குஜராத் மாநிலத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிப்புச் சம்பவம், பிறகு அதையொட்டிய மதவெறி வன்முறைகளின்போது மூத்த அதிகாரியாகப் பணியாற்றியபோது கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்தவற்றையும் நூலில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரமும் காவல் துறையும் சுயலாபத்துக்காக ஆட்சியாளர்களின் மதச்சார்பு நோக்கங்களுக்கு இரையானதைத் தெளிவு படுத்தியிருக்கிறார். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டதையும் அப்பாவிகள் அரசிடம் உதவி கேட்டுக் கதறியும் ஆட்சியாளர்கள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டதையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மதக் கலவரங்கள் நடந்தால் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதையும், கலவரக்காரர்களை ஒடுக்காமல் பாராமுகமாக இருக்க அறிவுறுத்தப்பட்டதையும் நினைவுகூர்ந்திருக்கிறார். கலவரம் மட்டுமல்லாமல் கொள்ளை, சூறையிடல், போலி என்கவுன்டர்கள் என்று எல்லாவற்றின்போதும் சொந்த லாபத்துக்காக மூத்த அதிகாரிகள் – அதில் சிலர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் – ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக நடந்ததை மனம் நோகும் வகையில் பதிவுசெய்திருக்கிறார். இனியொரு கலவரம் நிகழ்ந்தால், அரசு அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பல பரிந்துரைகளை அளித்திருக்கிறார். வகுப்புக் கலவரங்கள் ஒரேயொரு கட்சிக்குத்தான் என்றில்லை, பல கட்சிகளுக்கும் அரசியல் ஆதாயம் தருபவைதான். மக்களும் நேர்மையான அதிகாரிகளும் கைகோத்தால் இவற்றைத் தடுத்து விடலாம். கனத்த இதயத்துடன் படிக்க வேண்டிய புத்தகம்.
நூலாசிரியர் : ஆர்.பி. ஸ்ரீகுமார், ஐபிஎஸ்., ஓய்வு.
நன்றி : சாரி – தமிழ் தி இந்து
oOo
குஜராத் திரைக்குப் பின்னால்,
ஆர்.பி. ஸ்ரீகுமார், ஐபிஎஸ்., ஓய்வு.
தமிழில்: ச.வீரமணி,
தஞ்சை ரமேஷ்,
பாரதி புத்தகாலயம்,
சென்னை-18, 044-24332924. பக்கங்கள்-238,
விலை ரூ.190.