அன்புள்ள பெற்றோர்களே …!

பிள்ளைகளைப் பெற்றவர்களே!

ஆணாயினும் பெண்ணாயினும் உங்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுக்களை முதல் அரசியல் வரை விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை;

இயற்கையை நேசிப்பது முதல் இறுதிவரை வாசிப்பது வரை;

சமூகம் குறித்த உரையாடல்களை உங்களிடம் இருந்து துவக்குங்கள்.

அவர்களது உள்ளங்களில் அடைத்து வைத்துள்ள இரகசியங்களை உங்களிடம் உடைக்கச் செய்யுங்கள்.

வீட்டிற்கு வெளியே, தெருவில், வகுப்பறையில், தோழி/தோழன் வீட்டில், மைதானத்தில், மயானத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் பகிரும் அவர்களுடைய டைரிகளாக நீங்கள் மாறுங்கள்.

உடலில் ஏற்படும் பருவ மாற்றங்களை அறிவதற்காகத் தவறான நட்புகளையும் இணையப் பக்கங்களையும் அவர்கள் நாடுவதற்கு முன் சரியானதை நீங்கள் கற்றுக் கொடுத்துவிடுங்கள்.

எதையும் பகுத்தறியக் கற்றுக் கொடுங்கள்.

அம்மணமாய் திரிபவர்கள் திரியட்டும்; உங்கள் பிள்ளைகள் ஆடையுடன் உலாவட்டும்.

அவர்களது கேள்விகளை தடுத்து, சிந்தனையை முடமாக்கிவிடாதீர்கள்.

கல்வியைக் கற்கச் செய்யுங்கள்; வெறுக்க வைக்கும் வகையில் திணிக்காதீர்கள்.

விடலைப் பருவம் விடைபெற்று, இளமைப் பருவம் எட்டிப் பார்க்கும்போது உடலிலும் மனத்திலும் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை என்பதை இதமாக உணர்த்துங்கள்.

கருக் கொள்வது முதல் உயிர்பெற்று உருக்கொள்வது வரை உயிர்ப் படிநிலைகளைப் பயிற்றுவியுங்கள்.

“பெரியவர்கள் பேசும் இடத்தில் உனக்கென்ன வேலை?” என்று கேட்காமல் வீட்டு வேலைகள் தொடங்கி, விவாதங்கள் வரை அவர்களையும் உட்படுத்துங்கள்.

எதையும் மோதித் தெளியும் தீர்க்கமான மனநிலையைப் பிஞ்சு மனங்களில் விதைத்துவிடுங்கள்.

பெரியவர்களை மதிக்கச் சொல்லுங்கள்; சிறியவர்களிடம் அன்பு செலுத்தப் பழக்குங்கள்.

மனிதனாய் வாழ முதல் தகுதி சக மனிதனை சமமாக மதிப்பதுதான் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இவை அனைத்திற்கும் முன்பு கற்பிக்க நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள்தான் உங்கள் பிள்ளைகளுக்கு முதல் ஆசான். உங்கள் இல்லம்தான் அவர்களுக்கு முதல் வகுப்பறை.

அவர்கள் படிக்கும் முதல் செய்தித்தாள் நீங்கள்தான்.

அவர்களுக்கு சமூகம் பற்றிய பார்வையை அளிக்கும் கருவிழி நீங்கள்தான்.

பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் முன்பு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

அப்போதுதான் அவர்களும் தயாராவார்கள் – நம் தேசத்தை மீள்கட்டமைக்க!

ABUL HASSAN R
9597739200