கோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!

dr-kafeel-ahmed-BDR-Horakhpurத்தரப் பிரதேச மாநிலம்,  கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும், நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள உ.பி அரசு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்ததை மறுத்து வருகிறது.

கஃபீல் கான்
இந்நிலையில், அங்குக் குழந்தைகள் நலப்பிரிவு நோடல் ஆஃபிஸர், மருத்துவர் கஃபீல் கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். தனது நண்பரின் க்ளீனிக்கில் இருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு வரவழைத்த கான், வெளியில் இருந்தும் ரூ. 10,000 கொடுத்து 9 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார்.

இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர் கஃபீல், நோடல் ஆஃபிஸர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக பூப்பேந்திர ஷர்மா என்பவர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், கஃபீல் நீக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி மக்கள் மனத்தில் இடம் பிடித்த மருத்துவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

oOo

தொல். திருமா“கோரக்பூர் குழந்தைகள் இறப்புச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் அம்மாநில அரசின் நிதிநிலையில் ஒதுக்கப்பட்டுவந்த நிதியின் அளவைக் குறைத்துவிட்டார்.

அவருக்கு முன் ஆட்சி நடத்திய அகிலேஷ் யாதவ் 2016-ம் ஆண்டுக்கான நிதிநிலையில்  ஒதுக்கியிருந்த தொகையைவிட 36 கோடி ரூபாய் குறைவாகவே சுகாதாரத்துக்கு ஆதித்யநாத் ஒதுக்கியுள்ளார். மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைக் குறைத்துவிட்டு பசு பாதுகாப்புக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். பசுவைக் காப்பதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடாவது சிசுவைக் காப்பாற்றுவதில் அவர் காட்டியிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காது.

நன்றி : விகடன்.காம்