கோடி ரூபாய் கனா!

Share this:

லைப்ரெரி ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று நசீர் என்னிடம் சொன்னபோது ‘சுமாரு’க்கும் சற்று அதிகமான ஆவலோடு, “அப்படியா? எங்கே?” என்று விசாரித்தேன். நசீர் என்னுடைய மாமாவின் புதல்வன். பல்லாண்டு வளைகுடா வாசத்திற்குப் பின், ஊர் திரும்பி, கட்டடக் கட்டுமானப் பணியில் இறங்கி, தஞ்சையில் இப்பொழுது சொல்லிக் கொள்ளும்படியான கட்டடக் கலைஞன்.

சற்று வித்தியாசமான ப்ராஜெக்டுகளைப் பற்றி என்னுடன் தகவல் பரிமாறிக் கொள்வது நசீரின் வழக்கம். அப்படியாகத்தான் இந்தச் செய்தி சென்ற ஆண்டு தொலைபேசி உரையாடலின்போது என்னை அடைந்தது. “அய்யம்பேட்டையில் கட்டுகிறேன்” என்று என் கேள்விக்கு பதில் கிடைத்ததும், “அய்யம்பேட்டையிலா? நூலகமா?” என்று இப்பொழுது ‘சுமார்’ விடைபெற்று முழு அளவிலான ஆவலும், ஆச்சரியமும் என்னைப் பற்றிக்கொண்டன!

தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் அய்யம்பேட்டை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அவ்வூரில் என் அண்ணன் குடும்பமும் ரத்த சொந்தங்களும் உள்ளனர். ஆனால், என் ஆர்வத்திற்கு அதுவன்று காரணம். நூல் வாசிப்புப் பழக்கம் அரதப் பழசாகி, நூல்களெல்லாம் இனி மியூஸியத்திற்கே என்று மனத்தால் தாரை வார்த்துவிட்டு, மென் திரைகளில் எழுத்துகளை மேலோட்டமாய் மேய்வதுடன் திருப்தி அடைய ஆரம்பித்து விட்டது, ‘இக்ரஃ’ என்ற ஒருசொல் கட்டளையால் மீளெழுச்சியுற்ற இச் சமூகம். விலக்கின்றி, அத்தகைய மனோநிலை பெரிதும் பரவியுள்ள ஊர்தான் அய்யம்பேட்டையும். அப்படியிருக்க அங்கு இக் காலத்தில் நூலகமா?

“இங்கு எல்லோரும் அப்படித்தான் கேட்கிறார்கள். ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லார் மனத்திலும் அதுதான் கேள்வி. ஆனால் ஜஃபருல்லாஹ் பாய் பெரும் கனவுடன் இதை உருவாக்கி வருகிறார்” என்று நசீரின் விளக்கம் விரிந்தது.

அய்யம்பேட்டையைச் சேர்ந்த சகோதரர் ஜஃபருல்லாஹ் பல்லாண்டுகளாக புருனையில் தொழில் புரிகிறார். தாம் ஈட்டிய செல்வத்தைக்கொண்டு மறுமைக்கும் ஊருக்கும் என்ன செய்யலாம் என்று யோசனை ஓட ஆரம்பித்திருக்கிறது. அய்யம்பேட்டையில் பள்ளிவாசல்களுக்குக் குறைவில்லை. பள்ளிக் கூடங்கள், திருமண மண்டபம் என்பனவும் உண்டு. ஏன் அவரேகூட மண்டபம் கட்டி விழாவும் நடத்தியிருக்கிறார்தான். ஆனால், நமது செயல் நம்முடைய மறுமைக்கும் இச் சமூகத்திற்கும் மெய்யான பலன் அளிக்கக்கூடியதாய் இருக்க வேண்டுமே என்று ஆற, தீர யோசித்தவரின் முடிவுதான் நூலகம்.

விளைவு, கோடி ரூபாய் செலவில் ‘அஞ்சுமன் அறிவகம் இஸ்லாமிய கலாச்சார மையம்’ உருவாக ஆரம்பித்தது. வலுவான கட்டடம்; இஸ்லாம் மட்டுமின்றி பல்வேறு வகையான தமிழ் நூல்கள்; சமூகத்திற்குப் பயன்படும் ஆங்கில நூல்களையும் சேர்த்துக் கொள்வோம். மக்கள் வந்து வாசிக்கட்டும், பயனுறட்டும், அவரவர் வசதிக்கேற்ப புத்தியை அபிவிருத்தி செய்து கொள்ளட்டும் என்பது அவரது குறிக்கோளாகிவிட்டது. அறக்கட்டளை தொடங்கி, பணியை ஆரம்பித்து விட்டார். நிமிர ஆரம்பித்தது அஞ்சுமன் அறிவகம்.

நசீருடனான முதல் உரையாடலுக்குப் பிறகு அவ்வப்போது இந்த ப்ராஜெக்டைப் பற்றி காதில் விழுந்து கொண்டிருந்த தகவல்கள், தாயகத்திற்குச் சென்ற மாதம் விடுப்பில் சென்றிருந்தபோது சகோ. ஜஃபருல்லாஹ்வை நேரில் சந்திக்க அமைந்த யதேச்சையான வாய்ப்புக்கு சுவையைக் கூட்டிவிட்டன. அளவளாவலின் போது வெறுமே நூலகம், சதக்கா என்பனவற்றைத் தாண்டி சமூகத்தில் தேய்ந்து வரும் அறிவாற்றலை மீட்டெடுக்க எதையாவது செய்தே தீர வேண்டும் என்ற ஆதங்கம் அவரது நோக்கத்தில் அடிநாதமாக ஒட்டியிருந்ததை எளிதாகக் கண்டுகொள்ள முடிந்தது. தவிர, வாசிப்புப் பழக்கமும் அவருக்கு இருக்கிறது என்பதையும் உணர முடிந்தது.

அழைப்பு விடுத்தார். பூர்த்தியாகி, திறப்பு விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த நூல் நிலையத்தை நேரில் சென்று பார்த்தேன். இலவச நூல் நிலையம் தானே, சில மர அலமாரிகள், நீள மேசை, சொற்ப நாற்காலிகள் போதும் என்று சமாதானப்படுத்திக்கொள்ளாமல், கட்டிடமும் வடிவமைப்பும் உள் கட்டுமான வசதிகளும் உயர் ரகம்; தரம். நூலக ஹாலின் பின்புறம் செமினார், ஆலோசனைக் கூட்டம் போன்றவை நடத்துவதற்கு உண்டான கட்டமைப்பு, ஆய்வுத்துறை மாணவர்களுக்கான ஏற்பாடு, நிர்வாக, பராமரிப்புப் பணிகளுக்காக முழு நேர ஊழியர்கள் என்று நேர்த்தி. ஜனவரி 15, 2017 திறப்பு விழா என தேதி குறிக்கப்பட்டு, விரிவான விழாவுக்கு மும்முரமாய் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. புதிதாய் வந்து இறங்கிய நூல்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

‘மக்கள் தங்களிடம் உள்ள பழைய நூல்களை, ‘இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறதே, எப்படி தலை முழுகலாம்?’ என்று கவலைப்பட்டால், எங்களிடம் கொடுத்துவிடலாம். தூசு தட்டி, அவற்றையும் இங்கு அடுக்கி வைத்துவிடுவோம்’ என்றார் சகோ. ஜஃபருல்லாஹ். கொடுத்துவிட்டு, பழைய பேப்பர்காரனிடம் பேரம் பேசுவதைப்போல் இவரிடம் நம் மக்கள் பேரம் பேசாமல் இருக்க வேண்டுமே என்று இலேசான கவலை எனக்குள் எட்டிப் பார்த்தது. கூடவே மற்றொன்றும் நினைவில் வந்தது.

… medieval Islam hungered for learning and inspired brilliant scholarship. Paper displaced papyrus, bookshops thrived, libraries graced the homes of the rich. At the end of the ninth century, according to the geographer al-Ya’qubi, one street in Damascus had a hundred bookshops. (‘Saladin – The Sultan Who Vanquished The Crusaders and Built an Islamic Empire’ by John Man)

மத்திய காலத்தில் கற்கும் தாகத்தில் முஸ்லிம்கள் தவித்திருக்கின்றனர். அத் தாகம் பற்பல ஞானவான்கள் உருவாக ஊக்கமளித்திருக்கிறது. பாப்பிரஸின் இடத்தைக் காகிதம் ஆக்கிரமித்திருக்கிறது. புத்தகக் கடைகள் செழிப்படைந்திருக்கின்றன. செல்வந்தர்களின் இல்லங்களை நூல் நிலையங்கள் அலங்கரித்திருக்கின்றன.  ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் டமாஸ்கள் வீதியொன்றில் நூற்றுக்கணக்கான புத்தகக் கடைகள் நிறைந்திருந்தன என்கிறார் புவியியல் வல்லுநர் அல்-யாகூபி.

அன்றைய டமாஸ்கஸில் தெருவெல்லாம் நூல் வாசம் வீசியிருக்கும் போலும்.

“எப்படி இருக்கிறது? என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

தனி நபராக அவர் முன்னெடுத்து முடித்துள்ள இந்தக் காரியம் எனக்கு ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது! கோடி ரூபாய்க்கு செக் எழுதி ஏதாவது நூலகத்திற்கு அவர் நன்கொடை அளித்திருக்கலாம்தான். எளிதாய் முடிந்திருக்கும். ஆனால் வரிந்து கட்டி இறங்கியிருக்கிறார். வளர்ந்து நின்றிருந்த கட்டடத்தை நிமிர்ந்து பார்த்தேன். ஒவ்வோர் அங்குலத்திலும் அவரது கனவு முலாம் பூசியிருந்தது.

பிழை பொறுத்து ஏற்றுக்கொள்ளவும் அருள் பொழியவும் வல்ல இறைவன் போதுமானவன். அது மறுமைக்கு. இம்மையில்?

“உங்கள் பணியைச் செவ்வனே முடித்து விட்டீர்கள். பயன்படுத்திப் பலனடைவதும் இதன் பெருமையை உணர்வதும் அவர்கள் கையில்” என்று ஊர்ப் பக்கம் கையைக் காட்டினேன்.

-நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.