ஐமன் ஜவாஹிரியின் உட்டாலக்கடி கிரிகிரி அறைகூவல்!

Share this:

செப்டம்பர் மாதம் வந்தால் வசந்தக் காற்று வீசுகிறதோ இல்லையோ அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு, அல்காயிதா, தாலிபான் என்று உலக ஊடகங்கள் ஊளையிடத் தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது.

9/11-ஐ மையமாக வைத்து ஆப்கானிஸ்தானிலும் அதன் தொடர்ச்சியாகப் பாகிஸ்தானிலும் இராக்கிலும் அமெரிக்கா நடாத்திய கோரத் தாண்டவம் நினைவில் வந்து தொலைக்கிறதோ இல்லையோ, மக்கள் மறந்துபோன பின்லாடன், ஜவாஹிரி என்று அமெரிக்காவின் ரெடிமேட் முகமூடிகளும் அல்காயிதாவும் தூசுதட்டப்பட்டு பூச்சாண்டி காட்டப்படுகின்றன.

உலகின் எந்த மூலையிலாவது குண்டு வெடித்தாலோ சாம்பிரணி புகைந்தாலோ அல்காயிதாவே அதற்குக் காரணம் என்று அமெரிக்கா சொன்ன மறுவினாடியே அல்காயிதா அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஏதாவது விளங்காத தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடும். அமெரிக்காவின் ஏதாவது தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொறுப்பேற்றுக் கொண்ட செய்தியில் சொல்லப்பட்டிருக்கும். அமெரிக்காவுக்கும் வேறு வேலையில்லை; அல்காயிதாவுக்கும் வேறு வேலையில்லை என்று மக்கள் அடுத்த செய்தியில் கவனம் செலுத்தத் தொடங்குவர்.

உலக மக்களின் ஞாபக மறதியைப் பயன்படுத்தி அமெரிக்கா கமுக்கமாக ஏதாவதொரு நாட்டுடன் ஆயுத பேரத்தை முடித்த கையோடு, “அல்காயிதாவை முற்றிலும் ஒழிக்கும்வரை அமெரிக்கா ஓயாது, உறங்காது” என்றெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி தனது சட்டை பட்டனைப் பூட்டிக் கொண்டே செய்தியாளர்களிடம் தெரிவிப்பார். அவர்களும் தலைவிதியை நொந்து கொண்டு தத்தமது ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்தியை அனுப்புவார்கள்!

மீன் மார்க்கெட்டில் மாமூல் வசூலிக்கும் ஏரியா தாதாவுக்குக்கூட நாலு ஐந்து அல்லக்கைகள் இருப்பர். ஒரு ரிக்சாவிலோ அரசியல் செல்வாக்கிற்கேற்ப குவாலிஸ் காரிலோ முழுக்கையை மடக்கி விட்டுக் கொண்டு, கையில் கால் கிலோ தங்கச் செயினும் விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோன் சகிதம் ஏரியா ரவுடி திரிவார். ஆனால் அமெரிக்காவை குலைநடுங்கச் செய்யும் பாழாய் போன அல்காயிதாவுக்கு ஈமெயில் மட்டும்தான் இருக்கிறது! கேட்பவன் கேனையன் என்றால்…. என்னவோ என்று சொல்வார்களே அந்த பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது!

பின்லாடனை அமெரிக்க ராணுவம் கடந்த 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் போட்டுத் தள்ளியதாகவும், அவரது உடலை கடலில் வீசிவிட்டதாகவும் சொல்லி அல்காயிதாவுக்கு மூடுவிழா நடத்தி முடிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா மூடு வரும்போதெல்லாம் அல்காயிதாவுக்கு மீண்டும் திறப்பு விழா நடத்தப்படுகிறது. வழக்கம்போல் அமெரிக்காவை மிரட்டும் அல் காயிதாவின் நம்பர் # 2 (தற்போது #1?) ஜவாஹிரி, இந்த முறை இந்தியாவை மிரட்டியுள்ளார்! அதாவது அல்காயிதாவுக்கு இந்தியாவில் கிளை அமைத்து, இந்திய முஸ்லிம்களுக்காகப் பாடுபடப் போகிறாராம்!

தற்போதெல்லாம் பாரத ரத்னாவை யாருக்குக் கொடுக்கலாம என்ற விவாதங்கள் எழுந்து அடங்கும் நிலையில் மனுசன் பாரத ரத்னாவைக் குறி வைத்துத்தான் இவ்வாறு அறிவித்திருக்கிறாரோ என்னவோ? சாவர்க்கருக்கும், வாஜ்பாயிக்கும் பாரத ரத்னா கொடுக்க பரிந்துரைக்கப்படும் நிலையில் தமக்கும் யாராவது பரிந்துரைக்க மாட்டார்களா என்ற நப்பாசையும்கூட காரணமாக இருக்கலாம்.

அது கிடக்குது கழுதை!

அல்காயிதா என்ற இயக்கம் உண்மையில் இருக்கிறதா? என்ற கேள்வியை மீண்டும் கேட்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில், மேலே சொன்னபடி ரிக்சாவோ, குவாலிஸ் காரோ இல்லாமல் வெறும் ஈமெயிலை வைத்துக் கொண்டு வடிவேல் பாணியில் “நானும் ரவுடிதான்” என்பதுபோல் உள்ளது ஜவாஹிரியின் அறிவிப்பு.

இந்தியாவில் முஸ்லிம்களுக்காக நூற்றுக்கணக்கான இயக்கங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. சாண் ஏறினால் முழம் இழுக்கும் அளவுக்கு இவர்களில் ஒருவருக்கொருவர் அடுத்தவர் காலை வாரிக் கொண்டிருக்கும்போது அல்காயிதா இந்தியாவுக்குத் தேவையா? என்ற கேள்வியே இந்திய முஸ்லிம்களிடம் உள்ளது. இதை ஜவாஹிரிக்கு யாராவது தெரியப்படுதினால் நல்லது.

காலங்காலமாக முஸ்லிம்களின் ஆபத்பாந்தவனாகக் கருத்தப்பட்ட காங்கிரஸுக்கே அல்வா கொடுத்து, பிஜேபி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களில்கூட முஸ்லிம் அமைப்புகள் அரசியல் ரீதியாக எடுபடாமல் போயுள்ள நிலையில் அல்காயிதாவுக்கு இந்தியாவில் ஆள் கிடைப்பது கஷ்டம் ஜவாஹிரி அண்ணே!

ஐசிஸுக்காவது கறுப்பு டீ சர்ட் யூனிஃபார்ம் இருக்கு! அல்காயிதாவுக்கு அப்படி எதுவும் இல்லாத நிலையில், இந்தியாவில் கிளை அமைக்கும் திட்டம், ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவதற்குச் சமம்! கிளை அமைப்பதெல்லாம் கிடக்கட்டும், தலைமையகம் எங்கிருக்கிறது? என்பதை அறிவியுங்கள் அல் காயிதா அண்ணாச்சி!

– N. ஜமாலுத்தீன்  ­­ 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.