கதிராமங்கலம் – ஒரு மாணவரின் களப் பார்வை!

Share this:

றத்தாழ எட்டு கோடியை எட்டுகின்ற தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி அயல்நாட்டவரைகூட வியப்படையச் செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் ஒரு மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

சூழலியலில் மட்டுமன்றி இயற்கை வளங்களில் இம்மாநிலம் குறைவைத்ததே இல்லை. விவசாயம் ஒன்றையே தன் மக்களுக்குத் தொழிலாகக் கற்றுக்கொடுத்து, பொருள் வளத்திலும் தலைநிமர்ந்து நிற்கிறது.

தனி ஒரு மாவட்டமாக மாநிலத்தின் 40 சதவீதம் நெல் சாகுபடியைக் கொண்டு தன் வளத்தைப் பறைசாற்றும் ‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் தஞ்சை எனும் தஞ்சாவூர், குளிர்ந்த இயற்கை வளங்களைக் கொண்டதாலேயே இப்பெயரைப் பெற்றது எனும் செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.

தமிழனின் கலைத்திறனை எடுத்துரைக்கும் தஞ்சை பெரியகோயிலின் கட்டட அமைப்பு, வீரத்தையும் ஆட்சியமைப்பையும் சொல்லும் சோழ மன்னர்களின் நிர்வாகம், நீர் வளத்தைப் பறைசாற்றும் காவிரி ஆறு, காணும் இடமெல்லாம் பசுமையான விவசாய நிலங்கள் என, தஞ்சையின் பெருமை நீண்டது.

ஆனால் இக்கட்டுரை பெருமையைக் கூற அல்ல; மாறாக, இப்போது நிலவும் வளங்களின் வறுமையைக் கூறுவதாகும்.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள காவிரி ஆற்றுப்படுகையில் சுமார் 1500 – 2000 அடிக்குக் கீழ் புதைந்து கிடக்கும் நிலக்கரியைக் கண்டறிந்த ONGC நிறுவனம், 2000 ஆவது ஆண்டிலிருந்தே இத்திட்டத்திற்கான ஒப்புதலை, தனியாருக்குத் தாரைவார்த்தது. ஆனால் நிலக்கரிக்கு மேல்தட்டில் உருவாகியுள்ள மீத்தேன் வாயுவை அகற்றாமல் நிலக்கரி எடுப்பது சாத்தியம் இல்லை என்பதால் மீத்தேன் திட்டத்தையும் செயல்படுத்தியது. இந்த மீத்தேன் வெளியேற்றும் திட்டத்தால் வளங்களின் நிறம் மாறும் என்பதால் அறியாமையில் இருந்த மக்களைத் தமது தொடர் பிரச்சாரத்தால் போராட்ட விழிப்புணர்வுக்குத் தூண்டினார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்.

இருப்பினும் பண ஆசை காட்டி, விவசாய நிலங்களை வாங்கித் தங்களின் குழாய்களை 2003ஆம் ஆண்டு முதலே பதிக்க துவங்கி விட்டது ONGC. இதற்கான ஒப்புதலை 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு கிரேட் ஈஸ்டேர்ன் கார்ப்பரேஷன் எனும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது. மன்னார்குடியில் 1500 – 1650 அடிக்கு ஆழத்தில் நிலக்கரிப் படுகை உள்ளது. அப்பகுதியில் 30 மீத்தேன் கிணறுகளும் 50 ஆழ்துளைக் குழாய்களும் அமைக்க ONGC திட்டமிட்டது. இதற்குத் தொடர் எதிர்ப்பு நிலவியதால் அன்றைய ஆளும் கட்சி 2013இல் தடை விதித்து ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் இதுவரை எந்த அறிக்கையும் அந்த ஆய்வுக் குழுவால் தாக்கல் செய்யப்படவில்லை.

மீத்தேன் (உருவாக்கம்)
பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக பூமிக்கு அடியில் புதைந்த இயற்கை வளங்கள், சில சுழற்சிகளின் காரணமாக நிலக்கரி போன்ற இயற்கை கணிம வளங்களாக உருவாகின்றன. நிலக்கரி உருவாவதால் வெளியாகும் வாயு தான் மீத்தேன் எனப்படும் இயற்கை வாயு CH4. அவை வெளிவர முடியாமல் பாறைகளுக்கு இடுக்கில் சிக்கிக்கொள்ளும். அதை வெளியேற்றவே இத்திட்டம்.

ஆழ்துளைக் குழாய்கள் மூலம் பூமிக்கு அடியில் நீரை அதிக அழுத்தத்தில் செலுத்தும் பொழுது பாறைகளில் வெடிப்பு ஏற்பட்டு அதற்கேற்ற குழாய்கள் வழியாக மீத்தேன் வெளியாகும். அப்படி வெளியாகும்போது அதிக வெப்பத்தின் காரணமாகக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு சுற்று வட்டாரச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாய நிலங்கள் பாலைவனங்களாக மாறும் அபாயம் ஏற்படும். குடிநீர் தரமற்றுப் போகும். காற்று மாசுபாடும் ஏற்படும். இதனால் மனிதன் வாழ்வாதாரத்தை இழந்து போவான்.

{youtube}p2BFXherg_s{/youtube}

போராட்டத்தின் நோக்கம்
தஞ்சை மாவட்டத்தில் சுமார் 40 அடிக்குக் கீழாகவே தூய்மையான நிலத்தடி நீர்வளம் உள்ளது. தற்போது இத்திட்டத்தால் நிலத்தடி நீர் வெளியேற்றப்படும். நிலத்தடிநீர் 500 அடிக்குக் கீழ் துளையிட்டாலும் எட்டமுடியாமல் போகும். தற்போது கதிராமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் எண்ணெய் கலப்புடன் இருப்பதைக் காண முடிகிறது. இதற்கான காரணம் கடந்த ஜூன் 30 ம் தேதி ஏற்பட்ட குழாய் வெடிப்பு என்றே ONGCயைத் தவிர்த்த மற்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மீத்தேன் குழாய்கள் விளைநிலங்களுக்கு அடியில் செல்வதால் மண்ணின் தன்மை சீரழிந்து தஞ்சை மாவட்டம் விவசாயம் செய்வதற்கான ஏற்ற சூழலை இழந்து போகும். “பேரழிவுக்குத் தள்ளும் இப்படியான திட்டம் தமிழகத்திற்குத் தேவையில்லை” என்ற கோஷங்களுடன் ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நெடுவாசலில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் மனநிலை
ஆசைக்குப் பணியாதவன் மனிதனே அல்ல. அதுபோல மீத்தேனின் விளைவுகள் தெரியாமல் பணத்தின் மீதான மோகத்தில் மக்கள் விளைநிலங்களைப் பறிகொடுத்தனர். ஆனால் சில ஆர்வலர்களின் விழிப்பூட்டலால் விளைவை உணர்ந்த மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். தற்போது வாயுக்களின் மூலமாக ஏற்பட்டுள்ள மாசுபாட்டின் காரணமாக மக்களுக்குத் தொற்று நோய்கள் ஏற்பட்டதையும் நேரடிச் சந்திப்பின் மூலம் காணமுடிகிறது.

பாதிக்கப்பட்ட நிலங்களும் மக்களும்
விவசாயத்துக்கு வெடிஜூன் 30ஆம் தேதி ஏற்பட்ட மீத்தேன் குழாய் வெடிப்பின் காரணமாக அதைச் சுற்றியுள்ள நிலங்கள் அனைத்தும் பாதிப்படைந்து நிலங்களில் எண்ணெய்ப் படலங்கள் தென்படுவதைக் காண முடிகிறது. நிலத்தின் உரிமையாளர்கள் கூறும்போது, “இனிமேல் இதுபோன்ற நிகழ்வு நடக்காமலிருக்க வேண்டும், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஒப்பந்தப்படி நிவாரணம் வழங்க வேண்டும்” என்கின்றனர். மேலும் சிலர் கூறும் போது “ONGC நிறுவனம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மக்களிடையே தனக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்த, பணப் பட்டுவாடா செய்து வருகிறது. ஆனால் மக்கள் இந்த மீத்தேன் திட்டத்தை முற்றிலுமாகத் தஞ்சையிலிருந்து அகற்ற வேண்டும்” எனத் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர். வர்த்தக நோக்கோடு செயல்படும் முன்னர் வாழ்வியலைக் காப்பதே சாலச் சிறந்தது.

குடிநீரால் பதிக்கப்பட்ட சிறுவனின் நிலை
நிலத்தடி நீரைக் குடித்த அருவிழி கிராமத்தில் 7 வயது சிறுவன் ஒருவனுக்கு சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பெங்களூரில் உள்ள சில மருத்துவ ஆய்வாளர்களின் அறிக்கையின்படி, “பயன்படுத்திய குடிநீராலயே இந்த நிலை” எனச் சான்றளித்துள்ளனர். ஒரு குடிநீரின் PH அளவு 5.5 -7.5 -ஆக இருக்க வேண்டும். ஆனால் அந்த கிராமத்தில் PH 8 ஆக இருப்பதால் இன்னும் சில நாட்களில் குடிநீர் பயன்படுத்த இயலாததாக மாறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற பல்வேறு அபாயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மாற்று வழிகள்
இத்திட்டத்தைத் தடுப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும், புதிய தொழில்நுட்பதைப் பயன்படுத்தி மீத்தேன் எடுத்தால் தவறில்லை அல்லவா? என்று வினவியபோது, “வயல்வெளிகளில் இந்தக் குழாய்கள் செல்வதால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் அபாயகரமான விளைவுகள் அதிகம் ஏற்படும். மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களில்கூட மக்கள் வாழாத இடங்களில்தான் இது திட்டமிடப்பட்டுள்ளது” எனவும் மக்கள் கூறுகின்றனர்.

“இத்திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவும், விளைநிலங்களைப் பாலைவானமாகவும், நாட்டு மக்களை அகதிகளாகவும் மாற்றும் சோகமான நிலை ஏற்படும். தமிழர்களின் கலை வடிவங்கள் அனைத்தும் அழிந்து, சோறு போட்ட சோழனின் நாடு நாதியற்று நடுத்தெருவில் நிற்கும்” என மக்கள் தங்களது ஆதங்கத்தை கூறினர்.

அரசியல் சூழல்
அரசியல் கட்சிகள் குறித்த கேள்விகளை முன்வைத்தபோது, “நாட்டு மக்களின் நலன் கருதி கட்சிகள் செயல் படவேண்டும். எந்தக் கட்சியையும் தனியாகக் குறை சொல்ல எங்களுக்கு விருப்பமில்லை. எல்லோரும் மனத்தளவில் எங்களுக்கு ஆதரவுதான். ஆனால் பணத்திற்கு மடிந்தும், தமிழ் இனத்தை அழிக்கவும் முற்படும் சில மனநோயாளிகளை நாங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் இன்னும் தீவிரமாக செயல்பட்டால் எதிர்ப்புகளும் பெருகும்” என்றனர்.

மக்கள் விருப்பம்
விவசாயத்தை மட்டுமே தங்கள் உயிர்த் தொழிலாகக் கொண்டுள்ள தமிழகச் சூழலில் – குறிப்பாகக் காவிரிப் படுகையில், வளர்ச்சி என்ற மாய நோக்கில் தமிழகத்தைச் சோதனைக்கூடமாக மாற்றி, சோலைவனத்தைப் பாலைவனமாக மாற்றும் முயற்சி மிகவும் ஆபத்தானது. மீத்தேனை நிலத்தடியில் இருந்து எடுக்கும் முறையை விட, மாடு மற்றும் அழுகிப்போன கழிவுகளால் வெளியேறும் மீத்தேனை செயற்கையாக சேகரித்தால் அதிகப் பொருளீட்டமுடியும். எந்தவித உயர் தொழில்நுட்பமும் இல்லாத நிலையில் இத்திட்டத்தைத் செயல்படுத்துவது மிகவும் தவறு. “ஒருவேளை இது தமிழக மக்களைக் குறிவைத்துத் தாக்கும் இனப்போராக இருப்பின் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போலவே மாணவர்களின் அறவழிப் போராட்டம் தொடரும். மாணவர்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்” என்ற கோரிக்கையுடன் கதிராமங்கல விவசாயிகள் தங்களது ஆதங்கங்களை தெரிவித்துக் கொண்டனர்.

-ச . முஹம்மது சர்ஜுன்
ஆங்கில இலக்கிய இளங்கலை மாணவர்,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.