பாவப்பட்ட NRI-ஜீவன்கள்

ந்தியாவுக்குள் அந்நிய செலவாணியைக் கொண்டு வருபவர்களில் முதன்மையானவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் NRI எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள். இதில், ஏற்றுமதியாளர்களை விடவும் கூடுதலாக நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை அதிகரிப்பவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களே.

உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருக்கும் நேரங்களிலும், பல்வேறு பொருளாதார நெருக்கடிகளின் போதும் தாய்நாட்டிலுள்ள உறவுகளுக்குத் தொடர்ச்சியாக பணம் அனுப்புவதன்மூலம், அந்நியச் செலவாணி இருப்பை உயர்த்தியோ அல்லது நிலையாக வைத்தோ இந்தியப் பொருளாதாரத்தைக் காக்கும் ஆபத்பாந்தவர்கள்தான் வெளிநாடுவாழ் இந்தியர்கள்.

போக்ரான் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து, இந்தியாமீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தபோது, அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் உருக்கமான கோரிக்கையை ஏற்று இந்தியாவில் முதலீட்டை அதிகரித்தன்மூலம் அமெரிக்க பொருளாதாரத் தடையையும் தகர்த்து எறிந்து நாட்டை முன்னேற்றியவர்கள் NRI கள். இப்படியாக, இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மீது, ஆளும் அரசுகள் ஏதாவது ஒரு விதத்தில் சுமையை ஏற்றி, “நன்றிக்கடனை” தெரிவிக்கின்றன.

இந்த வரியை இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுபவர்கள் மீது சுமத்துவது அநியாயம்.

இந்த நன்றிக்கடனில் முத்தாய்ப்பாக, ஆளும் மத்திய அரசின் கடந்தமாத அறிவிப்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பண பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரியாக 12.36% விதித்துள்ளது.

இந்த சேவை வரி (Service Tax) NRI களுக்கு நேரிடையாக பாதிக்காது. அதாவது மறைமுக வரியாக சுமத்தப்பட்டுள்ளது. ( காண்க: http://www.servicetax.gov.in/st-circulars-home.htm )

வெளிநாடுகளிலிலிருந்து அனுப்பப்படும் தொகையை வரவு வைக்க, இந்திய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை சேவைக் கட்டணமாக வசூலிக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள Money exchange போன்ற பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த சேவை வரியை, கமிஷன் தொகையை அதிகரிப்பதன் மூலம் NRI வாடிக்கையாளர்களிடமிருந்து கறந்து சரி செய்து கொள்வர்.

இந்திய ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சிறிய தொகைதானே போகப்போகிறது என்றாலும் இந்த வரியை இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுபவர்கள் மீது சுமத்துவது அநியாயம். அத்துடன் அடுத்தடுத்து வரும் அரசுகள், அவரவர் “சாதனைகளை” காண்பிக்க வேண்டி இந்த சதவீதத்தை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

ஏற்கனவே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் NRIகள் கொண்டுவரும் தங்கத்திற்கும், LED TV போன்ற மின்னணு சாதனங்களுக்கும் வரிவிதித்துள்ளபோது, மென்மேலும் வரிகளைச் சுமத்துவதை எதிர்த்து எவரும் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை.

பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, நகைக்கடை உரிமையாளர்களுக்கு பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்டது. அப்போது அவர்கள், இந்திய அளவில் எதிர்ப்பைக் காட்டியதால், அந்த வரியை அவர்களிடமிருந்து நீக்கி, ஏமாந்த சோனகிரிகளான NRI மீது சுமத்தினார். அதாவது வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு ஒவ்வொரு NRI யும் இந்த தண்டத்தை அழும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

உள்நாட்டில் அத்தியாவசியமாக இருந்த போதிலும் தரமான உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிக் கடன், 15% வரை cash incentives, duty drawback, input tax refund போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

ஆனால், உறவுகளைப் பிரிந்தும், அரசின் எவ்வித சலுகையையும் அனுபவிக்காத NRIகள் அனுப்பும் பணத்திற்கும், சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிக் கொண்டு வரும் பொருட்களுக்கும் வரி மற்றும் கட்டுப்பாடு விதிப்பது அநியாயம். இந்த சேவை வரி முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே, நாட்டை விட்டு தூரமாக வசித்தாலும் இந்தியாவை நேசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனின் உரிமைக்குரலாக இருக்கிறது.

– N. ஜமாலுத்தீன்