மாண்புமிகு மதச்சார்பின்மை!?

Share this:

மீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற மதவாதத்திற்கு எதிரான மாநாட்டில் மக்களவை உறுப்பினர் திரு.தம்பிதுரையால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அதற்குப் பிறகு “ஆஹா .. கிடைத்துவிட்டார் மதச்சார்பின்மையின் நம்பிக்கை நட்சத்திரம்!” என்கிற ரேஞ்சுக்கு பலர் பேச ஆரம்பித்து விட்டனர். மக்களவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில் நமது முதல்வரின் மதச்சார்பின்மை குறித்து மீள்பார்வை செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது.

அது 1996 என்று நினைக்கின்றேன். தமிழகத்தின் இஸ்லாமிய அமைப்பு ஒன்று நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயலலிதா, இனிமேல் மதவாத பாஜகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன் என்று சூளுரைத்தார். ஆனால் சில நாட்களிலேயே அவரது சூளுரைக் காலம் எக்ஸ்பைரி ஆகி, 1998 பாராளுமன்ற தேர்த்லில் பாஜக ஆட்சிக்கு வர உதவினார். ஆனால் 13 நாட்களில் தான் யார் என்பதை நிரூபித்து அந்த ஆட்சி கவிழவும் துணைபுரிந்தார். எந்த முஸ்லிம் அமைப்பிடம் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டாரோ அதே அமைப்பு மீண்டும் அவருடன் கூட்டணி வைத்தது தனிக்கதை.

2001இல் ஆட்சிக்கு வந்தவுடன் தனது முகமூடியினை பகிரங்கமாக கழற்றியெறிந்து, சிறுபான்மையினரைக் குறிவைத்து மதமாற்ற தடைச் சட்டம், ஆடு, கோழி பலியிடத் தடை என்று அடுக்கடுக்காக ஆப்பு வைத்தார். அதோடு நில்லாமல் 2004 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கினார். ஆனால் ஹெச் ரேஷன் கார்டு, எஸ்மா சட்டம் என்று வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் 40 தொகுதிகளிலும் மதச்சார்பின்மையை மண்ணைக் கவ்வச் செய்தனர்.

குஜராத் கலவரம் குறித்து மறந்தும் கூட வாய் திறக்காத நமது மதச்சார்பின்மை, முஸ்லிம்களின் பிணங்களின் மீது ராஜபாட்டை நடத்தி இரண்டாவது முறையாக நரபலி “நாய்”கன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போது அரசு செலவில் தனி ஹெலிகாப்டரில் நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்ததை நாடறியும். அதற்கு நன்றிக்கடனாக 2011இல் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த போது நேரில் வந்து வாழ்த்திச் சென்றார் நவீன நீரோ மன்னன்! சும்மா இருப்பாரா நமது மதச்சார்பின்மை? 3ஆவது முறை பதவியேற்ற போதும் நேரில் போய் வாழ்த்திவிட்டு வந்தார். என்னே ஒரு சகோதர பாசம்?! ஆனால் இவர்களது இந்த சகோதர பாசம் எங்கே, எப்படி ஏற்பட்டது? என்று இதுவரை யாரும் ஆராய முற்படவில்லை. நாமும் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

சமீபத்தில் சேலத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், யாருமே எதிர்பாராத வண்ணம் முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தி, வேகமாக கைது அரங்கேற்றத்தை நடத்திய கையோடு, அந்தக் காவலர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டு விழாவும் நடத்தி பாஜகவினை திருப்திப்படுத்திய நமது முதல்வரின் மதச்சார்பின்மையை என்னவென்று சொல்ல?!

சரி முஸ்லிம்களிடம் நமது முதல்வர் நடந்து கொண்டது இருக்கட்டும். மற்றவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதனையும் பார்ப்போம். எம்ஜிஆர் பாதுகாத்ததாலோ, என்னவோ, விடுதலைப் புலிகளின் மீது காங்கிரஸை விட நமது முதல்வருக்கு வெறுப்பு அதிகம். தனது ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளைப் பற்றி யார் ஆதரவாகப் பேசினாலும் அவர்கள் மீது, பொடா சட்டத்தைப் பாயவிட்டு அழகு பார்த்தார். வைகோ ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடியதை மறந்து அவர் வேண்டுமானால் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம். அவர் கம்பி எண்ணிக் கதறியதை வேடிக்கை பார்த்த நம்மால் மறக்க முடியாது.

போர் என்று நடந்தால் இருபுறமும் மக்கள் மடிவது தவிர்க்க முடியாதது என்று ”சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?”  வடிவேல் ரேஞ்சுக்கு பேசியவர் நமது முதல்வர். ஆனால் தற்போதைய ஆட்சிக்காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்ற தீர்மானம், கடிதம் என்று கலைஞர் ஃபார்முலாவைக் கையாண்டு தனது புலித்தோலை மறைக்க முயன்றாலும் பாவம் சனி முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வடிவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது.

கலைஞர் ஈழத்தமிழர் விவகாரத்தில் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடித்த பழ.நெடுமாறன் போன்றோர் இப்போது கம்பிக்கு பின்னால் வாய் திறக்க முடியாமல் அமுங்கிக் கிடக்கின்றனர். மீறி ஏதேனும் பேசினால் கருத்து சுதந்திரத்தின் முதுகெலும்பு உடைக்கப்படும் என்பதனை கமல், விஜய் என்று அவர்களின் முன்னால்  வாழும் உதாரணங்கள் மூலம் அறிந்தே உள்ளனர்.

இப்போதும் “நாளை நமதே! நாற்பதும் நமதே” என்று சூளுரைத்து பாராளுமன்ற தேர்தல் களத்தில் குதித்துள்ளார் நமது மாண்புமிகு மதச்சார்பின்மை. அப்படி ஏதேனும் நடந்து விட்டால் தன்னைப் பிரதமர் நாற்காலியில் அமர வைக்க வேண்டுமென்று அழுது அடம்பிடிப்பார். அல்லது அதில் பாதியாவது கிடைத்து விட்டாலும் தனது அன்பு சகோதரனை பிரதமர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்க்க தனது எம்பிக்களை பாஜகவிடம் அடகு வைத்து விடுவார் என்பது தெள்ளிடை நீர். இதனை அவரை ஊன்றி கவனித்தவர்கள் அனைவரும் நன்கு அறிவர். ஆதலால் ஒரே ஒரு அறிக்கையினை வைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை எடை போட்டுவிட வேண்டாம் என்பதே நமது அவா. இன்னும் எம்ஜிஆருக்காக அதிமுகவிற்கு வாக்களிப்பவர்கள் தயவு செய்து சிந்திக்க வேண்டும்.

– அபுல் ஹஸன் ராஜா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.