பள்ளிகளில் சமகால கல்வியும் தரமும்

ன்றைய பெரும்பாலான மக்களிடையே நிலவும் கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பற்றி மக்கள் கருத்தில் முதன்மையாக நிற்பது மத்திய CBSE பாடத்திட்டம்தான்.

தனியார் பள்ளியில் படித்தால்தான் மாணவர்களின் தரம் உயரும், அந்தப் பள்ளிகள்தாம் அவர்களின் வாழ்க்கைக்கான முன்னேற்றக் கூறாக அமையும் என்ற மனநிலைதான் காணப்படுகிறது.

ஆயிரங்களைக் கொட்டினால்தான் அறிவைத் தீட்ட முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதுவே நடைமுறை என்றாகிவிட்டது.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களும் சமமாகமாட்டார்கள்.

முதலாம் வகுப்புப் படிப்பவனுக்கு அ ஆ இ ஈ தான் சொல்லித் தர வேண்டும் என்ற நிலையில் அரசும், அரசு சார்ந்த பள்ளிகளின் நிலைப்பாடாகவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிக்கூட கற்கக் கூடிய அறிவை முதலாம் வகுப்புப் படிப்பவனுக்கு ஊட்டத் துடிப்பது தனியார் பள்ளிகளின் வேட்கையாகவும் உள்ளன.

பள்ளிக் கட்டடம் முதல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை தரம் பார்க்கப்படுகிறது தனியார் பள்ளிகளில். அங்கு ஆசிரியர்களின் ஊதியம்கூட ஒப்பீட்டளவில் குறைவுதான்.

ஆனால் ஆசிரியப் பட்டப்படிப்பு பயின்று தகுதித் தேர்வுகள் எழுதி தேர்ந்தெடுக்கப்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவர்களின் பயிற்றுவித்தலில் குறையில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்படும் தரமான பயிற்சிகளினால் சிறந்த ஆசிரியர்களாக உருவாகின்றனர்.

ஆனால், மாணவர்களுக்காக உருவாக்கப்படும் மாநிலக் கல்விக் கழகப் பாடத்திட்டத்தில் குறை. இது, எல்லாரும் ஒப்புக்கொள்வதுங்கூட.

மத்தியக் கல்விக் கழகப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் கல்வி முறையை மாநிலக் கல்வி முறையில் வழங்க முடியாதது ஏன்?

உலகிலேயே ஃபின்லாந்தில்தான் தரமான கல்வி கொடுக்கப்படுகிறதாம். ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்களாம். ஆசிரியராகப் பணியாற்ற ஏழு ஆண்டுகள் படிக்க வேண்டுமாம்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்?

இரண்டரை வயதில் ப்ளே ஸ்கூலும் மூன்றரை வயதில் LKG, அடுத்து UKG என்று படித்து a b c d ஐப் பிழையில்லாமல் சொன்னால் போதும் என்று நினைக்கின்றோம்.

புதுவிதமான, ஆர்வமூட்டும் மற்றும் அறிவை மேம்படுத்தும் விதமாக கல்வித் திட்டம் மாற வேண்டும்.

அதற்கு நம் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம்.

காசைக் கறக்கும் பள்ளிகளின் முக்கியமான அம்சம், நா நுனியில் ஆங்கிலம் பேசுதல்.

ஆங்கிலம் என்பது அறிவு சார்ந்த ஒன்று இல்லை எனினும் அந்த மொழி நம் தாய் மொழியைவிட நம் நாட்டில் தலை தூக்கி நிற்பதனால் அதைக் கற்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

நான் அரசுச் சார்ந்த ஒரு பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயின்றேன்.

பள்ளி வரை ஆங்கிலம் ஒரு பாடம்; அவ்வளவுதான்.

ஆங்கில ஆசிரியையின் ஆங்கிலத்தைக் கேட்டு வியந்ததும் உண்டு.

கற்க ஆர்வம் இருந்தது. ஆனால் பயிற்றுவிப்பதிற்கான சூழ்நிலை இல்லை.

பள்ளி முடித்து, கல்லூரிக்குச் சென்றபோது மலையைக் கண்ட எறும்பு போல மலைப்பாக இருந்தது.

ஆங்கிலம் இல்லாமல் எதுவுமே இல்லை என்று புரியத் தொடங்கியது.

ஆங்கிலத்தில் நான்கு வார்த்தை நன்றாகப் பேசினால்தான் ஆசானும் நம்மிடம் அண்டும் நிலை.

ஒரு மொழியின் முக்கியத்துவத்தை அறிய நான் மறந்தேன். கற்றுத் தர என் பள்ளியும் மறந்தது.

கல்லூரியில் ஒரு போட்டியில்கூட கலந்து கொள்ள முடியவில்லை. இயலாமையால் அல்ல; இங்கிலீஷால்.

பாடத்தில் சந்தேகமென்றாலும் ஆங்கிலத்தில் கேட்டால்தான் அறிவாளியாக கருதுவார்களோ ? என்ற எண்ணம்.

“தமிழ் வழி பயின்ற மாணவிகள்” என்று முதல் நாளே அறிமுகப்படுத்தப் பட்டோம். தாழ்வு மனப்பான்மை அன்றே பிறந்து வளர்ந்தது, பழகியும் போனது.

இன்று வரை ஆங்கிலத்தில் பேசுவதென்றால் தடுமாற்றம்தான் பலருக்கு.

வேற்று நாட்டு மொழியின் போதாமையால் உண்மையான திறமைகளும் புதைக்கப்படுகின்றன. ஆனால், ஆறுதல் படுத்த என் தாய் மொழி இருக்கிறது.

என்னைப் போல் பலருக்குத் தங்கள் தாய் மொழியையே சரியாக எழுதப் படிக்க தெரியவில்லை என்றாலும் தமிழ் நம்மைத் தழுவிக் கொண்டது என்ற பெருமை உண்டு.

மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றி, தரமான கல்வி முறையை உருவாக்குவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதோடு ஆங்கிலத்திலும் மாணவர்களை மேம்படுத்த முயல வேண்டும். அதுவே அவர்களின் வாழ்க்கைப் படிகளை சுலபமாக கடக்க உதவும்.

மாணவர்களை வருங்கால மேதைகளாய் உருவாக்க, கல்வி முறையில் மாற்றம் கட்டாயம் தேவை.

– ரிஃபானா காதர்