தமிழக அரசியல் விளையாட்டில் சிக்கிய சிலைகள்!

Share this:

முன்னாள் முதல்வர் ‘அய்யா’ கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது கன்னியா குமரிக் கடலில் அமைத்துக் கொடுத்த அய்யன் வள்ளுவன் சிலையால் நாட்டுக்கு என்ன நன்மை

என்று தெரியாமல் பொதுமக்கள் இன்னும் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, இந்நாள் முதல்வர் ‘அம்மா’ ஜெயலலிதா ரூ.100 கோடி மதிப்பில் மதுரையில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் அறிவித்து அப்பாவித் தமிழர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.

அது மட்டுமின்றி “சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளோடு தமிழ்த்தாய் பூங்காவும் அங்கு உருவாக்கப் படும்” என்று தெரிவித்துள்ளார். தமிழ்மொழியை வளர்ப்பதற்காக அய்யாவும், அம்மாவும் மாறி மாறி அடிக்கும் ஈகோ கூத்துகளைத் தாங்க முடியவில்லை. மொழியை ‘தாய்மொழி’ என்று உயர்த்திச் சொல்வதற்கு குழந்தையுடன் அதிகம் பேசும் வாய்ப்பு பெற்ற தாய்க்கே உண்டு என்பதாலன்றி வேறுகாரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆதிகாலத்தில் காடுகளில் திரிந்த மனிதன் தனது உணர்வை பிறருக்கு தெரிவிக்கக் கண்டுபிடித்த கருவியே மொழி. நாகரிகம் வளர்ச்சிக்கேற்ப பேசும்மொழியை முறைப்படுத்தி இலக்கணமாகத் தொகுத்து சீர்படுத்திய வகையில் பிறமொழிகளைவிட தமிழுக்கு சிறப்புண்டு என்று சொல்லலாம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு இதுவும் ஓர் காரணமாக இருந்தது.

வடமாநில அரசியல்வாதிகள் ஹிந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க முயன்றபோது,  “ஆட்சிமொழிக்கான தகுதி தமிழுக்குண்டு!” என்று முழங்கினார் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப். தாய் மொழி மீது தமிழருக்குள்ள பற்று என இதை எவரும் கருத முடியும். ஆனால், மக்களின் கோடானு கோடி வரிப் பணத்தைச் செலவழித்துத் தமிழை ஒரு பெண்ணாக உருவகப் படுத்தி சிலை வைக்குமளவுக்கு தமிழ்பற்று மிகைத்திருப்பதாக காண்பிப்பது நகைப்புக்குரியது.

பல்வேறு மத, இன, கலாச்சாரத்தைப் பின்பற்றி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களிடையே இத்தகைய மூடத்தனங்களினால், பிற்காலத்தில் பிரிவினை ஏற்படவும் வாய்ப்புண்டு.

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கை நெடுங்காலமாக “தமிழர் தந்தை” என்பது சி.பா.ஆதித்தனார் தான் என்று சொல்லி மக்களைக் குழப்பி வருகிறது.  இந்நிலையில் தமிழ்த்தாய் என்று பெண்ணின் சிலை வேறு! அப்பாவித் தமிழர்களோ தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு போக வேண்டிய நிலையில் உள்ளனர்.

அரசியல்வாதிகளின் இந்த ஈகோ சண்டைகள் பிற்காலத்தில் அதிகரித்து, “தமிழ் மொழியை போற்றுவதற்காக, அனைத்துத் தமிழர்களும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியாக வேண்டும்!” என்றோ அல்லது “தமிழ்த்தாய் சிலையை வணங்கியாக வேண்டும்!” என்றோ விதிமுறைகள் ஏற்படுத்தவும் வாய்ப்புக்கள் உள்ளன. பல்வேறு மத, இன, கலாச்சாரத்தைப் பின்பற்றி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களிடையே இத்தகைய மூடத்தனங்களினால், பிற்காலத்தில் பிரிவினை ஏற்படவும் வாய்ப்புண்டு.

இந்தியா என்ற நிலப் பகுதியை பெண்ணாகக் கருதி “பாரத் மாதாக்கி ஜே!” என்றும் “வந்தே மாத்தரம்” என்றும் சங்பரிவாரங்கள் பாடுவதை, இஸ்லாமியர்கள் உட்பட ஒரு சில சமயத்தினர் ஏற்பதில்லை. தாய்மண்ணை “வணங்குவதாக” பாடப்படும் வரிகள் அவர்களது சமய நம்பிக்கைக்கு எதிராக இருப்பதே அதற்குக் காரணம்.

அதுபோல், தமிழைப் பெண்ணாக உருவகப் படுத்தி சிலை அமைப்பதும் கூட, இஸ்லாமியர்கள் போலவே பல்வேறு சமயத்தைச் சார்ந்தோரின் நம்பிக்கைக்கு எதிரானதாகக் கருதும் பட்சத்தில் தமிழ்த்தாய் சிலையால் தமிழர்களிடையே பூசல்கள் எழவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எனவே, அரசியல் விளையாட்டுக்களிலும், நீயா – நானா எனும் ஈகோ போட்டிகளிலும் மக்களை மடையர்களாக்கும் இது போன்ற ஊதாரித்தனமான யோசனைகளை அரசு உடனடியாக கைவிட வேண்டும்; அதற்குப் பதிலான அந்த 100 கோடி ரூபாய் வரிப் பணத்தை பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிட வேண்டும் என்பதே பொது மக்களின் குரலாக உள்ளது. ஏற்கனவே, மின்சாரத் தடையினால் வெறி பிடித்திருக்கும் தமிழக ஓட்டு வங்கிகள், எதிர் வரும் தேர்தலில் இத்தகைய மூடத்தனங்களை மனதில் நிறுத்தியே தத்தம் வாக்கை அளிப்பார்கள் என்பதை ஆளும் அரசு உணரவேண்டிய தருணம் இது.
     
– ஜாஃபர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.