எஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு?

Share this:

நடைபெறும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் சிறுபான்மை மக்களிடையே எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவு உண்டு. கடந்த ஐந்தாண்டுகால மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கொடூரத்தை உணராமல், இப்போதும் எம் ஜி ஆர் – ஜெயலலிதா மீதான அபிமானத்தில் இருக்கும் ஒரு சில முஸ்லிம்களை ஒதுக்கிவிட்டால், இம்முறை முஸ்லிம்களின் ஓட்டு பாசிச பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பது திண்ணம்.

அதே சமயம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் சிறு சலசலப்புகள் முஸ்லிம் சமூகத்தினுள் ஏற்பட்டுள்ளது. இதற்கு, தினகரனின் அமமுக கட்சிக்கு ஆதரவு அளித்து, மத்திய சென்னையில் போட்டிக்கு இறங்கியுள்ள (SDPI) எஸ் டி பி ஐ கட்சியும் அதன் வேட்பாளராக இறங்கியுள்ள தெஹ்லான் பாகவி மீதான தனிப்பட்ட அபிமானம் காரணம்.

மத்திய சென்னையை மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கே போட்டியிடும் வேட்பாளர்களில் சிறந்தவர் யார், தன்னலத்தைவிட சமூக நலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் யார் என்ற ரீதியில் பார்த்து வாக்களிக்க முடிவு செய்தால் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் தெஹ்லான் பாகவிக்கே வாக்களிக்க வேண்டும். அதே போன்று, கட்சிகளுக்கிடையே பண அரசியலைக் கடந்து எல்லோருடைய பிரச்சனைகளுக்கும் தன்னலம் பாராமல் முன் நின்று போராடும் கட்சி என்ற வகையில் இருப்பதில் சிறந்தது என்று தேடினாலும் எஸ் டி பி ஐயினைக் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்து விடலாம்.

ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பான்மை அமைப்புகளும் மக்களும் அவ்வாறான முடிவை எடுக்கவில்லை. போட்டியிடுவதில் சிறந்தவர் யார், சிறந்த கட்சி எது என்று பார்த்து வாக்களிக்கும் தேர்தல் அல்ல இது என்ற அறிவுசார்ந்த யதார்த்தம் அறிந்த முடிவிற்கு முஸ்லிம் சமூகம் வந்ததே அதற்குக் காரணம்.

நடக்கும் தேர்தல் எதற்கான போராட்டம் என்ற கேள்விக்கு, ஜனநாயகத்தைப் பாசிசத்திடமிருந்து பாதுகாப்பதற்கான போராட்டம் என்பதே எவருடைய பதிலாக இருக்கும்.

இந்த தெளிவு பெறப்பட்டு, பாசிச பாஜகவுக்கு எதிராக அளிக்கும் ஓட்டு அதனை ஆட்சியிலிருந்து அகற்றி இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்பட மட்டுமே பயன்பட வேண்டும், மறைமுகமாகக்கூட பாசிசத்துக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்ற தீர்க்கமான எண்ணத்தில் நன்கு கலந்தாலோசனை செய்தே கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை அமைப்புகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தன. இதில், தமிழக உலமாக்களின் அமைப்பும் ஒட்டுமொத்த பள்ளிவாசல்களின் கூட்டமைப்பும் உள்ளடங்கும்.

இவ்விதம் மிகத் தெளிவாக நோக்கம் வரையறுக்கப்பட்டுச் சமுதாயம் ஒரே திசையில் பயணிக்கும் நிலையில்,

நடக்கும் தேர்தல் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கான போராட்டம் என்ற ரீதியில் திடீரென எஸ் டி பி ஐயால் திசை திருப்பப்பட்டது. கூட்டணியில் எஸ் டி பி ஐக்கு இடம் ஒதுக்காமல் திமுக புறக்கணித்ததே அதற்கான காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே கூட்டணியில் ஒரு சீட் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து, இறுதி நேரத்தில் கொடுக்காமல் வஞ்சகம் செய்யப்பட்ட நிலையிலும்கூட ஒட்டுமொத்த சமூக நன்மைக்கும் நாட்டின் நன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முஸ்லிம்களுக்குரிய உரிமையினைத் திமுக தராத நிலையிலும்கூட அக்கூட்டணிக்கே ஆதரவு என்று அதிரடி முடிவினைக் கட்சி தொண்டர்களின் எதிர்ப்பினையும் எதிர்பார்ப்பினையும் மீறி மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது. இதற்கும், நடக்கும் போராட்டம் எதற்கானது என்பதில் அவர்களுக்கிருந்த தீர்க்கமான முடிவே காரணம். தம் கட்சியினைத் திமுக புறக்கணித்ததன் வழி முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் பாசிசத்திடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பதில் சேர்ந்து நிற்க வேண்டுமென மமக எடுத்த முடிவு சரியா அல்லது தமக்கு சீட் தராமல் ஏமாற்றியதால் பாசிசத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதைவிட இத்தேர்தலிலேயே திமுகவுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்ற கோபமான முடிவுக்கு எஸ் டி பி ஐ கட்சி வந்தது சரியா?

திமுகவுக்குப் பாடம் புகட்ட, நடக்கும் தேர்தல் தமிழகச் சட்டமன்றத்துக்கான தேர்தல் அல்ல; மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான பாசிசத்துக்கு எதிரான ஆட்சியைக் கொண்டுவருவதற்கான தேர்தல் என்ற ஒற்றைவரியிலேயே இதற்கான பதில் கிடைத்துவிடும்.

இவையெல்லாம் நன்கு புரிந்த சூழலிலும் சிலரிடையே, மார்க்கத்துக்காகவும் சமுதாயத்துக்காகவும் போராடும் எஸ் டி பி ஐக்கும் முஸ்லிம் வேட்பாளர்களுள் சிறந்தவராகத் தெரியும் தெஹ்லான் பாகவிக்கும் மத்திய சென்னையில் மட்டும் வாக்களிக்கலாமே என்றதொரு எண்ணம் ஏற்பட்டுள்ளது.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவினைவிட தீர ஆராய்ந்து எடுக்கும் முடிவில் அதிகத் தெளிவும் சரியும் இருக்கும். அவ்வகையில், இவ்வாறான எண்ணம் வைப்பது சரிதானா என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்போம்.

1 – ஒரு முஸ்லிம் என்ற காரணத்துக்காக தெஹ்லான் பாகவிக்கு வாக்களிக்கலாமா?

கமீலா நாசர்
கமீலா நாசர்

மத்திய சென்னையிலேயே மற்றொரு முஸ்லிம் கமீலா நாஸர், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நிற்கிறார். அவரைவிட தெஹ்லான் பாகவி சிறந்தவர் என்று சொல்ல வருவோமேயானால், இதே எஸ் டி பி ஐ கட்சி ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள முஸ்லிம் வேட்பாளரான நவாஸ் கனிக்கு எதிராக பணியாற்றுகிறது. வெற்றிவாய்ப்புள்ள முஸ்லிமை எதிர்த்து அவரைத் தோற்கடிக்கப் பணியாற்றும் எஸ் டி பி ஐக்கு, அதன் வேட்பாளர் முஸ்லிம் என்ற காரணத்துக்காக முஸ்லிம் சமூகம் வாக்களிக்க வேண்டுமென சொல்வதில் சிறிதாவது நியாயம் உள்ளதா?

2 – எஸ் டி பி ஐ கட்சியும் தெஹ்லான் பாகவியும் மார்க்கத்துக்காக ஆற்றியுள்ள சேவைக்காக தேர்வு செய்யலாமா?

முதலில் எஸ் டி பி ஐ ஒரு முஸ்லிம் கட்சியல்ல. அதன் தலைவர்கள் மிகத் தெளிவாக இதனைப் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளனர். அப்படியிருக்கும்போது, முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்காக எஸ் டி பி ஐ ஒரு சீட் வாங்கி போட்டியிடுகிறது என்று சொல்வதே அபத்தமானது. இந்நிலையில், இஸ்லாமிய மார்க்கத்துக்காக எஸ் டி பி ஐ ஆற்றிய சேவைகள் என்னென்ன?

பி. ஜைனுல் ஆபிதீன்
பி. ஜைனுல் ஆபிதீன்

இஸ்லாமிய மார்க்கத்துக்கு ஆற்றும் சேவை என்பது, அதன் அடிப்படைகளான குர்ஆன், ஹதீஸைப் பாதுகாப்பதும் அதன் மூல நாயகர்களாக விளங்கும் முஹம்மது நபி மற்றும் அவர்களின் தோழர்களான சஹாபிகளின் கண்ணியத்தைப் போற்றி பாதுகாப்பதுமே முதல் விஷயமாகும். இவ்விஷயத்தில் எஸ் டி பி ஐ ஆற்றிய சேவைகள் என்னென்ன? மாறாக, இவையெல்லாம் இஸ்லாமிய சமூகத்தினுள் ஆன்மீகத்தின் மறைவில் காம வெறியாட்டம் நடத்தி வந்த பி. ஜைனுல் ஆபிதீன் என்ற பிஜேவால் கபளீகரம் செய்யப்பட்ட வேளையில் சிறு துரும்புகூட அதற்கு எதிராக அசைக்காமல் வாய்பொத்தி மவுனமாக கடந்து சென்றவர்கள்தாம் இவர்கள். நபிகளாருக்கு எதிராகவும் சஹாபிகளுக்கு எதிராகவும் கடுமையான, வஞ்சனை தோய்ந்த விமர்சனங்களை ததஜ அமைப்பு கொண்டு நடந்த வேளையில், ஒரு ஆலிம் என்ற நிலையிலாவது தெஹ்லான் பாகவி அதற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டும். இமாம்கள் நபிமார்களின் வாரிசுகள் என்ற அடிப்படையில், தெஹ்லான் பாகவி நபியின் பேரர் எனக்கூறி பிரார்த்திக்கும் அளவுக்கு, நபிகளாரும் சஹாபிகளும் தாக்கப்பட்ட போதும் இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனிலும் ஹதீஸிலும் இக்கூட்டம் தம் விருப்பத்துக்கு விளையாடிய போதும் மார்க்கத்துக்காக இமாம் என்ற அடிப்படையில் பாகவி செய்தது என்ன? நபிகளுக்காக, மார்க்கத்துக்காக அவற்றை எதிர்க்க துணிச்சல் வராதது ஏன்? ஆக, மார்க்கத்துக்காக SDPI சேவையாற்றுகிறது எனக் கூறுவது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற நாடகம் மட்டுமே.

3 – இனி, முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக அதன் பாதுகாப்புக்காக தெஹ்லான் பாகவி உழைக்கிறார் என்பதால் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதில் எவ்வளவு நியாயமுள்ளது?

முஸ்லிம் சமுதாயத்தின் நன்மை, பாதுகாப்பு என்பது என்ன? அது வெறும் பாசிசத்தால் வருவது மட்டும்தானா? பாசிசத்தால் வரும் ஆபத்தை எதிர்கொள்ள ஜனநாயக சக்திகள் வீரியமாக முன்னிலையில் உள்ளன. கூடுதலாக, முஸ்லிம்களிடையிலேயே ஒரு அமைப்பும் இருப்பது நல்லதுதான். அதே சமயம், முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளிலிருந்தே வரும் சமுதாயத்துக்கு எதிரான ஆபத்துகளை எதிர்கொள்வது யார்? அவ்விஷயத்தில் தெஹ்லான் பாகவியும் எஸ் டி பி ஐயும் செய்தது என்ன? செய்து கொண்டிருப்பது என்ன?

இன்று தமிழக முஸ்லிம்களின் உள்ளிலிருந்தே அரித்துக் கொண்டிருக்கும், சமுதாயத்தைச் சீரழிக்கும் சக்தி எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பி.ஜே என்ற காமப் பைத்தியத்தின் பக்கம் கை காட்டி விடலாம். நித்யானந்தா போன்ற ஆன்மீகத்தின் மறைவில் சமுதாயத்தைக் கபளீகரம் செய்யும் காமச்சாமியார்கள் ஒழிக்கப்பட வேண்டியது கட்டாயம். ஆனால், இதனை அச்சமுதாயங்களால் உறுதியாக செய்ய முடிவதில்லை. தமக்கிருக்கும் பண மற்றும் அதிகார பலத்தினால் மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். அவர்களின் வளர்ச்சி சமுதாயத்தின் சீரழிவு என்பதில் ஏதாவது மாற்று கருத்திருக்க முடியுமா? அவ்வாறான ஒரு நாசகார சக்தி முஸ்லிம் சமூகத்தினுள்ளும் வலம் வந்தது. அதனை இச்சமூகத்துக்கு அடையாளம் காட்டி, ஒழித்துக் கட்டியிருக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு அதிகம்? அவ்விஷயத்தில் எஸ் டி பி ஐ கட்சியும் தெஹ்லான் பாகவியும் என்ன செய்தனர்? சாதாரண மக்களால் பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கையும் களவுமாக ஆதாரங்களுடன் பிடிக்கப்பட்ட பின்னரே பிஜே என்ற காமப்பைத்தியத்தின் போலிமுகமூடி கிழித்தெறியப்பட்டது. SDPI கட்சிக்கு எதிராகவோ அதன் உறுப்பினர்களுக்கு எதிராகவோ யாரேனும் எதையாவது செய்தால், அதற்குப் பதிலடி கொடுப்பதற்குக் காட்டிய ஆர்வத்தில் எத்தனை சதவீதம் பிஜே விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

மார்க்கத்தின் பெயரால் பிஜே என்பவர் அணிந்த போலி முகமூடி SDPI தலைமை அறியாததா? அறிந்தும் தடுக்காமல் பிஜேவுக்குப் பாதுகாப்பாக இருந்தனர் என்பது எவ்வளவு பெரிய குற்றம்? கையும் களவுமாக பிடிக்கப்பட்டு இன்று எல்லாமே மக்களுக்குத் தெரிந்துவிட்டப் பின்னரும் எந்தக் கூச்சமும் இல்லாமல், நித்யானந்தாவைப் போன்றே இந்த பிஜே மீண்டும் களமிறங்கி வலம் வருவதற்குக் காரணம் யார்? விபச்சார பஞ்சாயத்து செய்த புரோக்கர் அப்பல்லோ ஹனிபாதானே? பிஜேவைக் காப்பாற்ற அப்பல்லோ ஹனீஃபா செய்த அந்த விபச்சார பஞ்சாயத்து நடந்தது உண்மைதான் என்ற SDPI யின் ஒரே ஒரு சொல் போதுமே, முஸ்லிம் சமுதாயத்தினுள்ளிருக்கும் இந்த பீஜேயானந்தாவை அழித்தொழிக்க? அதனைச் செய்யாமல், அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து அப்படியொன்று நடக்கவேயில்லை என மறுத்த அப்பல்லோ ஹனீபா மன்னிக்கப் படக்கூடிய தவறா செய்துள்ளார்? அந்த அப்பல்லோ ஹனீபாவின் கட்டிடத்தில் தெஹ்லான் பாகவியின் கட்சி தலைமை அலுவலகம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்காக, அப்பல்லோ ஹனீபாவை அவரின் கட்சி மேடைகளில் அழைத்துச் சென்று அலங்கரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு சாதாரணமானதா? இதுவா தெஹ்லான் பாகவி முஸ்லிம் சமுதாயத்தைப் பாதுகாக்கும் லட்சணம்?

அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும், நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் இங்கேயுள்ள அத்தனைக்கும் பதிலளிக்காமல் இம்மி அளவுகூட அசைய முடியாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள முஸ்லிம்களே நன்றாக மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்….

இனியும் வரும் தலைமுறையிலுள்ள எத்தனையோ அப்பாவி இளைஞர்களை வழிகெடுக்கத் தயாராக முஸ்லிம் சமூகத்தினுள் மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு இறங்கியுள்ள காமச்சாமியார் பிஜேவின் மறுவருகைக்குக் காரணம் விபச்சார புரோக்கர் அப்பல்லோ ஹனீபா. அவர், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி பிஜேவின் முகமூடியை முழுமையாக கிழித்தெறியாமல் இந்தப் புல்லுருவியிடமிருந்து முஸ்லிம் சமுதாயம் தப்ப முடியாது. ஒட்டு மொத்த இந்த நாடகத்தின் துருப்புச் சீட்டைக் கைவசம் வைத்துள்ளவர் தெஹ்லான் பாகவி. இவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தைக் கொண்டு, முஸ்லிம் சமுதாயத்துக்கு நிஜமாகவே நன்மையை நாடியிருந்தால் அப்பணியினைத் தெஹ்லான் பாகவி என்றோ செய்திருக்க வேண்டும். மாறாக, வாய் மூடி மவுனமாக கடந்து செல்வதோடு விபச்சார புரோக்கர் அப்பல்லோ ஹனீபாவையும் தூக்கி சுமக்கும் தெஹ்லான் பாகவி சமுதாயத்துக்கு மாபெரும் துரோகம் செய்கிறார். எதற்காக? அவரின் கட்சிக்காக. கட்சியின் நன்மைக்காக சமுதாயத்தைப் பலிகொடுப்பது சரியா?

இப்போது முடிவு செய்வோம்,

முஸ்லிம் என்பதற்காகவோ மார்க்கத்துக்காகவோ அல்லது சமுதாயத்துக்காகவோ என எண்ணி தெஹ்லான் பாகவிக்கு வாக்களிப்பது சரியான முடிவா? அல்லாஹ்வினை முன் நிறுத்தி முடிவு செய்வோம்!

மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வரலாம்.

இந்த ஆய்வு எதற்காக? எஸ் டி பி ஐ கட்சி ஒரு முஸ்லிம் கட்சியல்ல; அது, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான எல்லோருக்கும் சமநீதி கிடைக்கப் போராடும் ஒரு ஜனநாயக அமைப்பு என்ற வகையில் மட்டுமே பார்க்கப்படுமானால் அவ்வகையில் மட்டுமே அதனை எடுத்துக் கொண்டால் இந்த ஆய்வுகளுக்கான அவசியமேதுமில்லை. முஸ்லிம் சமுதாயத்தையும் மார்க்கத்தையும் உள்ளிழுக்கும் போதே நாம் இந்த ஆய்வுக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முஸ்லிம் கட்சியல்ல என்றால், அதற்கான அரசியலைச் செய்ய வேண்டும். இரட்டை வேடம் கூடாது. அப்படியாகும்போது, ஜனநாயகம் உங்களுக்கு எப்படி ஹலால் ஆனது என்ற கேள்விக்குள்ளேயெல்லாம் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஆகவே, அக்கட்சியினரே கூறுவது போல் அதனை முஸ்லிம் கட்சியாகப் பார்க்காமல் ஒரு பொது கட்சியாக மட்டுமே முஸ்லிம்கள் பார்க்க வேண்டும். அக்கட்சியினரும் முஸ்லிம்களிடையே வந்து, நாங்கள் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறோம், மார்க்கத்தைப் பாதுகாக்கிறோம் என குருட்டு அரசியல் செய்யாமல் பெரும்பான்மை சமூகத்தினுள் இறங்கிச் சென்று அங்கே தம் கட்சியினை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். அதுதான் அக்கட்சியின் வளர்ச்சிக்குத் தேவை.

முஸ்லிம், மார்க்கம், சமுதாயம் என்பதற்குள் செல்லாமல் இந்திய ஜனநாயகத்தில், சமநீதிக்காக போராடும் ஒரு தேசிய கட்சி என்ற ரீதியில் மட்டுமே பார்க்கும்பட்சத்தில்…

தற்போதைய பாசிச பாஜக, காங்கிரஸ் என்ற இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்யும் கட்டாய நிலையிலிருந்து மாறி, இந்தியாவில் நல்லதொரு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருதற்குத் தகுதியுள்ள தன்னலமற்று, உயிரைக் கொடுத்து கள வேலை செய்யும் தொண்டர்படையினைக் கொண்ட சிறந்ததொரு கட்சியாக வளர்ந்து வருவதற்கான எல்லா வாய்ப்பும் தகுதியும் எஸ் டி பி ஐ கட்சிக்கு உண்டு. இந்திய ஜனநாயகத்தில் அது மாபெரும் சக்தியாக வளர்ந்து வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களைப் பகடையாக பயன்படுத்தாமல் பெரும்பான்மை சமூகத்தினுள் இறங்கிச் சென்று அவர்களின் நன்மதிப்பைப் பெற்று பாசிச பாஜக வலுவாக இருக்கும் பகுதிகளில் அதற்குச் சிம்ம சொப்பனமாக மாறும் வழியினைப் பார்க்க வேண்டும். அதற்கு, இன்னும் ஆழமாக அக்கட்சி பெரும்பான்மை சமூகத்தவரிடையே நன்மதிப்பைப் பெற்று முன்னேற வேண்டும். முஸ்லிம் கட்சியில்லை என்று கூறி கொண்டே, முஸ்லிம்களின் ஓட்டுக்காக முஸ்லிம் அடையாளங்களுடன் முஸ்லிம்களிடையே வலம் வந்துகொண்டிருந்தால் அக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினைப் போன்று ஒரு மூலையில் ஒதுங்க வேண்டியிருக்கும்!

ஆக,

முஸ்லிம், மார்க்கம், சமுதாயம், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்ற பேச்சுகளெல்லாம் அர்த்தமற்றவை. பொதுவான ஒரு ஜனநாயக சக்தியாக மட்டுமே பார்க்கும்பட்சத்தில், மத்திய சென்னையில் தகுதியான வேட்பாளராக கண்ணை மூடிக்கொண்டு தெஹ்லான் பாகவியை ஆதரிக்கலாம். இத்தேர்தல் பாசிச பாஜகவுக்கு எதிரான சரியான ஜனநாயக சக்தி எது என்ற கேள்வியின் அடிப்படையில் தேர்வு செய்யும்பட்சத்தில் இது ஒரு சரியான முடிவு.

 Sam Paul
பாமக வேட்பாளர், மத்திய சென்னை (Sam Paul)

ஆனால், பாசிச பாஜகவுக்கு எதிரான வலுவான சக்தியைத் தேர்வு செய்யும் தேர்தலாகவே இத்தேர்தல் பார்க்கப்படும்போது, அப்போதும் இத்தேர்தலில் தெஹ்லான் பாகவியை ஆதரிப்பது சரியானதாக இருக்காது. மத்திய சென்னையின் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்காளர்களும் ஒட்டுமொத்தமாக தெஹ்லான் பாகவிக்கு ஓட்டளிக்கப் போவதில்லை என்பது பரம நிச்சயம். இந்நிலையில், அவருக்கு அளிக்கும் ஓட்டு பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு அதாவது பாஜகவுக்கு நன்மையை அள்ளிக் கொடுத்து விடாதிருக்க வேண்டும்.

தினகரன் அதிமுகவிலிருந்து பிரிக்கும் ஓட்டுகள் நிச்சயமாக, காங்கிரஸ் கூட்டணிக்கு நன்மை சேர்க்கப்போகின்றன. அதே சமயம், முஸ்லிம்களிடமிருந்து தெஹ்லான் பாகவி பிரிக்கும் ஓட்டுகளால் தெஹ்லான் பாகவி வெற்றிபெற்று அங்கும் பாசிச பாஜக கூட்டணி தோல்வியடைந்தால் தகுதியான, சிறந்த வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பதில் மகிழ்ச்சியே. மாறாக, தெஹ்லானுக்குப் போடும் ஓட்டுகளால் காங்கிரஸ் கூட்டணிக்கு வலுகுறைந்து ஒருவேளை பாசிச பாஜக கூட்டணி அங்கு வெற்றிபெற்றால், அதற்கு தெஹ்லான் பாகவி சிதறடித்த முஸ்லிம்களின் ஒவ்வொரு வாக்குமே காரணம் என்பது சர்வ நிச்சயம். பாஜக கூட்டணி அந்த ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுவிட்டால் தலையொன்றும் போய்விடாதுதான். ஆனால், ஒரு சீட்டல்ல ஒவ்வொரு ஓட்டுமே இந்திய தேர்தல் அரசியலில் அவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்தால் இச்சிந்தனை நமக்கு ஏற்படாது!

இதனை மனத்தில் கொண்டு, மத்திய சென்னையில் என்ன செய்வது என்ற தீர்க்கமான முடிவினை முஸ்லிம் சமுதாயம் எட்ட வேண்டும். நேரடியாக மட்டுமல்ல, மறைமுகமாகக்கூட முஸ்லிம்களின் வாக்கால் பாஜக கூட்டணிக்கு நன்மை கிடைக்கக்கூடாது என்ற தெளிவோடு வாக்குச்சாவடிக்குச் செல்வோம்.

சிறந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான வாய்ப்பு, அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கிடைக்க இருக்கிறது என்பதை மனதில் நிறுத்துவோம்.

– அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.