நீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி!

மிழகத்தில் வெற்றிடமாக உள்ள 1,111 ஆசிரியர்களுக்கான பணியிடங்களுள் 1-5 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த 29.4.2017 தேதியிலும் 6-10 வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30.4.2017தேதியிலும் ஆசிரியர் தகுதிக்கான தேர்வு (TEACHER ELIGIBILITY TEST) 1,861 தேர்வு மையங்களில் நடந்தேறியது.

TET தேர்வெழுத விண்ணப்பம் செய்வதற்கு இறுதி நாளான 23.3.2017 வரை இடைநிலை ஆசிரியர் தேர்வுக்காக 2,37,293 விண்ணப்பங்களும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காக 5,02,964 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.

தேர்வின் முடிவுகள் வெளிவந்தபோது 4.93 இலட்சம் பட்டதாரிகள் 90/150 மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர். 150க்கு 89 மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரத்தைச் சேர்ந்த கே.வீரமணி என்னும் பி.எட். பட்டதாரி, ‘வந்தே மாதரம் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?’ எனும் கேள்விக்குத் தாம் எழுதிய சரியான விடையான ‘வங்க மொழியில்’ என்பதைத் தவறு என்பதாகத் தேர்வாணையம் மறுத்து, தமக்கு ஒரு மதிப்பெண்ணைக் குறைத்துவிட்டதால் தேர்வாணையத்தின் பிழையைச் சரி செய்யும்வரை ஆசிரியர் பணிக்கான ஓர் இடத்தை நிரப்பக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விபரம்:

அண்மையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன். அதில், ‘வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. கேள்விக்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என்ற 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. நான் இந்த கேள்விக்கு சரியான பதிலாக வங்கமொழி என்று குறிப்பிட்டேன். ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த பதில் தவறு என்று கூறி எனக்கு ஒரு மதிப்பெண் வழங்க மறுத்துவிட்டது.

இந்தத் தேர்வில் நான் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வில் வெற்றி பெற 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு நான் சரியான பதில் எழுதியுள்ளதால் அதற்கு ஒரு மதிப்பெண் தந்தால் நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பேன். மேலும், பி.எட். படிப்புக்கான அனைத்து பாடப் புத்தகங்களிலும் வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கீ ஆன்சரில் மட்டும் வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருதம் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நான் வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டது என்று எழுதிய பதிலுக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

கடந்த 7.7.2017 அன்று இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது. அரசு வழக்கறிஞர், ‘சமஸ்கிருதத்தில் தான் வந்தே மாதரம் முதலில் எழுதப்பட்டது. அதன்பிறகு தான் வங்க மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது’ என்று வாதிட்டார்.

இதனால் குழப்பமடைந்த நீதிபதிகள், ‘வந்தே மாதரம் பாடல் முதலில் வங்க மொழியில் இயற்றப்பட்டதா அல்லது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா என 11.7.2017க்குள் பதிலளிக்கும்படி’ தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் 13.7.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, “வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சம்ஸ்கிருதப் பாடல்” என்று பதிலளித்தார். மேலும், “பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் வந்தே மாதரம் பாடல் முதலில் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது. பின்னர், அவரே அதை வங்க மொழியில் மொழிமாற்றம் செய்தார்” என்றும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது? என்ற கேள்விக்கு மார்க் வழங்குவது பற்றிய உத்தரவு 17.7.2017 தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி முரளிதரன் தெரிவித்தார்.

இதற்கிடையில் வழக்கறிஞர் குழுவொன்று மேற்குவங்காளம் சென்று இது குறித்த தகவல்களைச் சேகரித்தது. வந்தே மாதரம் பாடலில் சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் அது வங்காள மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது என்று அக்குழு உறுதி செய்தது.

நீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி எனும் தலைப்புக் கருவினுள் புகுமுன் இப்போது சற்றே நாம் நிதானித்து, TET தேர்வாணையத்தின் பொது அறிவையும் மொழிப் பற்றையும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி அவர்களின் சம்ஸ்கிருத பக்தியையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது.

“வந்தே மாதரம் என்போம்” எனும் பாரதியாரின் பாடலின் முதல் வரியில் ஒன்றேயொன்றுதான தமிழ்ச் சொல்லாகும். “வந்தே மாதரம் என்போம்” எனும் பாரதியாரின் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது? என்று ஒரு கேள்வியை இவர்களுக்கு முன் வைத்தால் “சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு தமிழில் பாடப்பட்டது” என்று விடையளித்துத் தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிக்காட்டக் கூடும்.

இனி, தலைப்புக்கு வருவோம்.

வந்தே மாதரம் என்பது இந்திய தேசபக்தர் ஒருவரால் இயற்றப்பட்ட பாடலன்று. மாறாக, அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வால் பிடித்து விசுவாசமாக டெபுடி மாஜிஸ்ரேட்டாக காலனிய சேவை செய்தவரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டவரும் வங்காளிப் பார்ப்பனருமான பக்கிம் சந்தர் சட்டர்ஜி என்பவரால் சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் இயற்றப்பட்டது.

பி.எட். பட்டதாரியும் வழக்கின் மனுதாரருமான வீரமணி அவர்களின் கோரிக்கை மிக எளிமையானது: “நான் சரியாக எழுதிய விடைக்கு எனக்கு மதிப்பெண் அளிக்க உத்தரவிட வேண்டும்” என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சட்டம் படித்த நீதிபதிகளின் தீர்ப்பு என்னவாக இருக்கலாம்?
மனுதாரர் எழுதிய விடை பிழையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வாணையம் மனுதாரருக்கு மதிப்பெண் அளிக்கக் கூடாது. அல்லது
தேர்வாணையம் தேர்ந்தெடுத்த விடையான சம்ஸ்கிருதம் என்பது பிழை என்றும் மனுதாரர் எழுதிய விடையான வங்கமொழி என்பது சரியான விடை என்றும் நிரூபிக்கப்பட்டதால் மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணியமர்த்த உத்தரவிடுகின்றேன் என்று இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும்.

கூடுதலாக,
தேர்வாணையக் குழுவினருக்கும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் வந்தே மாதரத்தைப் பற்றிய போதிய அறிவில்லாத காரணத்தால் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாள் காலையிலும் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடவேண்டும் என ஆலோசனை வழங்குகின்றேன் என்றாவது இருக்கலாம்.

ஆனால், அன்றைய நாளிதழ்களில் நாம் வாசித்த தலைப்பும் தீர்ப்பும் என்னவாக இருந்தன?

  • அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani
  • வந்தே மாதரம் பாடலை கல்வி நிலையங்களில் கட்டாயம் பாடவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் – தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது – BBC Tamil

மனுதாரர் வீரமணியின் இந்த வழக்கு ‘வந்தே மாதரம் பாடக்கூடாது’ என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கல்ல என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

வழக்குக்குத் தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதிகளின் அதிகப் பிரசிங்கித் தனமும் முரண்பாடுகளும் நிறைந்த தீர்ப்பைப் படித்ததில், வந்தே மாதரத்தில் அப்படி என்னதான் தேசபக்தி பொதிந்து கிடக்கிறது என்ற ஆவல் ஏற்படுவது இயல்பாகும்.

பக்கிம் சந்தர் சட்டர்ஜி, வங்க நவாபுக்கு எதிராக வைணவ சாமியார்கள் நடத்திய கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு 1875இல் எழுதிய ஆனந்த மடம் என்ற நாவலில் அதன் கதாநாயகன் பவானந்தன் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடல்தான் “வந்தே மாதரம்” என்று தொடங்குகின்றது.

பிரிட்டிஷ் அடிவருடியான பக்கிம் சந்தர், “ஆங்கிலேயர் ஆட்சி ஆரோக்கியமானதும், அவசியமானதுமாகும்” என்று ஆனந்த மடம் நாவலில் குறிப்பிடுகின்றார். பிரிட்டிஷ் அதிகாரிகள், தங்கள் தலைமையகத்துக்கு அனுப்பிய தகவல்களுள்,”வந்தே மாதரம் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பாடல்” என்ற தகவலும் ஒன்று என்பதாக வரலாற்றாசிரியர் டி. ஞானைய்யா குறிப்பிடுகின்றார்.

நிற்க.

(1)    தீவிர விசாரணைக்குப் பின்னர் கொலைகாரன் என்று தெளிவாக நிரூபிக்கப்பட்ட வன்சாரா IPS, சொரப்தீன் என்கவுண்ட்டர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
(2)    கடந்த 28.9.2015 அன்று உ.பி.யின் தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லாக் என்ற 50 வயது முதியவரை, மாட்டுக்கறி வைத்திருந்ததாகப் பொய்யாகப் புனைந்து காவிக்கும்பல் அடித்தே கொன்றது. அக்கும்பலைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். 19இல் நான்கு பேர் தவிர அனைவரும் தற்போது பிணையில் வெளியே வந்துவிட்டனர். குறிப்பாக, இக்கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியும் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் சஞ்செய் ராணாவின் புதல்வருமான விஷால் ராணா என்பவரை அலஹாபாத் உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் இவர்களுக்கெல்லாம் எதிராக இன்னும் குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை.

அண்மையில் வெளிவந்த நீதிமன்றங்களின் மேற்காணும் இரு தீர்ப்புகளோடு ஆசிரியர் வீரமணி வழக்கில் நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்துள்ள 25.7.2017 கட்டாய வந்தே மாதரத் தீர்ப்பையும் இணைத்துப் பார்த்தால் பெரும்பான்மை மக்களுக்கான கூட்டு மனசாட்சி ஓயாமல் உறங்காமல் வேலை செய்வது தெளிவாகப் புரியும்.

oOo

பிஜோ எம்மானுவேல் எதிர் கேரள மாநிலம் (Bijoe Emmanuel V. State Of Kerala, வழக்கு எண்: 1987 AIR (SC) 748)) இந்திய உச்ச நீதி மன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இதில் உச்ச நீதிமன்றம், கேரளாவில் யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இந்திய தேசிய கீதம் பாட மறுத்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு கேரள அரசுக்கும் பள்ளிக்கும் உத்தரவிட்டது.

வழக்கு விவரம்: யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மதவழக்கப்படி எந்த தேசப் பண்ணையும் பாட மாட்டார்கள். தங்கள் ஆண்டவரைத் தவிர வேறு எந்த மதச்சின்னத்திலும் ஈடுபாடு கொள்ளாதவர்கள். கேரளாவில் பிஜோ, பினு மோல், பிந்து எம்மானுவேல் ஆகிய மூன்று யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் இந்திய தேசியப் பண்ணைப் பாடாமல் இருந்தனர். 1985ல் இவ்விசயம் கேரள சட்டமன்ற உறுப்பினரால் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. இது சட்டத்துக்குப் புறம்பானது என்று அவர்கள், மாநில கல்வி அதிகாரியின் உத்தரவின்படி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதியரசர் கல்வி அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தார். 1987ல் கீழ்மட்ட நீதிமன்றங்களைக் கடந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அவ்வுத்திரவை மாற்றி, அம்மூன்று மாணவர்களை அந்தப் பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டது. பின்பு இரு நீதியரசர் கொண்ட நீதி பீடம் இதனை உறுதி செய்தது. தேசிய கீதத்தில் எந்த ஒரு மத உணர்விற்கும் எதிரான சொல்லோ கருத்தோ இல்லை என்பதே உயர் நீதிமன்றத்தின் கருத்து. எனவே, தேசிய கீதத்தைப் பாடுவது மதச்சுதந்திரத்திற்கு மாறானது என்னும் வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஆனால் உச்ச நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 51-அ-வின் மற்றும் தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971 படி குடிமக்கள் மீது தேசிய குறிக்கோட்கள், நிறுவனங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தின் மீது மதிப்பு விதிக்கப்பட்டிருந்தாலும், பள்ளியில் மற்ற மாணவர்களுடன் தேசிய கீதத்தை பாடாமலிருப்பது அவமதிப்புக்கு ஈடாகும் என்பது சரியல்ல, என்று கருத்து தெரிவித்தது:

பிரிவு 25 மக்களின் மதப்பற்றைக் குறித்து, சிறுபான்மை வகுப்பினர்களையும் இந்திய அமைப்பு சட்டதிற்குள்ளிணைப்பதே ஒரு உண்மையான ஜனநாயகத்தின் அடையாளமாகும். யெகோவாவின் சாட்சிகள் என்னும் பிரிவைச் சார்ந்தவர்களின் நடைமுறைகள் அபூர்வமாக தோன்றினாலும், அது நீதிமன்றத்திற்கு ஏற்கத்தக்கதல்லதாக தோன்றினாலும், அந்நடைமுறை தக்க மதத்தின் கடைப்பிடிப்பிற்கு அவசியமா என்பதே சச்சரவாகும். அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இல் உள்ளக் கட்டுப்பாட்டிற்குட்பட்டு, குடிமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற மதத்தினைக் பற்றிக்கொள்ளலாம். எனவே உண்மையாக தம்மதப்பற்றிற்குத் தடங்கலாய் விளங்கும் ‌போது அம்மாணவரை தேசிய கீதத்தைப் பாட வற்புறுத்துதல் இந்திய அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19(1)(அ) மற்றும் 25(1)-க்கும் மாறானது. எனவே அம்மாணவர்களை கொடியை வணங்கவும் தேசிய கீதத்தை பாடவும் வற்புறுத்துதல், அமைப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறானதாகும். ஆதலால் அம்மாணவர்களை அப்பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்மானித்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஒத்தி வைத்தது.

தேசிய கீதத்தைப் பாடச் சொல்லி நிர்பந்தம் அளிப்பது தனி மனித உரிமை மற்றும் மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கே நிர்பந்தம் இல்லை எனும் போது சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடலை வாரத்தில் ஒரு நாள் பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த, கூட்டு மனசாட்சித் தீர்ப்பன்றி வேறில்லை.