சட்டம் சுட்ட தடா! கைவிட்ட தடா!

Share this:

யங்கரவாதத்தைத் தடுப்பதற்காகத் தடா, பொடா என்று என்னென்ன சட்டங்கள் கொண்டு வரப்பட்டனவோ, பெரும்பாலும் அவை அனைத்தும் அரசியல் பழிவாங்கலுக்கே பயன்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை அடக்கி, ஒடுக்கி அச்சுறுத்தி வைப்பதற்காக இந்தக் கருப்புச் சட்டங்கள் இந்திய முஸ்லிம்கள் மீது சற்று கூடுதலாகவே பயன்படுத்தப் பட்டுள்ளன.

தடாவும் பொடாவும் காலாவதியான பின்னரும்கூட இந்தச் சட்டங்களின் அடிப்படையில் குற்றஞ் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் இன்றும் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டும் நீதிமன்ற வாசல்படியேறி இறங்கியும் அலைக் கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

தடாவில் கைது செய்யப்பட்ட சாமான்ய முஸ்லிம்கள் நிலைதான் அப்படியென்றால், முஸ்லிம் அடையாளத்துடன் அல்லது அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டாலும்கூட, தடாவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்க நேரிடும் என்பதற்கு, பிரபல இந்தி நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுனில்தத், அவருடைய மகன் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் சிறந்த உதாரணங்களாவர். சமூகத்தில் பிரபல நிலையில் இருக்கும் இவர்களைப் போன்றோரையும் அத்தகைய காட்டுமிராண்டிச் சட்டங்கள் விட்டு வைக்கவில்லை என்பதிலிருந்து, தடா சட்டத்தின் வீரியம் விளங்கும்.

கடந்த 1992, டிசம்பர்-6 ஆம் நாள் அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவோம் என்ற கோஷத்துடன் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மஸ்ஜித், உச்சநீதிமன்ற உத்தரவை அலட்சியப் படுத்தி ஹிந்துத்துவாக கும்பலால் வன்முறையாகத் தகர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் பம்பாயில் (மும்பை) ஏற்பட்ட மதக் கலவரங்களில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மும்பை தாதா பால்தாக்ரே தலைமையிலான சிவசேனா குண்டர்களின் பேயாட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசும் மகாராஷ்டிராவை ஆண்டுகொண்டிருந்த சரத்பவார் தலைமையிலான காங்கிரஸ் அரசும் இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

ஒருவேளை, அஹிம்சாவழி உண்ணாவிரதத்திற்குப் பதிலாக, சிவசேனா குண்டர்களுக்குப் பதிலடி கொடுக்க சுனில்தத்தும் மக்களை மறைமுகமாகத் தூண்டி வன்முறைக்கு துணை புரிந்திருந்தால் பால்தாக்கரேக்கு நடைபெற்றது போல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அவருக்கும் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் நிகழ்த்தப்பட்டிருக்குமோ என்னவோ!

சட்டமும், அதிகாரமும் கையிலிருந்தும் சிவசேனா குண்டர்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசுகள் சிறு துரும்பையும் அசைக்க வில்லை. இந்நிலையில், மகாராஷ்டிர சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நடிகரும் ஆளும் காங்கிரஸ் எம்பியுமான சுனில்தத் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தங்கள் கட்சியைச் சார்ந்த எம்பி ஒருவரே அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டதால் காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு மேலும் மெளனம் காப்பது சரியல்ல என்பதால் காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் பொது அரசியல் எதிரியாக அவதாரமெடுத்த சுனில்தத்தை அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருகட்சிகளுக்கும் ஏற்பட்டது. அதன் விளைவாக அவருடைய மகன் நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோத ஆயுதங்கள் பதுக்கல் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

தம்முடைய தந்தை உண்ணாவிரதம் இருந்ததால் சிவசேனா குண்டர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகத் தமது குடும்பத்தினரின் தற்காப்புக்காகவே 9mm ரக கைத்துப்பாகியும் AK56 துப்பாக்கியும் வைத்திருந்திருக்கிறார் நடிகர் சஞ்சய் தத். இதுடன் இன்னும் பல பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, தடாவின்கீழ் கைதாகி, பிறகு விடுதலையாகி, தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டிருப்பதாகப் பெருமிதம் கொள்ள முடியவில்லை. ஏனெனில், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டததன் எதிரொலியாக மும்பையில் சிவசேனா குண்டர்கள் நடத்திய மதக் கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான பல்வேறு வழக்குகளும் , நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையும் நீதிமன்றப் பரணில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக் கொண்டுள்ளபோது நடிகர் சஞ்சய் தத் மற்றும் சிலரை மட்டும் உச்சநீதிமன்றம் சிறைக்கு அனுப்பியிருப்பது எவ்வகை நீதி?

ஒருவேளை, அஹிம்சாவழி உண்ணாவிரதத்திற்குப் பதிலாக, சிவசேனா குண்டர்களுக்குப் பதிலடி கொடுக்க சுனில்தத்தும் மக்களை மறைமுகமாகத் தூண்டி வன்முறைக்கு துணை புரிந்திருந்தால் பால்தாக்கரேக்கு நடைபெற்றது போல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அவருக்கும் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் நிகழ்த்தப்பட்டிருக்குமோ என்னவோ!

சட்டவிரோத ஆயுதப் பதுக்கல் வழக்கில்தான் சஞ்சய் தத் தற்போது சிறைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் தடாவிலிருந்து நீதிமன்றத்தால் முன்பே விடுவிக்கப்பட்டுள்ளார். அவர்மீதான ஆயுதப் பதுக்கல் குற்றச்சாட்டை வலுவடையச் செய்யவே தடா சட்டம் பிரயோகிக்கப்பட்டது. நடிகர் சஞ்சய் தத் இதற்கு முன்பு சட்டவிரோதச் செயல் எதிலும் ஈடுபட்டிருக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்குப்  பாதுகாப்பு அறவே இல்லாத சூழலில் தற்காப்புக்காகவே துப்பாக்கி வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய்தத் தண்டிக்கப்பட வேண்டியவரே! ஏற்கனவே அதற்காக ஒன்றரை வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தும் விட்டார். இந்நிலையில், சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவித்த பாவத்திற்காக, ஹிந்துத்துவா ரவுடிகளின் கொலை வெறித் தாக்குதலுக்குப் பயந்து, தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்ட அவர்,  மேலும் மூன்றரை ஆண்டுகளுக்கு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்ற தீர்ப்பு நியாயமெனில், பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய சிவசேனாவுக்கும் குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வக்கற்ற, அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் அதில் பங்கு உள்ளதா இல்லையா?

நீதியை நிலை நாட்டும் எண்ணம் உச்சநீதிமன்றத்துக்கு இருக்குமென்றால், சஞ்சை தத்தை ஆயுதம் பதுக்கும் நிலைக்குத் தள்ளியவர்களையும் தண்டிக்க வேண்டும். ஆனால் அரசியல் பலமும் வன்முறைப் பின்னணியும் கொண்டவர்களைச் சட்டம் தண்டித்ததாக வரலாறே இல்லை என்பதற்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நிகழ்த்தப்பட்ட பால்தாக்கரேயே சான்று.

“சஞ்சய் தத் மீதித் தண்டனையை அனுபவிக்க வேண்டும்!” என இப்போது கறார் காட்டும் நீதிமன்றம், தடாவின் கீழ்க் கைது செய்யப்பட்டு ஒன்பதாண்டுகளுக்குப் பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட அப்துல் நாஸர் மதானியும் பதின்மூன்றாண்டுகளுக்குப் பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட குணங்குடி அனீபாவும் சிறையில் கழித்த நாட்களை மீண்டும் அவர்களுக்கு வழங்குமா?

வெறுமனே தீர்ப்பு வழங்கப்பட்டால் மட்டும் போதாது; நீதியும் முறையாக வழங்கப்பட வேண்டும். இந்திய நீதி மன்றங்களின் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ள சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பு இதுவே!

–  N. ஜமாலுத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.