‘நீயா,நானா?’ திரு. கோபிநாத் அவர்களுக்கு…

ங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

“நம்ம தோசைய எடுத்துட்டு போய் காய்கறிங்கள சேத்து பிஸ்சான்னு பேர் வச்சு நம்மகிட்டயே மார்கெட்டிங் பண்றானுங்க”, “விடுங்க சார் அவங்கள..இளைய சமுதாயத்துக்கு நீங்க கத்துத் தர வேணாம்..அவங்களே கத்துக்குவாங்க” என்று முகத்தில் வழியும் வியர்வையினை விரல்களால் துடைத்துக் கொண்டே பல்வேறு கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பேசிய வீரியமிக்க பேச்சுகளே இளைய சமுதாயத்தின் இதயங்களில் உங்களுக்கு ஒரு தனி இடத்தைத் தந்தது.

அத்தோடு சிசுக்கொலை, தனியார் மருத்துவமனைகளின் அட்டுழியங்கள், வங்கிகளின் அடாவடிகள், மூட நம்பிக்கைகள் ஒழிப்பு என்று ‘நீயா, நானா?’வில் நீங்கள் எடுத்துக் கொண்ட பல GREY Topics, அவற்றின் இடையிடையில் நீங்கள் வெளிப்படுத்தும் அறச்சீற்றம் இவையெல்லாம் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக உங்களை உயர்த்தியது.

ஒரு பத்திரிகையாளராகவும், காவல்துறை அதிகாரியாகவும் உங்களை திரையில் கண்டபோது “நம்ம கோபிடா” என்று சொல்லி புளகாங்கிதம் அடைந்தார்கள்.

ஆனால் அண்மைக் காலமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகளும் அதில் அரங்கேற்றப்படும் மூன்றாம்தர நிகழ்வுகளும் மிகவும் வேதனையையும், ஒரு ஆற்றாமையினையும் ஏற்படுத்துகின்றது.

சினிமாக்காரர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்று இளைஞர்கள் உணர்ந்து வரும் சூழலில் நீங்கள் ‘விஜய் Vs அஜித்’ என்று அடித்துக் கொள்ள வழி ஏற்படுத்துகின்றீர்கள்.

மூடநம்பிக்கைகள், ராசிபலன்கள் இவையெல்லாம் அறிவுக்கு உகந்ததல்ல என்று எண்ணிவரும் இந்த இளைய யுகத்தில் புத்தாண்டு ராசிபலன்களை சொல்லும் ஜோதிடர் வேலை பார்க்கின்றீர்கள்.

‘காதலுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு’ என்று ஒரு மட்டமான தலைப்பில் மிக மோசமான நிகழ்ச்சியை, இந்தியக் கலாச்சாரத்தை அழிக்க வந்த மேலை நாட்டுக் காதலர் தினத்தை அடிப்படையாக வைத்து நடத்தியதன் மூலம், ஜல்லிக்கட்டிற்காக ஆகச்சிறந்த கலாச்சார மீட்டெடுப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கும் இளைய சமுதாயத்தினரைக் கொச்சைப்படுத்துகின்றீர்கள்.

ஏற்கனவே வட இந்தியாவில் கலாச்சார சீர்கேடுகளை முழுமூச்சாக அரங்கேற்றிவிட்ட துணிவில் ஸ்டார் நிறுவனம் இப்போது விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழகத்திலும் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வெளிப்படையான இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட நிகழ்ச்சிகள், தோல்வியைத் தாங்கிக் கொள்ள இயலாத மன அழுத்தம் மிகுந்த குழந்தைகளை உருவாக்கும் போட்டிகள், வெளிப்படையாக தரகர் வேலை செய்யும் ஜோடி நம்பர்.1 நிகழ்ச்சி என்று எல்லா வீடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கலாச்சாரச் சீரழிவில் நம்பர் ஒன்னாகத் திகழும் விஜய் தொலைக்காட்சி, உங்களை வைத்து இளைய சமுதாயத்தை இன்னும் சீர்கேட்டில் செலுத்த நீயா நானாவைப் பயன்படுத்துகின்றது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணச் செய்தி பிரகடனப்படுத்தப்பட்ட வேளையில் நீங்கள் பங்காற்றும் தொலைக்காட்சியில் ‘சிரிப்புடா’ நிகழ்ச்சியினை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நல்லவரோ கெட்டவரோ, மாநில முதல்வர் ஒருவர் மரணமடைந்தபோது ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளருடைய திறமை(!) வெளிப்பட்டது.

தேசத்தின் தலையாய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க, விவாதம் நடத்த உங்களுக்கு, ‘காதலுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு’ என்ற இந்தத் தலைப்புதான் கிடைத்ததா..?

காதலுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு என்று தலைப்பு வைத்துவிட்டு கள்ளக்காதலுக்கு அடித்தளம் இடுவது நியாயமா..?

கண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்… நம் குடும்பத்துச் சகோதரிகளை இப்படிப் பொது இடத்திற்கு அழைத்து வந்து, “உங்களுக்கு யாரப்பிடிக்குதோ அவங்க பக்கத்துல போய் நின்னுக்கோங்க”ன்னு சொல்ல மனம் வருமா..?

அதிலும் அந்த நிகழ்ச்சியில் இடையில் நீங்கள் ஒரு நடனம் ஆடினீர்களே … பார்க்க சகிக்கல…

தயவு செய்து காதுகளில் இருக்கும் மைக்கை கழற்றித் தூர எறிந்துவிட்டு, கண்களைத் திறந்து பாருங்கள். ஆயிரம் பயனுள்ள தலைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன விவாதம் நடத்த…

மதுவினால் விதவையான பெண்களை அழைத்து விவாதியுங்கள்…

கல்வி வியாபாரத்தில் தந்தையின் விவசாய நிலத்தை இழந்தும் தரமான கல்வியோ, வேலை வாய்ப்போ பெறாத இளைஞர்களை அழைத்து வந்து, அவர்களது மனக்குமுறலை விவாதமாக்குங்கள்…

அழிந்துவரும் நீராதாரங்களையும், அவற்றை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும் விவாதியுங்கள்…

நந்தினி, புனிதா என்று உயிருடன், பெற்றோர்களின் கனவையும் சேர்த்து இழந்த பெண்களுக்கு நீதி வேண்டும் என்று உங்கள் விவாதம் மூலம் ஓங்கி ஒலிக்க செய்யுங்கள்…

இன்னும் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க உங்கள் விவாத களத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் என்ற அந்தப் பொறுப்பிற்கு கண்ணியம் அளிக்கும் செயல்களில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். அதற்கு விஜய் தொலைக்காட்சி தடையாக இருந்தால்… உங்களை அள்ளி அணைத்துக் கொள்ள எத்தனையோ நவீன தொலைக்காட்சிகள் காத்திருக்கின்றன.

சமுதாய மறுமலர்ச்சிக்கான செயற்பாட்டாளராக உங்களைக் காணும் ஆவலுடனேயே இதை எழுதுகின்றேன். சொற்களில் தவறிருக்கலாம். ஆனால் எண்ணத்தில் அல்ல.

இவண்,
அபுல் ஹசன் R
9597739200