தேவை மதுவிற்கு எதிரான மாணவப் போர்!

நிகழ்வு 1:
    இடம் – கோவை பேருந்து நிலையம். உடைகள் கலைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அதீத குடிப்பழக்கத்தால் அவர் மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவருக்கு வயது 28!

நிகழ்வு 2:
இடம் – சென்னை கூவம் குடியிருப்பு. நள்ளிரவில் திடீரென்று ஓர் இளைஞர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து கூவத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். கண்களில் கண்ணீருடனும், கைகளில் இரண்டு குழந்தைகளுடனும் நிற்கும் அவருடைய 21 வயது மனைவி, “தொடர்ச்சியான குடிப்பழக்கத்தால் என் கணவர் ஒருவித மனநோய்க்கு ஆளாகி விட்டார்” எனத் தெரிவித்தார்.

நிகழ்வு 3:
இடம் – மேடவாக்கம். ஒரு டாஸ்மாக் வாசலில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரைத் தம் தோள்களில் சுமந்து கொண்டு இளம் பெண் ஒருவரும் ஒரு சிறுமியும் தங்கிக் கொண்டு செல்கின்றனர். இரு பெண்களுக்கும் முறையே 18, 10 வயதிருக்கும். சிறு வயதில் தங்களைத் தோள்களில் சுமந்ததற்கு நன்றிக்கடனாக தற்போது அவரை தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.

தமிழகம் முழுவதும் தினம் தினம் அரங்கேறும் காட்சிகளில் இவை சிறிய உதாரணங்களே! காலை 10 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட்டதிலிருந்து இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் வரை வருமானம் இழக்கும், மானம் இழக்கும், உயிரை இழக்கும் குடிமகன்கள் லட்சோப லட்சம். ஆனால் அரசுக்கோ வருமானம் கோடிகளில்! (2012-2013 ஓராண்டின் வருமானம் 21,680.67 கோடி!).

15 வயது சிறுவன் முதல் 80 வயது முதியவர் வரை;  இளைஞர்கள் முதல் கல்லூரி யுவதிகள் வரை இந்த மது அரக்கனுக்கு அடிமையாகித் தங்கள் வாழ்வைச் சீரழித்துக் கொள்ளும் இதே தமிழகத்தில்தான் விழாக்காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வரும் அரக்கத்தனமும் அரங்கேறி வருகின்றது.

“குடி, குடியைக் கெடுக்கும்” என்று சின்னதாய் போட்டுவிட்டு, தடுக்கி விழுந்தால் தட்டுப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளால் விளையும் கேடுகள் எத்தனை எத்தனை?

மது போதை தலைக்கேறிவிட்டால் தன்னிலை மறந்து, தன்மானம் பறந்து, மனிதம் இறந்து போகின்றது. தாயோ, தமக்கையோ தன் காமத்தாகம் தீர்க்கும் தடாகமாகவே மாற்றிப் பார்க்க வைக்கின்றது மது. உடுக்கை இழந்தாலும் அதனைத் தடுக்க இயலாமல் போகின்றது. குடிநீரும் சிறுநீரும் சுவை ஒன்றாகத் தெரிகின்றது. பெற்றெடுத்த பிள்ளையையும் விற்றுக் குடிக்க மனம் துணிந்து விடுகின்றது.

நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மது அருந்திவிட்டுதான் அக்கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர். விபத்தினால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால்தான் நடைபெறுகின்றன. மேலும் சாலைகளில் உடைகள் கலைந்த / களைந்த நிலையில் நினைவின்றிக் கிடப்பது, மனநிலை பாதிக்கப்படுவது, மன அழுத்தம், உடல் ஊனம் அடைவது, தினம் தினம் வீடுகளில் மனைவி, மக்களைத் துன்புறுத்துவது என்று மரணத்தைவிடக் கொடிய பாதிப்புகள் பாழாய்ப் போன மதுவால் எங்கும் வியாபித்திருக்கின்றது.

“ஆயிரம் கோயில்களைக் கட்டுவதைவிட சிறந்தது ஒரு பள்ளிக்கூடம் அமைப்பது” என்றார் பாரதியார். ஆனால் கோயில்கள், பள்ளிக்கூடங்களுக்கு அருகில் மதுக்கடைகளை அமைத்திருக்கின்றது அரசு. டாஸ்மாக் இருக்கும் இடங்களைச் சுற்றிலும் பார்க்க சகிக்காத காட்சிகள். அந்த வழியாக நடக்க முடியாதபடி மது நாற்றம் காற்றில் கலந்து, வயிற்றைக் குடைந்து கொண்டு வருவதும், கை அனிச்சையாக மூக்கைப் பிடிப்பதும், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அரசையும், அவர்களையும் திட்டுவதும் வாடிக்கையாகிப் போய்விட்ட ஒன்று. நீங்கள் வேண்டுமானால் சென்னையின் பூங்கா ரயில் நிலையம் வெளியில், ரிப்பன் மாளிகைக்கு எதிரில் சென்று பாருங்கள். இங்கு எழுதியிருப்பதைவிடக் கூடுதலாகத் தெரிந்து கொள்வீர்கள்.

சமூகத் தீமைகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய திரைப்படங்களிலோ கதாநாயகர்களே மது குடிக்கும் அவலம் அரங்கேறுகிறது. “வானம், பூமி சிறிசு..பாருதாண்டா பெரிசு” என்று கதாநாயகன் பாடுவது போலக் காட்சி வைக்கப்படுகின்றது. டாஸ்மாக் காட்சிகள் இடம்பெறாத திரைப்படங்களே பெரும்பாலும் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. மதுவின் தீமையை விமர்சிக்கும் ஒரு சில காட்சிகளும்கூட குடித்துவிட்டு உளருவதாகவே உள்ளது. “கோயம்பேட்டுல வந்து இறங்குனா மூத்தரம் போறதுக்கு இடம் இல்ல..ஆனா 50 மீட்டருக்கு ஒரு டாஸ்மாக்” போன்ற மிகச் சில இடித்துரைகள் சற்றே ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் இவை போதாது.

மதுவிலக்கு வேண்டி 500 தென்னைகள் வளர்ந்திருந்த தன் பெரும் தோப்பையே வெட்டி வீழ்த்தியவர் தந்தை பெரியார். ஆனால் அவரது பேரைச் சொல்லி ஆட்சி செய்தவகளும் செய்பவர்களும் தாலிக்குத் தங்கம் கொடுத்து, மதுக்கடைகள் மூலம் பல இளம்பெண்களின் தாலி அறுக்கும் செயலில் ஈடுபடுவது வேதனைக்குரிய நகைமுரணாகும். காந்தியின் தேசத்தில் மதுக் கோப்பைகளை கையில் ஏந்தும் பள்ளிச் சிறார்கள்; பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்று மதுக்கடை வரிசைகளில். வாழ்வை மறந்து சாவை நோக்கிச் செல்லும் குடிமக்கள். தடுக்க வேண்டிய அரசோ தாராளமாய் கொடுத்துக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய சூழலில் மதுவிற்கு எதிரான ஒரு போர் தேவைப்படுகின்றது. ஆனால் அது சசிபெருமாளிடமிருந்தோ, தமிழருவி மணியனிடமிருந்தோ அல்ல. அது ஊற்றெடுக்க வேண்டிய இடம் பள்ளிகள். (போர்க்)களங்களாக அமைய வேண்டிய இடம் கல்லூரிகள். பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் களத்தில் புகுந்ததால்தான் இந்திய சுதந்திர போராட்ட களம் சூடுபிடித்தது. மாணவர்கள் இறங்கியதால்தான் திராவிடம் அரியணையில் ஏறியது. மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்ததால்தான் ஈழப்படுகொலைகளை உலகம் ஏறிட்டுப் பார்த்தது, அங்கீகரித்தது.

எல்லாத் தீமைகளுக்கும் தாயாக விளங்கும் இந்தக் கொலைகார மதுவின் தாகம் தணிவதற்கும், பல நூறு குடும்பங்களின் சோகம் முடிவதற்கும், தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் இருள் விடிவதற்கும் ஒரே ஆயுதம் மாணவ சக்திதான். மாணவர்கள் கண் விழித்தால்தான் இந்த மது அரக்கனின் கண்களை நிரந்தரமாக மூட முடியும்!

மாணவச் சமுதாயமே! மது ஒழிப்புப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்!

R. அபுல் ஹசன்
(முன்னாள் மாணவர்)
95977 39200