பெருநாள் ஆயத்தங்கள்!

Share this:

ல்ஹம்துலில்லாஹ்!

இதோ கண்ணியமிக்க ரமளானின் இறுதியை அடைந்து விட்டோம். இன்னும் சில தினங்களில் பெருநாளை அடைய இருக்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன் அந்த நாளின் எல்லா நன்மைகளையும் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.! – ஆமீன்.

அருள் வளம் மிக்க ஈகைத் திருநாளில் பின்வரும் காரியங்களைச் செய்ய இப்போதே மனது வைப்போம்.

1) நம் பிறமத நண்பர்களை நம் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க முயற்சி செய்வோம். நம் விருந்தோம்பல் மூலமாய் பிறரை மகிழ்விப்பதோடு, இஸ்லாம் குறித்தும் சில விசயங்களை அவர்களுக்கு விளக்க(தாவா செய்ய) உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

2) முடிந்தவரை நம் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்வோம்.

3) நம் இரத்த பந்த உறவினர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்வோம்

4) பெருநாள் தொழுகைக்குப் பின் உணவு, பிறகு நல்ல தூக்கம், பின் பொழுது போக்கு அல்லது தொலைக்காட்சி என்பதுதான் நமது ரெகுலர் அஜெண்டா என்றால், அப்படிப்பட்ட நிலையில் இருந்து மாறி, இந்த நல்ல நாளை, பயனுள்ள வகையில் செலவழிக்கு திட்டமிடுவோம்.

5) புத்தாடை அணிவதும் சுவையான உணவு உண்பதும் மட்டுமே பெருநாளின் அடிப்படை அடையாளம் அல்ல என்பதை நம் குடும்பத்தாருக்கும், நம் வீட்டுக் குழந்தைகளுக்கும் அழகான முறையில் எத்தி வைப்போம்.

6) நம் பெற்றோரோடும் முதிய உறவினரோடும் முடிந்தவரை நேரம் ஒதுக்கி அவர்களுடன் அளவளாவுவோம். அதன் மூலம் அவர்களின் மலரும் நினைவுகளை அவர்களிடம் இருந்து வெளிக் கொணர்வோம். அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் நாம் பெறுவதற்கு அது வழி வகுக்கும்.

7) விருந்து சமைக்கும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவோம். அதன் மூலம் சுகாதாரம் காக்கப்படுவதோடு, நம் அண்டை வீட்டாருக்கு மனச் சங்கடங்கள் எதுவும் நேராமலிருக்கும்.

8) பெருநாள் தொழுகையிலும், பர்ளு தொழுகையிலும்

உலக முஸ்லிம்களுக்காகவும், தேச மற்றும் சர்வதேச அமைதிக்காகவும் துவா செய்வோம்.

உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல் நிலைத் தன்மை நிலவவும், எல்லா நாட்டு மக்களுக்கும் நீதியான ஆட்சியாளர்களை நியமிக்குமாறும் இரு கரம் ஏந்தி மனமுருகி அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.

9) தேவையற்ற விவாதங்களை தவிர்ப்போம். நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களில் எவரெல்லாம் இந்த ஆண்டு உம்ரா சென்றுள்ளார்களோ, அவர்கள் அனைவரின் உம்ராவும் ஏற்றுக் கொள்ளப்படவும், அவர்களின் நல்ல பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படவும் வேண்டி இறைவனிடம் வேண்டுவோம்.

10)இறுதியாக முகம் அறியா உறவுகளான நாங்களும் நீங்களும் பரஸ்பரம் துஆவில் நினைவில் வைப்போம்.

நம் குடும்பத்தாரோடு நாம் மகிழ்ந்து இருக்கிற இந்த நல்ல நாளில், நம் உற்றார் உறவினரோடு அன்பையும், சகோதரத்துவத்தையும் பகிர்ந்து மகிழும் இந்த நல்ல நாளில், இந்த ரமலானின் செய்தியை, நம்மோடு வாழும் நம் பிறமத சகோதரர்களோடும் பகிர்ந்து கொள்ள சிறிது முயற்சி செய்தால் அது மிகப் பெரிய அழைப்புப் பணிகளில் ஒன்றாகவும், சிறந்த பலனை தரக்கூடிய ஒன்றாகவும் அமையக் கூடும்.

இது போன்ற பண்டிகை தினங்கள் மூலம் நம்மிடையே பரஸ்பர அன்பையும், சகோதரத்துவையும் பரிமாறிக் கொள்வோம். பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள நம் இந்திய தேசம் என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழவும் நம் அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் மிளிரவும் வாழ்த்துகிறோம்.

இந்தப் பெருநாள் நமக்கு எல்லா வளங்களையும், இறை அருளையும் அள்ளித் தரட்டுமாக.

ஆமீன்.

இறையன்பிற்காக
அப்பாஸ் அல் ஆசாதி

M.Abbas M.C.A.,M.Sc.,
Head IT Operations,
Sysmech Solutions
+91 9786009777 & 9787450075

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.