அழுவதற்கான நேரம் கடந்து விட்டது!

டிக்கத்   திட்டமிட்டார்கள்;
இடித்தார்கள்!

உடைக்கக் கூடினார்கள்;
உடைத்தார்கள்!

புற வழியே வந்தார்கள்;
மகுடங்கள் அடைய…!

கர சேவை செய்தார்கள்
ஒற்றுமையைக் குலைக்க!    

பதற்றத்தைப் பரப்பி...
வன்மத்தை நிரப்பி...
குரோதத் தீ வளர்த்து...
வேற்றுமை விதை விதைத்து...

அகண்ட பாரதக் கனவில்
துவங்கிய அவாக்களின் தூக்கம்
இப்போது வெற்றியை நோக்கிய
துவக்கமாய்!

அழுதழுதே பழகிய
நினைவுகளில்
கழிந்த எம் சமூகம்  
இப்போதும்  சுணக்கமாய்!

பலமில்லாத என்  முட்டாள் நண்பனே!
அடிவயிறு கிழிய
ஆண்டுக் கொருமுறை
கண்ணீர் நிறைத்து
கதறி அழுவதால்
பலனேதுமில்லை!

களமில்லாத கயவனே கூட
ஆட்சிக்கட்டிலில்
இப்போது ராஜாளியாய்!

காலமெல்லாம் கலங்கியே
பழக்கப்பட்ட நீயோ
இன்னும் விட்டில் பூச்சியாய்!

எதிர் வினைகள்  குறித்தே
யோசிக்கப் பழக்கப்பட்ட
நம்  மூளைகள்
வினைகள் குறித்து
யோசிக்காமல்
இன்னுமா
மழுங்கிக் கிடப்பது?

முடமாய்
முயலாமையாய்
பலவீனமாய்  
பயம் கொண்டதாய்
பழம் பெருமைகள் பேசி
பலவீனங்கள் கண்டு கலங்கி
முட்டாள் முயலாய்
இன்னுமா நீ சுணங்கி நிற்பது?

உனக்குப் பின்னே
சட்டென ஓடத் துவங்கிய
சகுனி ஆமையே கூட
பந்தயக் களத்தில்
உன்னை விட முன்னே
முன்னேறிப் பறக்கிறது!

உலகிற்கே வழி காட்டும்
ஒளிவெள்ள  ஜோதி
பல காலமாய்
கிழிந்த  உன் சட்டைப்பையில்
ஒட்டடைக்கு நடுவே  
கேட்பாரற்றுக் கிடக்கின்றது!

கடக்க வேண்டிய
காட்டாறுகள்
பற்றி யோசிக்காமல்,
பற்ற வேண்டிய கரங்களைப்  
பற்றி நேசிக்காமல்,
இன்னுமா நீ
வருந்தி  நிற்பது?

யாசிப்பதை நிறுத்து!
நேசிப்பதை வளர்த்து
வாசிப்பதை துவக்கு;
யோசிப்பதைப் பழக்கு!

பந்தயம் இன்னும்
முடிந்து விடவில்லை!
காலம் ஒன்றும்
கழிந்து விடவில்லை!

பயமில்லாத தூயவனாய்
மாற்றங்கள் படைக்கும்
சந்ததிகள் கொண்டு
முன்னேறிச் செல்ல
தடையேதுமில்லை!

கடலுக்கு முன்
கலங்கி நிற்காதே!
பெரும் புயலாய் வீசும்
அலைகளுக்கு முன்னே
மருகி அழாதே!

அதோ தெரிகிறது பார்!
அது மூஸா நபியின்
கைத்தடியாய்க்கூட இருக்கலாம்!

அதைத் தூக்கிப் பிடி!
அந்த ஒளி வெள்ளத்தில்
முன்னேறிச் செல்!

கரம் பிடித்து
மனித சமூகத்தை
வெற்றியின் பக்கம்
அழைத்து செல்!

பயணத்தைத் துவக்க
உன் முதல் அடியை
தப்பாமால் இப்போதே
வை!

– Abbas Al Azadi