தமிழகம் ஃபாஸிசத்தின் குறி!

Share this:

முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி திட்டமிட்டு உருவாக்கிய ‘ஜிஹாதிகள்’ என்ற பெயரிலான பொய்ப் பிரச்சாரமடங்கிய குறும்படங்கள் பல தற்போது வலம் வருகின்றன. அதைப் பார்த்துவிட்டு, உணர்ச்சி வேகத்தில் யாரும் அதனை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் ஷேர் செய்யாதீர்கள். இதைக் காணும் எவரும் இதில் பல உண்மைக்குப் புறம்பான விஷயங்கள் உள்ளதைப் புரிந்துகொள்வர். எனவே, உணர்ச்சி வசப்பட்டு இந்த குள்ளநரித் தந்திரத்துக்கு பலியாகிவிடாமல் இதன் பின்னணியிலுள்ள சதியினைப் புரிந்துகொள்வது நம்முடைய எதிர்வினை எத்துணை புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

குஜராத்தில் மோடி வெற்றிபெற உறுதுணையாக அப்போது அவருடன் இருந்தவர்தான் அமித்ஷா; பாரதீய ஜனதா கட்சியின் இப்போதைய தேசிய தலைவர். கல்லூரி மாணவி இர்ஷத் ஜஹான், சொக்ராபுதீன் ஷேக் உட்பட பல்வேறு போலி என்கவுண்டர்கள், குஜராத்தில் நடந்தேறிய முஸ்லிம் இன அழிப்பு போன்றவற்றுக்கு மாஸ்டர் மைண்டாக செயலாற்றியவர்.

எளிதில் உணர்ச்சி வசப்பட்டுவிடும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் முஸ்லிம்களின் எதிர் ஓட்டுகளை ஒன்றிணைத்துப் பெறுவதுதான் இந்த இருவர் கூட்டணியின் கீழ்த்தர ஃபாஸிச அரசியல். இதனை குஜராத் தொடங்கி முஸஃபர் நகர் வரை நடத்திக் காட்டி வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறான கலவரங்கள் நடத்துவதன் முன்னர் கலவரத்தைத் தூண்ட இவர்கள் கையாளும் முறைகளில் லேட்டஸ்டான ஒன்றுதான் பொய்ப் பிரச்சாரமடங்கிய சிடிகளை வெளியிடுதல். முஸஃபர் நகர் கலவரத்துக்கு முன்னர் இதே போன்று இந்துப் பெண் ஒருவரை முஸ்லிம்கள் மானபங்கப்படுத்தியதாக ஒரு போலி சிடி வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக ஜாதி இந்துக்களைத் தூண்டிக் கலவரத்துக்கு வித்திட்டதை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கின்றோம்?

தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குகிறது. இதுவரை தென்மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவில் உருப்படியாக எதுவும் தேறாத நிலையில், இம்முறை எப்படியாவது கொஞ்சம் இடங்களையாவது கைப்பற்றி விடவேண்டுமென்பது பாஜகவின் கனவு. மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்கள் பெற்றிருந்தாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் தங்கள் விருப்பத்துக்குக் காரியமாற்ற முடியாமல் தவிக்கின்றனர். மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பது, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்தக் கட்சிக்கு இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அமையும். பீகாரில் தாங்கள் நினைத்தது நடக்காத நிலையில், தற்போது இவர்களுக்கு இருக்கும் அடுத்த வாய்ப்பு தமிழகமும் கேரளமும் தான்.

இதற்காக அதிமுக, திமுக ஆகியவற்றுடன் கூட்டணிக்கு முயன்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் அது நடக்க வாய்ப்பில்லை. தேமுதிக, பாமக ஆகிய இரண்டையும் அண்டிப் பிழைக்கலாம் என்றால் அவர்கள் இருவருமே முதல்வர் வேட்பாளர் நாங்கள் தான் என முரண்டு பிடிக்கின்றனர். இதற்கிடையே எப்படியாவது ரஜினிகாந்தின் ஆதரவினைப் பெற்றுவிடுவதற்காக அவர் பின்னால் பாஜகவினர் வாலாட்டித் திரிகின்றனர். ஆனால் அவர் கொடாக்கொண்டனாக பிடிகொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றார். மோடியே நேரடியாக ரஜனியின் வீட்டுக்கு வந்து யாசித்தும் அவர் அசைந்து கொடுக்காத நிலையில், அநேகமாக ரஜினியின் ஆதரவுக்கும் வாய்ப்பில்லை. இந்நிலையில் என்ன செய்வது என யோசித்து, தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தவர்களின் அடுத்த ஆலோசனைதான் இந்தப் பொய் ஆவணப்படம். இதன் மூலம் முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் கலவரம் உருவாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக மக்களின் சிந்தனையைத் திருப்பி அந்த ஓட்டுகளை அள்ளிக்கொள்ளலாம் என்பதுதான் அவர்கள் லட்சியக் கனவு. அதற்கு நாம் இடம்தரலாகாது. அறிவுப்பூர்வமாக அதற்கு எதிர்வினையாற்றுவோம்.

இதற்கான பதிலடி என்பது மோடி ஆட்சியின் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துள்ள கலவரங்கள், கொலைகள், ஊழல்கள், இந்தியாவை வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் விதத்திலான செயல்பாடுகள், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் 21 செப்டம்பர் 2015வரை 77கோடி ரூபாய் செலவில் 19 வெளிநாட்டுப் பயணங்கள், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சென்ற பின்னரும் இங்கு விலையினைக் குறைக்காமல் ஏழை, மத்தியத்தர மக்களின் வயிற்றில் அடித்துக்கொண்டிருப்பது முதலானவற்றை கலெக்ட் செய்து அவற்றைக் கொண்டு ஆவணப்படம் உருவாக்கி வெளியிடுவதுதான். இவ்வகையில் அறிவுப்பூர்வமாக எதிர்வினையாற்றுவோம். மக்களின் அமைதியான வாழ்வே முக்கியம். அதற்கு எதிராகச் செயல்படும் இத்தகைய சமூகவிரோத கும்பல்களை எல்லோரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம். அண்மைக் காலமாக சங் பரிவார மேடைகளில் டாக்டர் அம்பேத்கர் படமும் அலங்கரித்து வருவதைக் கண்டு வருகிறோம். எனவே, இனிமேலும் “இது பெரியார் பிறந்த மண்” என்று சொல்லிக்கொண்டு செயலாற்றாமல் நாம் சோம்பிக் கிடந்துவிடக் கூடாது.

நம் நாட்டை மதத்தின் பெயரால் கூறுபோட்டு சின்னாபின்னமாக்கும் வகையில் செயல்படும் ஃபாஸிஸ தேசவிரோதிகளின் செயலை, புத்திக் கூர்மையுடன் திட்டமிட்டு அம்பலப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்!

அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.