பொறுத்துக் கொள்ளவும். அவன் உமக்கு நிச்சயம் உதவுவான், இந்தத் தீங்கை விட்டுக் காத்தருள்வான். நாம் இந்த மக்களுடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளோம். அதற்குக் கட்டுப்படுவோம் என்று அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுக் கூறியுள்ளோம். எனவே நாம் அதை மீற முடியாது” என்று ஆறுதல் கூறினார்கள்.

குரைஷிகளுக்கு வெற்றியும் முஸ்லிம்களுக்குப் பின்னடைவும் என்பதான தோற்றத்தை உருவாக்கிய ஹுதைபிய்யா உடன்படிக்கை அப்படியாக அமலுக்குவர, சோகத்தைத் தாங்கிக்கொண்டு மதீனாவிற்குத் திரும்பினார்கள் முஸ்லிம்கள். ஆனால் எவையெல்லாம் தங்களது வெற்றி என்று குரைஷிகள் கருதினார்களோ, அவை அத்தனையையும் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குச் சாதகமாக்கி அந்த உடன்படிக்கையை முழு வெற்றியாக மாற்றியமைத்தது இறைவன் நிகழ்த்திய அற்புதம்!. அவையெல்லாம் நபியவர்களின் வரலாற்றில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். நாம் அடுத்த ஆண்டிற்கு நகர்ந்து விடுவோம்.

ஹுதைபிய்யா நிகழ்வுக்கு அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ரா நிறைவேற்ற மக்காவுக்குச் சென்றனர். உடன்படிக்கையின்படி அவர்களுக்கு மூன்றுநாள் அனுமதி வழங்கப்பட்டது. அப்போதும்கூட சுஹைலின் வெறுப்பும் கடுமையும் தொடரவே செய்தது. உம்ரா முடிந்து, மூன்று நாள் கழிந்தது. சுஹைலும் ஹுவைதிப் இப்னு அப்துல் உஸ்ஸாவும் நபியவர்களிடம் வந்து, ‘உங்களது அனுமதி நேரம் முடிந்தது. கிளம்புங்கள், கிளம்புங்கள்’ என்று வெளியேற்ற ஆரம்பித்தார்கள்.

அச்சமயம் நபியவர்களுக்கும் மைமூனா பின்த் அல்-ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹாவுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. தம் திருமணத்தை மக்காவில் நடத்த விழைவதாகவும் அதற்கு அளிக்கவிருக்கும் விருந்தில் குரைஷிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்கள் நபியவர்கள். சுபச் செய்தி, சுஹைலின் மனம் இளகலாம் என்று எதிர்பார்த்தார்கள் நபியவர்கள். அதற்கெல்லாம் ஸுஹைல் அசரவில்லை.

“முடியாது. உங்களுடைய விருந்து எங்களுக்குத் தேவையில்லை. நகரை விட்டு வெளியேறுங்கள்” என்று கறாரான பதில்தான் வந்தது.

நபியவர்கள் உடன்பட்டார்கள். வெளியேறினார்கள். பிறகு மக்கா நகருக்கு வெளியே அமைந்துள்ள ஸரிஃப் எனும் இடத்தில்தான் அத்திருமணம் நடைபெற்றது.

இப்படியெல்லாம் முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்தும் ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டுப் போயிருந்தும் குரைஷிகளுக்கு அவர்கள் நினைத்த வெற்றி கிடைக்கவில்லை. மாறாகத் தம் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக் கொண்டதைப்போல் அதற்கடுத்த மாதங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளால் குரைஷிகளின் நிலைமை கேவலமாகிப் போனது. இறுதியில், ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டார்கள். அந்த இறுதிக் கட்டத்திலும்கூட குரைஷிகளின் சிறு குழுவொன்று, ஸஃப்வான், ஸுஹைல், இக்ரிமா இப்னு அபூஜஹ்லு ஆகியோரின் தலைமையில் ஆயுதங்களுடன் முஸ்லிம்களைத் தாக்கியது. என்னதான் அமைதிப்படையாக முஸ்லிம்கள் நகர்ந்து வந்தாலும் அந்தச் சிறு குழுவிற்கு இணக்கம் ஏற்படவில்லை. அம்புகள் பறந்துவந்தன. வேறுவழியின்றித் தற்காப்பிற்காக முஸ்லிம்கள் திருப்பித் தாக்கி, ஒருவழியாக குரைஷிகளின் அந்த எதிர்ப்பை முறியடித்தனர்.

அந்தளவு இறுதிவரை எதிர்த்துநின்ற ஸுஹைல் இப்னு அம்ரு அந்த மக்கா வெற்றியின்போதுதான் இஸ்லாத்தை ஏற்றார். அவரது அகக் கண் திறந்து. ரலியல்லாஹு அன்ஹு என்றானார்.

இன்னும் வருவார், இன்ஷா அல்லாஹ்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.