சிந்துநதிக் கரையினிலே…! – ஒரு புதிய வாசிப்பனுபவம்

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தபோது அதே போல முஸ்லிம்களின் வரலாற்றையும் நாவலாக அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் யாராவது எழுதியிருக்கலாமே என்று எனக்குத் தோன்றியிருக்கிறது.

ராஜராஜ சோழன் தனக்கு உரிமையான அரச பதவியைப் பெருந்தன்மையுடன் துறந்த வரலாற்றுடன் பல்வேறு இடங்களில் கிடைக்கப் பெற்ற செப்பேடுகள், சுவடிகள், கல்வெட்டுகளை அடிப்படையாக வைத்து அமரர் கல்கி அவர்களின் அபார வர்ணனையிலும் புனைவுகளிலும் உருவான பொன்னியின் செல்வனைப் போலவே,   தனது பதின்ம வயதை நிறைவு செய்யும் முன்னதாகவே இந்தியாவின் பெரும்பகுதியை நிர்வகித்த வீரம், நிர்வாகத் திறமை, இறைநம்பிக்கை இவற்றை ஒருங்கே கொண்டிருந்த முதல் முஸ்லிம் இளம் தளபதி முகமது பின் காசிம் பற்றிய வரலாற்றை, சீரிய முறையில் நாவல் வடிவில் சர் எல்லியட், ஜான் டௌசன் என்ற ஆங்கிலேய சரித்திரவியலாளர்கள் இருவர் எழுதிய “The History of India as told by its own Historians “, “The Cambridge History of India ”  என்ற சரித்திர புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சிந்துநதிக்கரையினிலே’ எனும் வரலாற்று நாவலை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர் ‘ஹசன்’ (ஸய்யித் முஹம்மது) அவர்கள்.

கல்கியால் உந்தப்பட்டு எழுத ஆரம்பித்ததாலோ என்னவோ வர்ணனைகளும், சரித்திர காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதிலும் கல்கியின் பாணி வெளிப்பட்டுள்ளது. நான் படிக்கும்போது கதாபாத்திரங்களைப் பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களோடு இயல்பாகவே பொருத்திப் பார்த்தது உள்ளம்.

முகமது இப்னு காசிம் வீரதீரச் செயல்கள் செய்தபோது வந்தியத்தேவனையும், இறுதியில் செய்த தியாகம் பட்டத்தைத் துறந்த ராஜராஜனையும் கண்முன் நிறுத்தியது. அப்படியே பத்மினி-குந்தவை, யோகினி மாதா- ஊமைக்கிழவி, சல்மா-பூங்கோதை, காலித், ஜூபைர் – ஆதித்த கரிகாலன், உதயவீரன் – நந்தினி என்று கதாபாத்திரங்களை நான் என்னளவில் பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.

முஸ்லிம்களின் இந்தியப் படையெடுப்பு(உண்மையில் அது படையெடுப்புதானா என்பதே இங்குக் கேள்விதான்) நாடு பிடிக்க நடந்ததாகவும், முகமது பின் காசிம் கொடுங்கோலனாகவும், சென்ற இடங்களில் எல்லாம் இரத்த ஆறு ஓட்டியதாகவுமே வரலாறுகள் திரிக்கப்பட்டுள்ளன. நமது பிள்ளைகளும்கூட அந்த வரலாற்றைத் தான் படித்து வளர்கின்றனர். இதே போலத்தான் முகலாயர்களுடைய ஆட்சி பற்றியும் தப்பான கற்பிதங்கள் இங்குப் பரப்பப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் தளபதிகள் மிகவும் கண்ணியமான முறையில் ஆட்சி நிர்வாகம் செய்து தங்கள் தூய்மையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மனங்களை வென்றெடுத்தனர் என்பதுடன் கட்டாயப்படுத்தி யாரையும் மதம் மாற்றவில்லை; அவர்களுக்கு அவர்களது வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டன என்ற உண்மைகளை ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் பலரும்  தொகுத்துள்ளனர். அவை இன்றும் பல்வேறு நூலகங்களில் காணக்கிடைக்கின்றன.

குறிப்பாக The History of India as told by its own Historians புத்தகத்தில் முகமது இப்னு காசிமின் ஆட்சிமுறையாலும் நடவடிக்கையாலும் கவரப்பட்டுத் தங்கள் வழக்கப்படி அவருக்கும் சிலை செய்து வழிபட முற்பட்டதை பதிவு செய்துள்ளனர் ஆசிரியர்கள்.

எழுத்தாளர் சாண்டில்யனின் முகவுரை இந்த நாவலுக்கு மகுடம் வைத்தாற்போல உள்ளது.

இந்தியாவைக் கட்டமைத்ததில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் பங்குகளை அழிக்க வரலாற்றையே திரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இன்றைய சூழலில் சிந்து நதிக் கரையினிலே போன்ற சரித்திர நாவல்களை நமது அடுத்த சந்ததியினருக்கு பயிற்றுவிப்பதன் மூலம் உண்மையான வரலாறுகளையும், இந்த தேசத்தில் நமக்கிருக்கும் உரிமையையும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த இயலும்.

தனது சொந்த வரலாற்றை அறியாதவன் தானும் அழிந்து தன்னைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடுவான். வரலாறு தெரியாத சமுதாயம் வரலாறு படைக்க முடியாது.  

– அபுல் ஹசன்
9597739200